Pages

Friday, December 27, 2019

எஸ்.பி.ஐ., - ஏ.டி.எம்.,மில் பணம் எடுக்க ஓ.டி.பி., அவசியம்


வாடிக்கையாளர்கள், 10 ஆயிரம் ரூபாய்க்கும் மேல், ஏ.டி.எம்., இயந்திரத்தில் பணம் எடுக்க, ஓ.டி.பி., எனப்படும், ஒரு முறை பயன்படும் ரகசிய எண் முறை, ஜனவரி, 1 முதல், எஸ்.பி.ஐ., வங்கியில் அமலுக்கு வருகிறது.வங்கிகளின், தானியங்கி பண பரிவர்த்தனை மையமான, ஏ.டி.எம்., இயந்திரங்களில், 'ஸ்கிம்மர்' என்ற கருவி பொருத்தி, பணத்தை திருடும் சம்பவம், சமீப காலமாக அதிகரித்து வருகிறது. 

இது போன்ற மோசடிகளை தடுக்கும் விதமாக, அதிகபட்சம் பணம் எடுக்கும் வரம்பை, 40 ஆயிரம் ரூபாயில் இருந்து, 20 ஆயிரம் ரூபாயாக, எஸ்.பி.ஐ., என்ற, பாரத ஸ்டேட் வங்கி குறைத்தது. இந்நிலையில், 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல், ஏ.டி.எம்., இயந்திரத்தில் பணம் எடுக்க, ஒரு முறை ரகசிய எண் பயன்படுத்தும் முறையை, எஸ்.பி.ஐ., அறிமுகம் செய்கிறது.

இதுகுறித்து, எஸ்.பி.ஐ., வெளியிட்ட அறிவிப்பு:ஏ.டி.எம்., இயந்திரத்தில் நடக்கும், சட்ட விரோத பணப் பரிவர்த்தனையை குறைக்கும் விதமாக, 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் எடுப்பதற்கு, ஒரு முறை ரகசிய எண்ணை பயன்படுத்தும் திட்டத்தை, நாங்கள் அறிமுகம் செய்கிறோம். 

இரவு, 8:00 முதல் காலை, 8:00 மணி வரை, இந்த முறை அமலில் இருக்கும். இந்த ரகசிய எண், வாடிக்கையாளர்களின் பதிவு செய்யப்பட்ட, மொபைல் போன் எண்ணிற்கு வரும்.இது, சட்ட விரோத பணப் பரிவர்த்தனைகளில் இருந்து, ஏ.டி.எம்., வாடிக்கையாளர்களை பாதுகாக்கும். ஜன., 1 முதல், நாடு முழுவதும், இது செயல்பாட்டிற்கு வருகிறது. 
ஆனால், எஸ்.பி.ஐ., வாடிக்கையாளர்கள், இதர வங்கி ஏ.டி.எம்., இயந்திரத்தில் பணம் எடுத்தால், இந்த பாதுகாப்பு முறை பொருந்தாது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment