Pages

Tuesday, October 06, 2015

ஆசிரியர்கள் நாளை 'ஸ்டிரைக்'; பள்ளிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு


அரசுடன் நடத்திய பேச்சு தோல்வியடைந்ததால், 'திட்டமிட்டபடி நாளை வேலைநிறுத்த போராட்டம் நடக்கும்' என, ஆசிரியர் சங்கங்கள் அறிவித்துள்ளன. இதனால், பள்ளிகளுக்கு, ஆயுதப்படை போலீஸ் பாதுகாப்பு அளிக்க அரசு முடிவு செய்துள்ளது. கடந்த, 2003ல், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் இணைந்து, 'ஜாக்டோ - ஜியோ' என்ற அமைப்பை துவக்கி, போராட்டம் நடத்தி, அரசுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தினர்.

தற்போது, 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டுக்குழுவான, 'ஜாக்டோ' போராட்டங்களை தீவிரப்படுத்தி உள்ளது.நாளை, மாநிலம் முழுவதும், மூன்று லட்சம் ஆசிரியர்கள், ஒரு லட்சம் பள்ளிகளுக்கு பூட்டுப் போட்டு, வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்தனர். அதனால், ஜாக்டோ உயர்மட்ட நிர்வாகிகளை அழைத்து, அரசு நேற்று பேச்சு நடத்தியது. பள்ளிக் கல்வித்துறை இயக்குனர்கள் கண்ணப்பன், இளங்கோவன், இணை இயக்குனர்கள் பழனிச்சாமி, கருப்பசாமி ஆகியோர், அரசு சார்பில் பேச்சு நடத்தினர்.

சங்க நிர்வாகிகளுக்கு, சூடான கட்லெட், காரச்சேவு, கேக் மற்றும் காபி வழங்கப்பட்டு பேச்சு துவங்கியது. இரண்டு மணிநேர பேச்சில் எந்த உடன்பாடும் எட்டப்படாததால், 'திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் நடக்கும்' என, ஜாக்டோ நிர்வாகிகள் அறிவித்தனர். பேச்சு நடத்த போது உளவுத்துறை போலீஸ் அதிகாரிகள், பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள், அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினர். பின், ஆசிரியர்கள் போராட்டத்தின் போது, அனைத்து பள்ளிகளுக்கும் ஆயுதப்படை மற்றும் சிறப்புப் படை போலீசாரை பாதுகாப்புக்கு நிறுத்த முடிவு செய்ததாக, போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment