Pages

Saturday, July 22, 2017

பணி நிறைவு சான்று கட்டாயம் கடன் பெற வங்கிகள் நிபந்தனை


புதிதாக வீடு வாங்கும் போது, அது தொடர்பான ஆவணங்களை, வங்கிகள் அடமானமாக பெறுகின்றன. இதேபோல, சொத்து பத்திரங்களை பெற்றுக் கொண்டும், அடமான கடன் வழங்கப் படுகிறது. கட்டுமான நிலையில் உள்ள வீட்டை வாங்குவோருக்கு கடன் வழங்க ஒரு நடைமுறையும், பயன்பாட்டில் இருக்கும் வீட்டுக்கு அடமான கடன் வழங்க, வேறு நடைமுறையும் பின்பற்றப்படுகிறது.

அதாவது, கடன் கேட்போரிடம், அடையாள ஆவணங்கள், வருமான வரி ஆவணங்கள், முகவரி சான்று, வருவாய் சான்று, சொத்து தொடர்பான பத்திரங்கள், வில்லங்க சான்று, தாய் பத்திர நகல், திட்ட அனுமதி வரைபடம் போன்றவை பெறப்படும். இதன் அடிப்படையில், சொத்து மதிப்பீடு செய்யப்பட்டு, கடன் தொகை முடிவு செய்யப்படும். தற்போது, அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளுக்கு, அடமான கடன் கோருபவர்கள், பணி நிறைவு சான்றிதழை இணைக்க வேண்டும் என, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் கோருவது, சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து, தமிழக வீடுகள், அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவோர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர், பி.மணிசங்கர் கூறியதாவது:சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ., எல்லைக்குள், மூன்று தளங்களுக்கு மேற்பட்ட சிறப்பு கட்டடங்கள், அடுக்குமாடி கட்டடங்களுக்கு மட்டுமே கட்டுமானப் பணி நிறைவு சான்று வழங்கப்படுகிறது. பயன்பாட்டில் உள்ள வீடுகளுக்கு அடமான கடன் கோரி விண்ணப்பித்தால், முன்னணியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் அதிகாரிகள், கட்டட பணி நிறைவு சான்று கேட்டு நிர்பந்திக்கின்றனர்.

பணி நிறைவு சான்று வழங்கும் நடைமுறையே இல்லாத பகுதிகளில், வங்கிகள் இது போன்ற நிர்பந்தம் செய்வது சரியான நடைமுறை அல்ல; நிபந்தனைகளை தளர்த்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்

No comments:

Post a Comment