Pages

Sunday, March 29, 2015

அடுத்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சிக்கு ஒன்பதாம் வகுப்பு மாணவர்களை வடிகட்டஉத்தரவு

அடுத்த ஆண்டு, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், 100 சதவீத தேர்ச்சியை எட்டுவதற்காக, ஒன்பதாம் வகுப்பு மாணவர்களை, 'வடிகட்ட', தலைமை ஆசிரியர்களுக்கு, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

நடப்பு (2014 - 15) கல்வி ஆண்டின் துவக்கத்தில் இருந்தே, அரசு பள்ளி மாணவ, மாணவியர், 100 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும் என, கல்வித்துறை கெடுபிடி காட்டி வந்தது.இதற்கேற்ப, காலாண்டு, அரையாண்டுத் தேர்வு முடிவுகள் அடிப்படையில், மதிப்பெண் குறைந்த மாணவர்களை கணக்கெடுத்து, அவர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கவும், அவர்களின் முன்னேற்றத்தை கண்காணிக்கவும், தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.'தேர்ச்சி விகிதம் குறையும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என்ற அதிகாரிகளின் மறைமுக மிரட்டல்களால், தலைமை ஆசிரியர்கள், கடும் மன உளைச்சல் அடைந்தனர்.

பிளஸ் 2 தேர்வில், ஓரளவிற்கு, எதிர்பார்த்த, 'ரிசல்ட்' வந்து விடுகிறது. ஆனால், 10ம் வகுப்பு முடிவு, கல்வித்துறைக்கு திருப்தி அளிக்கவில்லை. இலவச மற்றும் கட்டாய கல்விச் சட்டத்தின்படி, எட்டாம் வகுப்பு வரை, 'ஆல் பாஸ்' என்பதால், தமிழ் எழுதப் படிக்கத் தெரியாத மாணவர்களும், ஒன்பதாம் வகுப்புக்கு வந்து விடுகின்றனர். மாணவர்களை 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற வைப்பது, ஆசிரியர்களுக்கு பெரிய சவாலான விஷயமாக உள்ளது.'பத்தாம் வகுப்பு தேர்வில், 100 சதவீத தேர்ச்சியை எட்ட வேண்டும் எனில், ஒன்பதாம் வகுப்பில், சரியாக படிக்காத மாணவர்களை, 'வடிகட்ட' வேண்டியது முக்கியம். இந்த உத்தரவை, நடப்பு கல்வி ஆண்டில் இருந்தே கடைபிடிக்க வேண்டும்' என, கல்வித்துறை அதிகாரிகள், வாய்வழி உத்தரவு பிறப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது

.எனவே, சமீபத்தில், ஒன்பதாம் வகுப்பு தேர்வை எழுதிய மாணவர்களில், அதிக மதிப்பெண் பெறாத மாணவ, மாணவியரை, 'பெயில்' செய்ய, தலைமை ஆசிரியர்கள் முடிவு எடுத்துள்ளனர்.இதனால், அடுத்த ஆண்டு, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் எண்ணிக்கை குறையலாம். ஆசிரியர் கூறுவது என்ன? ஆசிரியர் சிலர் கூறியதாவது: ஒன்பதாம் வகுப்பில், சரியாக படிக்காத மாணவர்களை, 'பெயில்' செய்வதன் மூலம், தேர்ச்சி பெறக்கூடிய மாணவர்கள் மட்டுமே, 10ம் வகுப்பில் இடம் பெறுவர். இதனால், 10ம் வகுப்பு தேர்ச்சி விகிதம் கணிசமாக அதிகரிக்கும். துறையின் புதிய உத்தரவால், கடந்த ஆண்டை விட (2013 - 14), நடப்பு கல்வியாண்டில் (2014 - 15), ஒன்பதாம் வகுப்பில் அதிக மாணவர்கள், 'பெயில்' ஆக வாய்ப்புள்ளது, என்றனர்.

No comments:

Post a Comment