Pages

Friday, June 30, 2017

மத்திய அரசின் 7வது ஊதியக்குழு பரிந்துரைப்படி தமிழக அரசு ஊழியர்களின் ஊதிய மாற்று குழுவின் பதவிக்காலம் 3 மாதம் நீட்டிப்பு


மத்திய அரசின் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைத்துள்ள திருத்திய ஊதிய விகிதங்கள் குறித்து மத்திய அரசு எடுத்துள்ள முடிவுகளை தொடர்ந்து தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு ஊதிய விகிதங்களை மாற்றியமைப்பதற்கான பரிந்துரைகளை அளிக்க அலுவலர் குழு ஒன்றை முதல்வர் எடப்பாடி கடந்த பிப்ரவரி மாதம் 22ம் தேதி அறிவித்தார்.

அந்த குழுவில், நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர், உள்துறை முதன்மை செயலாளர், பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலாளர், பி.உமாநாத் உறுப்பினர் செயலாளர் ஆகியோர் இடம்பெற்று இருந்தனர். இந்த குழுவினர், மத்திய அரசின் ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைத்துள்ள திருத்திய ஊதிய விகிதங்கள் குறித்து மத்திய அரசு எடுத்துள்ள முடிவுகளை ஆராய்ந்து, அவற்றை தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் அலுவலர்களுக்கு ஊதிய விகிதங்களை மாற்றியமைப்பதற்கான பரிந்துரைகளை வழங்க ஜூன் 30ம் தேதிக்குள் (நேற்று) அரசுக்கு அளிக்கும்படி உத்தரவிடப்பட்டிருந்தது.

அதன்படி, அந்த குழுவினர் கடந்த மாதம், அங்கீகரிக்கப்பட்ட அலுவலர் மற்றும் ஏனைய சங்கங்கள் சந்தித்து ஆலோசனை நடத்தினர். ஆனால், திட்டமிட்டபடி தமிழக அரசுக்கு இந்த குழுவினர் நேற்று அறிக்கை அளிக்கவில்லை. இந்நிலையில், தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு ஊதிய விகிதங்களை மாற்றியமைப்பதற்கான பரிந்துரைகளை அளிக்க அலுவலர் குழுவுக்கு மேலும் 3 மாதம், அதாவது செப்டம்பர் 30ம் தேதி வரை கால அவகாசம் அளித்து தமிழக அரசின் நிதித்துறை செயலாளர் சண்முகம் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment