Pages

Tuesday, November 15, 2016

தமிழகத்தில் நீட் தேர்வு நடக்கும் அமைச்சர் பாண்டியராஜன் அறிவிப்பு: மாணவர்கள் அதிர்ச்சி


தமிழகத்தில் அடுத்த ஆண்டு நீட் தேர்வு கட்டாயம் நடக்கும். அதற்காக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்போவதாக அமைச்சர் பாண்டியராஜன் கூறியதால் மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தமிழக பள்ளிக்கல்வி, இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பாண்டியராஜன் டெல்லியில் இளைஞர்நலத்துறை அமைச்சர்கள் அளவிலான மாநாட்டில் கலந்து கொண்டார்.

அங்கு நிருபர்களிடம் அவர் கூறுகையில், ‘அடுத்த ஆண்டு தமிழகத்தில் நீட் தேர்வு கட்டாயமாக நடக்கும். அதற்கு தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இப்போதே பயிற்சி அளிக்கப்போகிறோம்’ என்று கூறியுள்ளார். ஆனால் நீட் தேர்வை சட்டரீதியாக தமிழக அரசு எதிர்க்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக கல்வியாளர் ஒருவரை தொடர்புகொண்டு கேட்டபோது, ‘சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தின்கீழ் படிக்கும் மாணவர்களால் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாது. அதனால் உடனடியாக தமிழக அரசு சிபிஎஸ்இ பாடத்திட்டத்துக்கு நிகரான பாடத்திட்டத்தையும் அமல்படுத்த முடியாது.

இதனால் அடுத்த ஆண்டில் தமிழகத்தில் இருந்து டாக்டருக்கு சேரும் மாணவர்கள் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது. ஐஐடி போல் பிறமாநில மாணவர்கள் இங்கு வந்து படிக்க நேரிடும்’ என்றார். அமைச்சரின் அறிவிப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment