Pages

Monday, April 13, 2015

1 முதல்9 ஆம் வகுப்பு வரை புத்தகங்கள் மே முதல் வாரத்தில் வழங்கப்படும்

முப்பருவ முறையின் கீழ் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை முதல் பருவத்துக்கான புத்தகங்கள் மாவட்டங்களுக்கு மே மாதம் முதல் வாரத்தில் அனுப்பப்பட உள்ளன.

இந்த ஆண்டு 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை மொத்தம் 4.52 கோடி புத்தகங்கள் அச்சிடப்படுகின்றன. பொதுத்தேர்வு எழுதும் 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள் கோடை விடுமுறையிலும் படிக்கும் வகையில் அவர்களுக்கு ஏப்ரல் மாதத்திலேயே புத்தகங்களை வழங்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, அரசு, தனியார் பள்ளிகளில் பிளஸ் 1 முடித்த மாணவர்களுக்கு பிளஸ் 2 புத்தகங்கள் ஏற்கெனவே விநியோகிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பள்ளிக்கும் தேவையைவிட ஒரு சதவீதம் அதிகமாகவே புத்தகங்கள் அனுப்பப்பட்டுள்ளதால், புத்தகங்களுக்கு பற்றாக்குறை ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். பள்ளிகள் தொடங்கிய பிறகே பாடப்புத்தகங்களின் சில்லறை விற்பனை தொடங்கப்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் ஏப்ரல் 20-ஆம் தேதி நிறைவடைகின்றன. தேர்வுகள் முடிந்த பிறகு, அந்த மாணவர்களுக்கு 10-ஆம் வகுப்பு புத்தகங்கள் இந்த மாதத்திலேயே விநியோகிக்கப்பட உள்ளன. இதற்காக அனைத்துப் புத்தகங்களும் பள்ளிகளுக்கு ஏற்கெனவே அனுப்பப்பட்டுள்ளன. 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்காக முதல் பருவத்துக்கு 1.5 கோடி புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. இந்த மாணவர்களுக்கான புத்தகங்கள் மே முதல் வாரத்தில் மாவட்டங்களுக்கு அனுப்பப்படும். மாவட்டங்களிலிருந்து பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு, பள்ளி தொடங்கும் முதல் நாளிலேயே புத்தகங்கள் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment