1988 ஜூலை 22 சென்னை முற்றுகை-நன்றி அய்யா Che Natesan
மத்திய அரசின் எட்டாவது நிதிக்குழு 20.6.1982ல் சவான் தலைமையில் அமைக்கப்பட்டது. இக்குழு அனைத்து மாநில அரசு ஊழியர், ஆசிரியர்களின் ஊதியவிகிதங்களை ஆய்வுசெய்தது.30.4.1984ல் தனது அறிக்கையை மத்திய அரசுக்கு அளித்தது. இந்த அறிக்கை 1984 ஆகஸ்ட் இறுதியில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது இந்த அறிக்கை அதிர்ச்சி அளிக்கும்வகையில் இந்தியாவிலேயே மிகக்குறைந்த ஊதியம் பெற்றுவந்தவர்கள் தமிழ்நாட்டு ஆசிரியர் அரசு ஊழியர்கள்தான் எனச்சுட்டிக்காட்டியது . இவர்களுக்கு அகில இந்திய சராசரி ஊதியமாவது அளிக்கப்பட அன்றிருந்த ஊதியத்தைக் குறைந்தபட்சம் 25% உயர்த்தவேண்டும் எனப் பரிந்துரைத்தது. இதற்காக மத்திய அரசு தமிழக அரசுக்கு ஊதிய உயர்வளிக்க ரூ.501.34கோடியும், அகவிலைப்படி உயர்வுக்காக ரூ.294.8 கோடியும் அளிக்கவேண்டும் எனவும் பரிந்துரைத்தது. நாடாளுமன்றத்திலும் இது ஏற்கப்பட்டது
ஆனால் தமிழகத்தில் எம்.ஜி.ஆர்.அரசோ 26.5.1985ல் நான்காம் ஊதியக்குழுவில் வெறும் 7% ஊதிய உயர்வைமட்டுமே அளித்து வஞ்சித்தது. இதனை எதிர்த்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நடத்திய இயக்கங்கள் திருச்சியில் 28.7.1985ல் நான்குஆரம்பப்பள்ளி ஆசிரியர் இயக்கங்களின் ஜேக்டாவும், ஆகஸ்ட் 1985ல் கோவையில் ஜேக்டீயும் உருவாக வழியமைத்தது. 1985 நவம்பர் 3ல் ஆசிரியர்களை வஞ்சித்த அரசு ஆணை எண்.555ஐத் தீயிட்டுக்கொளுத்தும் போராட்டம் நடைபெற்றது.65,000 ஆசிரியர்கள் தீபாவளித்திருநாளிலும் சிறையிருந்த மாபெரும் போராட்டம் நடைபெற்றது.ஆனால்,தமிழக அரசோ ஒருநபர்குழுவை அமைத்து ஆசிரியர்களை ஏமாற்றியது. ஒற்றுமையைக் குலைக்க முயற்சிசெய்து ஓரளவு வெற்றியும் பெற்றது. ஆனால், 1.1.1986 முதல் நடைமுறைக்கு வந்த மத்திய அரசின் நான்காம் ஊதியக்குழுவின் ஊதியவிகிதங்களைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் என்ற முழக்கத்தை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி 1988ல் மதுரையில் நடைபெற்ற தனது மாநில மாநாட்டில் பிரகடனம் செய்தது. இந்த முழக்கம் ஜேக்டீயுடன் அரசு ஊழியர்களின் இயக்கங்களும் இணைந்த ஜேக்டீ பேரமைப்பு உருவாக வழிகோலியது.
‘மத்திய அரசுக்கு இணையான ஊதியம்’என்ற கோரிக்கையை நிறைவேற்றக்கோரி 1988 ஜூன் 22 முதல் தமிழ் நாட்டில் கால்வரையற்ற வேலை நிறுத்தப்போராட்டம் துவங்கியது. ஒருமாத காலத்திற்குப்பின்னும் அரசு கோரிக்கைகளை ஏற்காத நிலையில் ஜேக்டீ பேரமைப்பு 1988 ஜூலை 22ல் கோட்டை முற்றுகைப் போராட்டத்தை அறிவித்தது. ஆனால் இதை ஒடுக்க எண்ணிய அரசின் கெடுபிடியால் இப்போராட்ட்ம் சென்னை முற்றுகையாக மாற்றப்பட்டது. தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலத்தலைவர் ந.வீரையன் சென்னை அண்ணாசாலையில் பெரியார்-அண்ணா சிலைகளுக்கு இடையில் சாலையின் நடுவில் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்களுடன் அமர்ந்தார். சென்னையே குலுங்கியது. குதிரைப்படையும், கண்ணீர்ப்புகைக் குண்டுகளும், அரசின் அடக்குமுறைகளும் தோற்றன. அரசு ஜேக்டீ-பேரமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி ‘மத்திய அரசுக்கு இணையான ஊதியம்’ என்ற கோரிக்கையை ஏற்றது.1.1.1988முதல் நடைமுறைக்கும் கொண்டுவரப்பட்டது
. தமிழ்நாட்டில் இந்தப்புதிய வரலாற்றை படைத்த நாள் 22 ஜூலை 1988.
.
Pages
▼
No comments:
Post a Comment