Pages

Friday, October 16, 2015

"ஊதியக் குழு அறிக்கையை மத்திய அரசு தாமதிக்காமல் பெற வேண்டும்'


ஊதியக் குழு அறிக்கையை மத்திய அரசு தாமதிக்காமல் பெற வேண்டுமென அகில இந்திய மாநில அரசுப் பணியாளர் மகா சம்மேளனத்தின் பொதுச்செயலர் கு.பாலசுப்ரமணியன் வலியுறுத்தினார். கடலூரில் அவர் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:

மத்திய அரசின் ஊதியக்குழு தனது அறிக்கையை தயாராக வைத்துள்ள நிலையில், அதனை காலதாமதமாகப் பெறுவதற்கு டிசம்பர் வரையில் மத்திய அரசு காலக்கெடு நிர்ணயித்துள்ளது. இது ஊதிய மாற்றத்தை தள்ளிப்போடும் உள்நோக்கத்துடன் மத்திய அரசு செயல்படுவதைக் காட்டுகிறது. மாநில அரசுகளைப் பொறுத்தவரை ஊதியக் குழு அறிவிக்கும் சலுகைகளை மத்திய அரசுக்கு இணையாக வழங்குவதில் ஏராளமான முரண்பாடுகள் உள்ளன. மத்திய அரசுக்கு இணையான வீட்டுவாடகைப்படி, கல்விப்படி, போக்குவரத்துப்படி உள்ளிட்டவை வழங்கப்படுவதில்லை.

நிரந்தர ஊதிய விகிதம் பெறாத சத்துணவு, அங்கன்வாடி, ஊராட்சிச் செயலர்கள், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள், ஊராட்சி, கல்வித் துறை, காவல் துறை, ஆதிதிராவிடர் நலத்துறையின் துப்புரவுப் பணியாளர்கள், பட்டுவளர்ச்சித் துறை தினக்கூலி பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அவர்களுக்கு காலமுறை ஊதியம் அளிக்க வேண்டும். 30 ஆண்டு பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் வகையில் முதல்கட்டமாக குறைந்தபட்ச ஊதியமாக ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும். டாஸ்மாக் பணியாளர்களுக்கு உயர்நீதிமன்ற உத்தரவுப்படி மிகைப்பணிக்கு மிகை ஊதியம், பணி விதிகள் நிர்ணயிக்க வேண்டும். பதவி உயர்வுப்பெற்ற அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியம் தொடர்பான பாதிப்புகள், ஊதிய மாற்றத்தில் மத்திய அரசின் போக்கு, அரசுப் பணியில் பணியாளர்களிடம் நிலவி வரும் பணிச்சூழல் தொடர்பான கருத்தரங்கம் கடலூரில் வரும் 31-ஆம் தேதி நடைபெறுகிறது. இதே போன்று சங்கத்தின் தேசிய செயற்குழு வரும் 18-ஆம் தேதி தில்லியில் கூடி அரசுப் பணியாளர்களின் கோரிக்கைகள் குறித்து விவாதித்து, அடுத்தக் கட்ட போராட்டம் குறித்து அறிவிக்க உள்ளது என்றார்.

No comments:

Post a Comment