Pages

Thursday, June 25, 2015

அனைத்து அரசுப்பள்ளிகளிலும் 6ம் வகுப்பு ஆங்கில வழி சேர்க்கை

தமிழகத்தில் அனைத்து அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பில் ஆங்கில வழி பிரிவுகளைத் தொடங்க வேண்டும் என்று பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அந்த இயக்ககம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையின் விவரம்: கிராமப் பகுதி மாணவர்களின் ஆங்கில மொழித் திறனை மேம்படுத்துவதற்காக கடந்த 2012-13 கல்வியாண்டில் 165 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பில் ஆங்கில வழிப் பிரிவுகள் தொடங்கப்பட்டன.

2013-14 கல்வியாண்டில் 1,048 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும், 2014-15 கல்வியாண்டில் 1,485 பள்ளிகளிலும் ஆங்கில வழிப் பிரிவுகள் தொடங்கப்பட்டன. இந்த நிலையில், 2015-16 கல்வியாண்டில் 6-ஆம் வகுப்புகளில் ஆங்கில வழிப் பிரிவுகளில் மாணவர்களின் சேர்க்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ஆய்வு அலுவலர்களின் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், 2015-16 கல்வியாண்டில் அனைத்து மாவட்டங்களிலும் தேவைப்படும் அரசு உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பில் ஓர் ஆங்கில வழிப் பிரிவைத் தொடங்கலாம்.

ஆங்கில வழிப் பிரிவுகளில் கூடுதல் மாணவர்களைச் சேர்க்க உரிய நடவடிக்கைகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும். நிகழாண்டில் ஆங்கில வழிப் பிரிவுகள் தொடங்கப்பட்ட பள்ளிகளின் எண்ணிக்கை, ஆங்கில வழிப் பிரிவுகளில் சேர்க்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை ஆகியவற்றை ஜூன் 30-ஆம் தேதிக்குள் பள்ளிக் கல்வி இணை இயக்குநருக்கு (இடைநிலைக் கல்வி) அனுப்ப வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment