Pages

Wednesday, April 08, 2015

உதவிப் பேராசிரியர் நேரடிநியமனம் பெற்றவர் தேர்வு பட்டியல் வெளியீடு

உதவிப் பேராசிரியர் நேரடி நியமனத்துக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் trb.tn.nic.in என்ற இணையதளத்தில் இந்தப் பட்டியல் இடம்பெற்றுள்ளது.

தமிழக அரசு 28-5-2013 அன்று வெளியிட்ட அறிவிப்பின் அடிப்படையில், அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான பணிகளை ஆசிரியர் தேர்வு வாரியம் மேற்கொண்டது. 2013 நவம்பர் 25-ஆம் தேதி முதல் டிசம்பர் 6-ஆம் தேதி வரை விண்ணப்பதாரர்களின் சான்றிதழ் சரிபார்ப்புகள் நடைபெற்றன. பின்னர், 2014 ஜூலை 1-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி வரை சிறப்பு முகாம் நடத்தப்பட்டு, 3-4-2009 தேதிக்கு முன்னர் எம்.ஃபில். முடித்த விண்ணப்பதாரர்களின் பணி அனுபவம் உள்ளிட்ட விவரங்கள் பெறப்பட்டு, கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன. இந்த விவரங்களின் அடிப்படையில் இறுதித் தகுதிப் பட்டியல் வெளியிடப்பட்டது.

இந்தத் தகுதிப் பட்டியலிலிருந்து ஒரு பணியிடத்துக்கு 5 பேர் என்ற விகிதத்தில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டனர். இப்போது நேர்முகத் தேர்வு முடிந்து, இறுதியாக பணியிடத்துக்குத் தேர்வு செய்யப்பட்டவர்களின் முதன்மைத் தேர்வுப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், வரலாறு, புவியியல், சுற்றுலா, அரசியல் அறிவியல், உளவியல், சமஸ்கிருதம், சமூகவியல், விஷுவல் கம்யூனிகேஷன், இந்திய கலாசாரம், வணிகவியல் (கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்), வணிகவியல் (சர்வதேச வணிகம்) உள்ளிட்ட பாடப் பிரிவுகளுக்குத் தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் இதில் இடம்பெற்றுள்ளது. தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான பணி நியமன ஆணைகள் தனியாக வழங்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment