Pages

Thursday, November 10, 2016

அடுத்த ஆண்டும் பழைய 'சிலபஸ்' பிளஸ் 2 மாணவர்கள் ஏமாற்றம்


'நீட் தேர்வு கட்டாயம் என்ற நிலையில், பிளஸ் 2வுக்கு, அடுத்த ஆண்டும் புதிய பாடத்திட்டம் இல்லை' என, அமைச்சர் அறிவித்துள்ளதால், மாணவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். பிளஸ் 2 முடித்தவர்கள், எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்பில் சேர, 'நீட்' என்ற தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை எழுத வேண்டும்.

இத்தேர்வு, இந்த ஆண்டு முதல் அரசு மருத்துவக் கல்லுாரி இடங்களுக்கும் வரலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., நடத்தும், 'நீட்' தேர்வில், தமிழக மாணவர்கள் பங்கேற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் அமலில் உள்ள, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பாடத்திட்டம், நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையிலும், உயர்கல்வி நிறுவனங்களில், இன்ஜினியரிங் சேர்வதற்கான, ஜே.இ.இ., தேர்வை சந்திக்கும் வகையிலும் இல்லை என, கல்வியாளர்கள் கவலை அடைந்து உள்ளனர்.

தமிழகத்தில், 2006ல், அறிமுகமான, பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டம், 10 ஆண்டுகளாக மாற்றப்படாமல் உள்ளதால், பெற்றோரும், மாணவர்களும் கவலையில் உள்ளனர். வரும் கல்வியாண்டிலாவது, புதிய பாடத்திட்டம் அமலாகும் என, எதிர்பார்த்திருந்தனர். இந்நிலையில், 'அடுத்த கல்வி ஆண்டிலும், பழைய பாடத்திட்டமே செயல்பாட்டில் இருக்கும்' என, பள்ளிக்கல்வி அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் ஒப்புதலுக்காக, புதிய பாடத்திட்டம் காத்திருப்பதாக அவர் கூறியுள்ளதால், மாணவர்கள், பெற்றோர் மீண்டும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment