Pages

Friday, September 30, 2016

எட்டாவது ஊதிய குழு : அரசுக்கு கோரிக்கை


'எட்டாவது ஊதியக் குழுவை, தமிழக அரசு உடனடியாக அமைக்க வேண்டும்' என, அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. தமிழகத்தில் உள்ள, பல்வேறு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் அமைப்புகளின் பிரதிநிதிகள் கூட்டத்தை, தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் நடத்தியது. அதில், மத்திய அரசின் ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகளை, ஜனவரி முதல் வழங்கும் வகையில், உடனடியாக, எட்டாவது ஊதியக் குழு அமைக்க வலியுறுத்தப்பட்டது.

'மேலும், 2003 ஏப்., 1க்கு பிறகு, அரசு பணியில் சேர்ந்தோருக்கும், பழைய ஓய்வூதிய திட்டமே தொடர வேண்டும்; அதுபற்றி ஆலோசிக்க அமைக்கப்பட்டுள்ள உயர்மட்டக் குழு, தன் அறிக்கையை, விரைவில் முதல்வரிடம் வழங்க வேண்டும்' என்பது உட்பட, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Thursday, September 29, 2016

பங்குச்சந்தையில் 10% பிஎப் தொகை முதலீடு: பண்டாரு தத்தாத்ரேயா தகவல்


பங்குச்சந்தை திட்டங்களில் (இடிஎப்) முதலீடு செய்யப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இபிஎப்) வரம்பை 10 சத வீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்துள்ளார். இதன் மூலம் நடப்பு நிதியாண்டில் இபிஎப் நிதி ரூ.13,000 கோடி பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படும்.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியை பங்குச்சந்தை களில் இடிஎப் திட்டங்கள் மூலமாக முதலீடு செய்யப்பட்டு வருகிறது. இபிஎப் நிதியிலிருந்து 5 சதவீதம் பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்படுகிறது. இதை அதிகரிக்க தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையம் (இபிஎப்ஓ) பரிசீலித்து வந்தது. தற்போது 2016-17-ம் நிதியாண்டில் பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் வரம்பை 10 சதவீதமாக இபிஎப்ஓ உயர்த்தி யுள்ளது.

``இபிஎப்ஓ நிதியை இடிஎப் திட்டங்களில் முதலீடு செய்யும் வரம்பை 5 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக உயர்த்துவதற்கு நாங்கள் ஏற்கெனவே அறிவிக்கை வெளியிட்டுவிட்டோம்’’ என்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்துள்ளார். இந்த நிதியாண்டில் முதல் ஆறு மாதங்களில் ரூ.1,500 கோடி இடிஎப் திட்டங்களில் இபிஎப்ஓ முதலீடு செய்துள்ளது.

தற்போது மீதமுள்ள 6 மாதங்களில் ரூ.11,500 கோடி முதலீடு செய்வதற்கு திட்டமிட்டுள்ளது. தொழிலாளர் நல அமைச்சகம் இபிஎப்ஓ அமைப்பின் அறங் காவலர் குழுவின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறதா? என்று செய்தி யாளர்கள் கேட்டபோது, இது குறித்து இருமுறை அறங்காவலர் குழு கூட்டத்தில் பேசிவிட்டோம். சில உறுப்பினர்கள் இடிஎப் திட்டங் களில் முதலீடு செய்வதற்கு எதிராக உள்ளனர் என்று பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்தார்.

அறங்காவலர் குழுவின் ஒப்பு தல் தேவையில்லையா? என்று கேட்டதற்கு, மத்திய அரசு முடிவு எடுத்துவிட்டது. மத்திய அரசின் முடிவே இறுதியானது என்று தொழிலாளர் நலத்துறை செய லாளர் ஷங்கர் அகர்வால் தெரிவித்தார். தொழிலாளர் நலத்துறை எடுத் துள்ள இந்த முடிவை தொழிற் சங்கங்கள் கடுமையாக சாடியுள் ளன. அறங்காவலர் குழு ஒப்புதல் இல்லாமல் ஒருதலைபட்சமான முடிவை தொழிலாளர் நல அமைச் சகம் எடுத்துள்ளதாக தொழிற்சங் கங்கள் குற்றம் சாட்டியுள்ளன.

