Pages

Friday, June 23, 2017

மருத்துவ படிப்புக்கான விண்ணப்பம் 27-ந் தேதி முதல் வினியோகம்


இந்தியா முழுவதும் இந்த ஆண்டு முதல் நீட் தேர்வு அடிப்படையில் தான் மருத்துவ கலந்தாய்வு நடைபெற வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்தது. தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக்கோரி சட்டசபையில் மசோதா நிறைவேற்றியும் மத்திய அரசு ஏற்கவில்லை. தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களே அதிகமானோர் நீட் தேர்வை எழுதினர். இதனால் நேற்று வெளியான நீட் தேர்வு முடிவில் பெரும்பாலான மாணவர்கள் தேவையான பயிற்சி பெற்ற பின்னரும் குறைவான மதிப்பெண்களே பெறமுடிந்தது.

தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் சுமார் 5,300 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு அகில இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி அளித்தால் தான் மாணவர்களை சேர்க்க முடியும். இந்த வருடம் நிகர்நிலை மருத்துவ பல்கலைக்கழகங்கள் உள்பட அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தான் மாணவர்களை சேர்க்க வேண்டும். இதுதொடர்பாக தலைமைச் செயலகத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள்.

சுகாதாரத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில் ‘வருகிற 27-ந் தேதி முதல் விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்படும். ஜூலை 17-ந் தேதி முதல் கலந்தாய்வு தொடங்கும். மாநில திட்ட கல்வியில் படித்த மாணவர்களுக்கு தனி ஒதுக்கீடும், சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.சி., உள்ளிட்ட வாரிய கல்விமுறையில் படித்தவர்களுக்கு தனி ஒதுக்கீடும் வழங்கப்படும். இதுகுறித்த முழு விவரமும் விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும்’ என்றார்.

No comments:

Post a Comment