Pages

Friday, December 12, 2014

பொது வினியோக திட்டத்திலிருந்து வருமான வரி செலுத்துவோரை நீக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசு

உணவு பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான திட்டங்களை வகுக்கும் வகையில் மாநில உணவு மற்றும் வழங்கல் துறை மந்திரிகளின் மாநாடு கடந்த ஜூலை மாதம் நடந்தது. அந்த மாநாட்டில், அரசு ஊழியர்கள் மற்றும் வருமான வரி செலுத்துவோரை தவிர்த்து பொது வினியோக திட்டத்துக்கு பயனாளிகளை கண்டறியுமாறு பரிந்துரைக்கப்பட்டது.

இதனால் வருமானவரி செலுத்துவோரை பொது வினியோக திட்டத்தில் இருந்து நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டது. ஆனால் டெல்லி மேல்-சபையில் நேற்று இது தொடர்பான கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதிலளித்த மத்திய உணவு மற்றும் பொது வினியோகத்துறை ராஜாங்க மந்திரி ரோசகேப் தன்வே, பொது வினியோக திட்டத்தில் இருந்து அரசு ஊழியர்கள் மற்றும் வருமானவரி செலுத்துவோரை நீக்கும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை என தெரிவித்தார்.

அவர் மேலும் கூறும்போது, ‘தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் 2013 குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது. இந்த சட்டப்படி பொது வினியோக திட்டத்தின் கீழ் மானிய விலையில் உணவு பொருட்களை பெறுவதற்கு தகுதியான பயனாளிகளை கண்டறியும் அடிப்படையை மாநில அரசுகள் உருவாக்க வேண்டும்’ என்று கூறினார்.

No comments:

Post a Comment