அரசு இணைய சேவை மையங்களில் நாளை முதல் ஆதார் பதிவு


தமிழகம் முழுவதும் உள்ள அரசு இணைய சேவை மையங்கள் மூலம் ஆதார் பதிவு சனிக்கிழமை (அக்.1) முதல் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்கென எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படமாட்டாது. முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ள இந்தத் திட்டமானது, உடனடியாக நடைமுறைக்கு வருகிறது. தமிழகத்தில் பயோ-மெட்ரிக் அடிப்படையில் ஆதார் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கருவிழிப் படலம், கைவிரல் ரேகைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆதார் பதிவுகள் செய்யப்படுகின்றன.

தமிழகத்தில் இந்த ஆதார் பதிவு முறையை தேசிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு ஆணையம் மேற்கொண்டு வந்தது. இதுகுறித்து ஆணையத்தின் அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் ஆதார் பதிவை கடந்த சில ஆண்டுகளாக மேற்கொண்டு வந்தோம். இதுவரை அனைத்து மாவட்டங்களிலும் மொத்தமாகச் சேர்த்து பயோ-மெட்ரிக் பதிவுகளை மட்டும் 98.10 சதவீதம் முடித்துள்ளோம். மேலும், இந்தப் பதிவுகளை அடிப்படையாக வைத்து 89.83 சதவீதம் பேருக்கு ஆதார் எண்களை வழங்கியுள்ளோம்.

பயோ-மெட்ரிக் அடிப்படையில் ஆதார் எண்ணை அளிப்பதால் ஒரு சில வாரங்கள் அவகாசம் தேவைப்படுகிறது. இதுவரை தேசிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு ஆணையம் ஆதார் பதிவுப் பணிகளை மேற்கொண்டு வந்தது. அக்டோபர் 1 -ஆம் தேதி முதல் இந்தப் பணியை தமிழ்நாடு அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனம் மேற்கொள்ளும் என்று ஆணையத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர். எத்தனை மையங்கள்?: தமிழகத்தில் அரசு இணைய சேவை மையங்கள் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களின் செயல்பாட்டுக்காக பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

சென்னை அரசு தலைமைச் செயலகம், 264 வட்டாட்சியர் அலுவலகங்கள், சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகம், மாநகராட்சியின் 15 மண்டல அலுவலகங்கள், 54 கோட்ட அலுவலகங்கள், சென்னை, மதுரை மண்டல கடவுச்சீட்டு அலுவலகங்கள் என மொத்தம் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் அரசு இணைய சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அக்டோபர் 1-ஆம் தேதி முதல் இந்த மையங்களின் மூலம் ஆதார் பதிவுகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இதுகுறித்து அரசு இணைய சேவை மைய அதிகாரிகள் கூறியதாவது: ஆதார் எண்களை வைத்திருத்தவர்களுக்கு அதன் அடிப்படையில் பிளாஸ்டிக் அட்டைகளை அரசு இணைய சேவை மையம் மூலம் வழங்கி வந்தோம். இனி, ஆதார் பதிவுகளையே மேற்கொள்ள உள்ளோம். இதற்கென தேசிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு ஆணையமானது, அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு 1,280 கருவிகளை வழங்கியுள்ளது. இந்தக் கருவிகள் மூலம் கருவிழிப் படலம், கைவிரல் ரேகைகளைப் பதிவு செய்ய முடியும். அரசு இணைய சேவை மையங்கள் அதிகளவு உள்ளதால் ஆதார் பதிவுகளை விரைவாகவும், மக்கள் நீண்ட வரிசையில் நிற்காமல் உடனடியாக மேற்கொள்ளவும் வழி ஏற்படும்.

எந்தக் கட்டணமும் இல்லை: ஆதார் பதிவை மேற்கொள்வதற்கு எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படாது. அரசு இணைய சேவை மையங்களில் பிற சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டாலும், ஆதார் பதிவுக்கு எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படாது. முதல்வர் ஜெயலலிதா அறிவித்த திட்டம் என்பதால், ஆதார் பதிவு அனைத்தும் இலவசமாக மேற்கொள்ளப்படும்.

வாக்காளர் துணை பட்டியல்அக். 3 ல் வெளியீடு


உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் துணை பட்டியல் அக்.,3 ல் வெளியிடப்படுகிறது. விண்ணப்பங்கள் மீது கள ஆய்வு இல்லாததால் போலி வாக்காளர்கள் அதிகளவில் இருக்க வாய்ப்புள்ளது.சட்டசபை வாக்காளர்கள்படி, உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. மாநில தேர்தல் ஆணையம் கேட்டு கொண்டதால், வாக்காளர் பட்டியல் சுருக்கத் திருத்தப் பணியில் செப்.,11 வரை பெறப்பட்ட விண்ணப்பங்கள் படி, புதிய வாக்காளர்களாக சேர்க்கப்பட்டனர். (2017 ஜன., 1 ல் 18 வயது பூர்த்தி அடையும் விண்ணப்பங்கள் சேர்க்கப்படவில்லை).

இப்பணி முடிந்து வாக்காளர் பட்டியல் விபரத்தை உள்ளாட்சித் தேர்தல் அதிகாரிகளிடம் வருவாய்த்துறையினர் ஒப்படைத்தனர். வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அக்., 3 ல் துணை பட்டியல் வெளியிடப்பட உள்ளது. மேலும் புதிதாக பெறப்பட்ட வாக்காளர் சேர்ப்பு விண்ணப்பங்களில் ஏராளமானோர் 25 வயதை கடந்தோராக உள்ளனர். கள விசாரணை இன்றி அவர்களது பெயர் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் வேறு பகுதிகளில் பெயர் இருந்தாலும் கூட, தங்களுக்கு வேண்டியோர் போட்டியிடும் பகுதிகளில் போலி வாக்காளர்களாக சேர வாய்ப்பு உள்ளது.

தேர்தல் அதிகாரி ஒருவர் கூறியதாவது: விண்ணப்பங்களை கம்யூட்டரில் ஏற்றி, 'சாப்ட்வேர்' மூலம் சரி பார்த் துள்ளோம். அதேபோல் ஏற்கனவே வேறு பகுதிகளில் பெயர் இருந்து, நீக்கல் சான்று இல்லாமல் கொடுத்தோரின் விண்ணப்பங்களை நிராகரித்துள்ளோம். இதனால் போலி வாக்காளர்கள் சேர வாய்ப்பில்லை, என்றார்.

Tuesday, September 27, 2016

3 ஆண்டுகளில் 35 அரசு தொடக்க பள்ளிகள் மூடல்


தமிழகத்தில், மூன்று ஆண்டுகளில், 35 அரசு பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அரசு தொடக்க பள்ளிகளில், மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும், பள்ளி களை ஒட்டிய பகுதிகளில், மாணவர் சேர்க்கை தொடர்பாக, ஆசிரியர் குழுக்கள் பிரசாரம் செய்கின்றன; ஆனாலும், அரசு பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்க, பெற்றோர் முன்வருவது இல்லை.

அதனால், மாணவர் எண்ணிக்கை குறைந்த, அரசு தொடக்க பள்ளிகள் மூடப்படுகின்றன; அங்கு படிக்கும் மாணவர்கள், அருகிலுள்ள நடுநிலை பள்ளிகளில் சேர்க்கப்படுகின்றனர். சமகல்வி இயக்கம் என்ற தன்னார்வ அமைப்பு, தகவல் அறியும் உரிமை சட்டத்தில், இதுபற்றிய தகவல்கள் பெற்றுள்ளது. அதன்படி, மூன்று ஆண்டு களில், 11 மாவட்டங்களில், 35 அரசு தொடக்க பள்ளிகள் மூடப்பட்டுள்ளன; அவற்றில் படித்த மாணவர்கள், சற்று தொலைவிலுள்ள நடுநிலை பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில், அதிகபட்சமாக, 11 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. திருப்பூர், ஐந்து; நீலகிரி, நான்கு; திருவள்ளூர், கடலுார் மற்றும் கோவை தலா, மூன்று; ராமநாதபுரம், இரண்டு; திருநெல்வேலி, புதுக்கோட்டை, விருதுநகர் மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் தலா, ஒன்று என, 35 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. சமகல்வி இயக்கத்தினர், 12 மாவட்டங்களில், 155 பள்ளிகளில் ஆய்வு நடத்தியுள்ளனர். 83 சதவீத அரசு தொடக்க பள்ளிகளில், ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும், ஒரே வகுப்பில் அமர்ந்திருக்கும் நிலையே உள்ளது; அவர்களுக்கு, ஒரு ஆசிரியர் மட்டுமே பாடம் நடத்துவதும், ஆய்வில் தெரிய வந்துள்ளது.

Monday, September 26, 2016

பள்ளி கல்வித்துறை இணை இயக்குநர்கள் மாற்றம்


பள்ளிக் கல்வித்துறையில் கடந்த 5 ஆண்டுகளில் 6 முறை அமைச்சர்கள் மாறினர். அதேபோல ஒவ்வொரு ஆண்டும் இணை இயக்குநர்கள் பணியிடங்கள் மாற்றப்பட்டே வந்தன. தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதி நேற்று முன்தினம் இரவு அறிவிக்கப்பட்டதில் இருந்தே தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்துவிடுகிறது.

இந்நிலையில், பள்ளிக் கல்வித்துறையில் நேற்று 3 இணை இயக்குநர்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டனர். 2 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் இணை இயக்குநராக பணியாற்றி வந்த சேதுராமவர்மா, பள்ளிக் கல்வியில் பணியாளர் பிரிவுக்கு மாற்றப்பட்டார். தொடக்கக் கல்வித்துறை இணை இயக்குநர் லதா அங்கிருந்து மாற்றப்பட்டு இடைநிலைக் கல்வி இணை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வயது வந்தோர் மற்றும் முறைசாராக் கல்வித்துறையின் இணை இயக்குநர் சுகன்யா அங்கிருந்து மாற்றப்பட்டு தொடக்க கல்வித்துறையின் இணை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். இது தவிர, திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆனந்தி, திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பொன்குமார் ஆகிய இருவரும் இணை இயக்குநர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

தேர்தல் பணிக்கு 2.5 லட்சம் ஆசிரியர்கள் நியமனம் : காலாண்டு விடுமுறையை ரத்து செய்து பணிக்கு திரும்பினர்


உள்ளாட்சித் தேர்தல் பணியில் 2 லட்சத்து 50 ஆயிரம் ஆசிரியர்களை தேர்தல் ஆணையம் ஈடுபடுத்தியுள்ளது. வேட்பு மனுத் தாக்கல் முதல் வேட்பு மனுதாக்கலின் கடைசி நாள் வரை இவர்கள் பணியில் இருப்பார்கள். தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவிகளுக்கான தேர்தல் அக்டோபர் 17 மற்றும் 19ம் தேதி என இரண்டு கட்டமாக நடக்கிறது. இந்த தேர்தல் பணியில் தமிழகம் முழுவதும் 6 லட்சத்து 50 ஆயிரம் அலுவலர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவர்களில் பள்ளி ஆசிரியர்கள் மட்டும் 2 லட்சத்து 50 ஆயிரம் பேர்.

தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் ஆசிரியர்களுக்கான பணி உத்தரவு கடந்த வாரமே அனுப்பி வைக்கப்பட்டது. அதன்படி தேர்தல் நடத்தும் உதவி அலுவலர்களாக அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒரு ஆசிரியருக்கு ஒரு ஊராட்சியை ஒதுக்கீடு செய்தும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த பணி உத்தரவு பெற்ற ஆசிரியர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட கிராமங்களுக்கு சென்று 26ம் தேதி முதல் வேட்பு மனுக்களை பெற வேண்டும். அக்டோபர் 3ம் தேதி வேட்பு மனுத்தாக்கல் செய்ய கடைசி நாள். அன்று வரை ஆசிரியர்கள் பணியில் இருக்க வேண்டும் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

காலாண்டுத் தேர்வு விடுமுறையும் 3ம் தேதியுடன் முடிவடைகிறது. அதனால் ஆசிரியர்கள் காலாண்டு விடுமுறையில் தேர்தல் பணி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை பொறுத்தவரை அவர்கள் பணி செய்யும் ஊரின் தேர்தல் பணிகளை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிப்பு நேற்று முன்தினம் இரவு வெளியானதால், ஏற்கெனவே தேர்தல் பணிக்கான உத்தரவு பெற்று வெளியூர் சென்றிருந்த ஆசிரியர்கள், பெண் ஆசிரியர்கள் நேற்று அவசர அவசரமாக தங்களுக்கான ஊராட்சிகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

குறிப்பாக பெண் ஆசிரியர்கள், மாற்று திறனாளிகள் உட்பட பல்வேறு தரப்பினர் உடனடியாக சம்பந்தப் பட்ட மைய த்துக்கு செல்ல முடியமால் அவதிப்பட்டனர். அவர்களுக்கு தேவை யான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து தரவில்லை.

யாருக்கு ஓட்டு: தெரிந்து கொள்ள முயற்சிப்பவருக்கு 6 மாதம் சிறை


'வாக்காளர்கள் யாருக்கு ஓட்டளிக்கின்றனர் என்பதை அறிந்து கொள்ள முயற்சிக்கும், 'பூத் ஏஜன்ட்'களுக்கு, ஆறு மாத சிறைத் தண்டனை வழங்கப்படும்' என, மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. உள்ளாட்சி தேர்தலில், வேட்பாளர்களின், பூத் ஏஜன்ட்டுகள், ஓட்டுச்சாவடி அலுவலர்கள் தெரிந்து கொள்ளும் வகையில், ஓட்டுப்பதிவு துவங்குவதற்கு முன், உறுதிமொழி ஏற்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.

வாக்காளர், எந்த வேட்பாளருக்கு ஓட்டளித்துள்ளார் என்பதை நேரடியாகவோ, மறைமுகமாவோ தெரிந்து கொள்ள முயற்சிக்கக் கூடாது; அவற்றை, முறையற்ற வழிகளில் தெரிந்து கொள்ள முயற்சிக்கும், ஓட்டுச்சாவடி ஊழியர்கள் அல்லது பூத் ஏஜன்ட்டுகளுக்கு, ஆறு மாத சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் எனவும், அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது

Sunday, September 25, 2016

அக்.8 முதல் 12ம் தேதி வரை தொடர்ந்து வங்கிகளுக்கு 5 நாட்கள் விடுமுறை


வங்கிகளுக்கு அடுத்த மாதம் 8ம் தேதி முதல் 12ம் தேதி வரை தொடர்ந்து ஐந்து நாட்கள் தொடர் விடுமுறை வருவதால் வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே பணபரிவர்த்தனை செய்து கொள்ளுமாறு வங்கி நிர்வாகங்கள் கேட்டுக் கொண்டுள்ளன. தமிழகத்தில் 500 தனியார் வங்கிகள் உள்பட 8,500 வங்கி கிளைகள் செயல்பட்டு வருகின்றன.

அடுத்த மாதம் வங்கிகளுக்கு ஐந்து நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. அக்டோபர் 8ம் தேதி இரண்டாவது சனிக்கிழமை, 9ம் தேதி ஞாயிறு, 10ம் தேதி ஆயுதபூஜை, 11ம் தேதி விஜயதசமி, 12ம் தேதி முகரம் பண்டிகை என தொடர்ந்து ஐந்து நாட்கள் அரசு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வங்கிகளுக்கும் மேற்கண்ட ஐந்து நாட்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த ஐந்து நாட்களும் வங்கிகளில் எந்தவித பணபரிவர்த்தனையும் நடக்காது என்பதால் வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும்.

Saturday, September 24, 2016

இன்னும் சில தினங்களில் அறிவிப்பு வரும் 1,620 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப முடிவு: பள்ளி கல்வி இயக்குனர் தகவல்


``1620 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன’’ என்று பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் கூறினார். நாகர்கோவில் கல்வி மாவட்டத்தில் பிளஸ்-2, 10-ம் வகுப்பு தேர்வுகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு பரிசளிப்பு விழா, நாகர்கோவிலில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில், தமிழக பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன், பாராட்டு சான்றிதழ்களை வழங்கி பேசியதாவது:-

மாணவர்களின் படைப்பாற்றல் திறனை ஊக்குவிக்கும் சக்தி, ஆசிரியர்களுக்குத்தான் உண்டு. பள்ளியில் கணிதம் பாடத்தில் 200க்கு 200 எடுக்கும் மாணவர்கள் கூட, அண்ணா பல்கலைக்கழக தேர்வில் 50 மதிப்ெபண்கள் எடுப்பதற்கு, திணறும் நிலை உள்ளது. நமது வகுப்பறைகளின் செயல்பாடுகளில் மாற்றம் வேண்டும். எம்.பி.பி.எஸ்., பி.இ. மட்டும்தான் படிப்பு என்பதை மாற்ற வேண்டும். ஏராளமான உயர்கல்வி படிப்புகள் உள்ளன. எந்தெந்த படிப்புகளுக்கு என்னென்ன வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்பதை மாணவர்களுக்கு விளக்க வேண்டும்.

தமிழகம், கல்வியில் வேகமாக முன்னேறி வருகிறது. 400-க்கும் மேற்பட்ட பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு உள்ளன. 1000-த்துக்கும் மேற்பட்ட தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் தொடங்கப்பட்டு உள்ளன. தற்போது, 1620 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பு இன்னும் 10 அல்லது 15 நாட்களில் வெளியிடப்படும். இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் 1,536 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 12ம் வகுப்பு மாணவர்களுக்கான புதிய ஆன்ட்ராய்டு செயலியையும் கண்ணப்பன் வெளியிட்டார்.

'அரசு ஊழியர் ஓய்வூதியமா; எங்களுக்கு தெரியாது' : கைவிரித்தது ஆணையம்


'புதிய ஓய்வூதிய திட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் குறித்த விபரம் எங்களுக்கு தெரியாது' என, ஓய்வூதிய நிதி ஒழுங்கற்று மேம்பாட்டு ஆணையம் (பி.எப்.ஆர்.டி.ஏ.,) கைவிரித்துள்ளது. மத்திய அரசு செயல்படுத்திய புதிய ஓய்வூதிய திட்டத்தில் மத்திய அரசு ஊழியர்கள், மேற்கு வங்கம், திரிபுரா தவிர்த்த மற்ற மாநில அரசு ஊழியர்கள் இணைக்கப்பட்டனர்.

இத்திட்டத்தில் 2016 ஜூலை வரை 17 லட்சத்து 11 ஆயிரத்து 727 மத்திய அரசு ஊழியர்கள், 30 லட்சத்து 72 ஆயிரத்து 872 மாநில அரசு ஊழியர்கள், ஐந்து லட்சத்து ௪,௦௧௯ பொதுத்துறை ஊழியர்கள் உள்ளனர். இவர்களிடம் இருந்து சந்தா தொகையாக (அரசு பங்கு உட்பட) ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 935 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் தமிழக அரசு ஊழியர், ஆசிரியர்கள் 4.23 லட்சம் பேரிடம் வசூலித்த சந்தா மற்றும் அரசு பங்குத் தொகை என 8,600 கோடி ரூபாயை ஆணையத்தில் செலுத்தவில்லை. இதனால் பணியின் போது இறந்தோரின் குடும்பம், ஓய்வு பெற்றோருக்கு பணப்பலன் பெறுவதில் சிக்கல் நீடிக்கிறது.

இந்நிலையில் தமிழக அரசு, புதிய ஓய்வூதிய திட்டம் குறித்து ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சாந்தாஷீலா நாயர் தலைமையில் குழு அமைத்து ஆய்வு செய்து வருகிறது.புதிய ஓய்வூதியத் திட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களில், பணியின் போது இறந்தோர் குடும்பத்திற்கு மட்டுமே நுாறு சதவீத பணப்பலன் தரப்படும். ஓய்வு பெறுவோர் 60 சதவீத பணப்பலன் மட்டுமே பெற முடியும்; மீத தொகை, ஓய்வூதியத்திற்காக அரசு, தனியார் நிறுவனங்களில் முதலீடு செய்யப்படுகிறது. இதில் அதிகபட்சம் 7.5 சதவீத வட்டி மட்டுமே தரப்படுகிறது. இதனால் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு 1,000 ரூபாய் கூட ஓய்வூதியம் கிடைக்கவில்லை; மற்ற மாநில அரசு ஊழியர்களுக்கும் இதேநிலை தான்.

ஓய்வூதிய நிதி ஒழுங்கற்று மேம்பாட்டு ஆணைய செயல்பாடுகள் குறித்து, திண்டுக்கல்லைச் சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியர் பிரடரிக் ஏங்கல்ஸ் தகவல் உரிமைச் சட்டத்தில் விபரம் பெற்றுள்ளார். அதில், '2016 ஆக.,16 வரை தமிழகத்தைச் சேர்ந்த 390 மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். 38 பேர் பணியில் இறந்துள்ளனர். இறந்தோர் குடும்பத்திற்கு (நுாறு சதவீதம்), ஓய்வுப் பெற்றோருக்கு (60 சதவீதம்) பணப்பலனாக மொத்தம் 4.80 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.ஓய்வூதியத்திற்காக அரசு, தனியார் நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்ட தொகை குறித்த விபரம் இல்லை' என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், 'ஆணைய நிர்வாக செலவு, பணியாளர்களுக்கான சம்பளம் ஆகியவை அரசு ஊழியர்களிடம் பிடிக்கப்படும் தொகையில் கிடைக்கும் கமிஷன் மூலமே செலவழிக்கப்படுகிறது.

2005--06 முதல் 2015--16 வரை 151.33 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டது' என தகவல் தரப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்கள் கூறியதாவது: 10 ஆண்டுகள் பணிபுரிந்து (அதிகபட்ச சம்பளம் 30 ஆயிரம் ரூபாய்) சமீபத்தில் ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர்களுக்கு, 810 ரூபாய் தான் ஓய்வூதியம் கிடைக்கிறது. மேலும், ஓய்வூதியம் பெறுவோர் இறந்தால், 40 சதவீத தொகையையும் திருப்பி தருவதில்லை. வங்கியில் டிபாசிட் செய்தால் கூட மூத்த குடிமகனுக்கு 9.5 சதவீதம் வட்டியும், இறந்த பின் டிபாசிட் தொகையும் தரப்படுகிறது; கடனும் பெற்று கொள்ளலாம். ஆனால், எங்களுக்கு எதுவும் இல்லை. ஓய்வூதியத்தை அதிகரிக்க வேண்டும். இல்லாவிட்டால் ஓய்வு பெறும்போது நுாறு சதவீத பணப்பலனும் திருப்பி தர வேண்டும், என்றனர்.

டெங்கு, சிக் குன் குனியாவை தடுக்க தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை


பள்ளி மாணவர்களுக்கு, 'டெங்கு, சிக் குன் குனியா' போன்ற காய்ச்சல்கள் வராமல் தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அனுப்பிய சுற்றறிக்கை:

l மாணவர்கள் உணவு உண்ணும் முன், இரு கைகளையும் சோப்பால் சுத்தம் செய்ய அறிவுறுத்த வேண்டும். வகுப்பறை மற்றும் கழிவறையை சுற்றியோ, பள்ளி வளாகத்திலோ நீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும்; குடிநீர் தொட்டிகளை மூடி வைக்க வேண்டும் கொசு உற்பத்தியாகும் குப்பை, பொருட்களை சேர்க்காமல், பள்ளி வளாகத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் மாணவர்கள், காய்ச்சி வடி கட்டிய குடிநீரையே பருக அறிவுறுத்த வேண்டும் காய்ச்சல் அறிகுறிகள் தெரிந்தாவுடன், ஆரம்ப சுகாதார மையத்தில் சேர்த்து, சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.