Pages

Wednesday, December 24, 2014

குரூப் 2 தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தேதி அறிவிப்பு

குரூப்–2 தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு வருகிற 29–ந்தேதி நடைபெறும் என்று டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.

குரூப்–2 தேர்வுக்கான கலந்தாய்வு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:–

டி.என்.பி.எஸ்.சி. (தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்) குரூப்–2 பிரிவில் காலியாக உள்ள பணியிடத்திற்கு நேரடி நியமனம் செய்யும் பொருட்டு கடந்த ஜூன் மாதம் 29–ந்தேதி எழுத்து தேர்வு நடத்தப்பட்டது. பின்னர் எழுத்து தேர்வுக்கான தெரிவு முடிவுகள் கடந்த 12–ந்தேதியன்று வெளியிடப்பட்டது.

இந்த தெரிவு தொடர்பான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு சென்னை பிரேசர் பாலச்சாலையில் (பிராட்வே பஸ் நிலையம் மற்றும் கோட்டை ரெயில் நிலையம்) உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் வருகிற 29–ந்தேதி முதல் நடைபெறுகிறது.

இணையதளத்தில் வெளியீடு
இதனைத்தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு ஜனவரி மாதம் 27–ந்தேதி முதல் நடைபெறும். சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் தரவரிசை அடங்கிய தற்காலிக பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கான தேதி, நேரம் குறிப்பிடப்பட்டு விண்ணப்பதாரர்களுக்கு அழைப்பாணை விரைவஞ்சல் மூலமும் தனியாக அனுப்பப்பட்டுள்ளது. மேற்கூறிய விவரங்கள் அடங்கிய அழைப்பு கடிதத்தினை தேர்வாணைய இணையதளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்யலாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மறுவாய்ப்பு கிடையாது
சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள், தரவரிசை, இடஒதுக்கீடு பிரிவு, விண்ணப்பத்தில் அளித்துள்ள தகவல்கள், தகுதியுடைமை மற்றும் நிலவும் காலி பணியிடங்களுக்கு ஏற்ப அனுமதிக்கப்படுவர். எனவே அழைக்கப்படும் அனைவருக்கும் பணி நியமனம் வழங்கப்படும் என்பதற்கான உறுதி கூற இயலாது.

விண்ணப்பதாரர்கள் அளித்துள்ள தகவல்கள், தவறாக இருக்கும்பட்சத்தில் கலந்தாய்வில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படமாட்டார்கள். விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்த்தல் மற்றும் கலந்தாய்விற்கு வரத்தவறினால் மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment