Pages

Sunday, November 30, 2014

அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி மையத்தில் விண்ணப்பிக்க தேதி நீடிப்பு

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி மையத்தில் 2014-15 கல்வி ஆண்டில் சேர்ந்து பயில மாணவ, மாணவியர்கள் விண்ணப்பிக்க டிச.15-ம் தேதி வரை தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சேவையை கருதி 1979-ல் தொலைதூரக்கல்வி இயக்ககம் தொடங்கப்பட்டது. அண்ணாமலைப் பல்கலை.

தொலைதூரக்கல்வி மையத்தில் புதுதில்லி தொலைதூரக்கல்வி கவுன்சில் (Distance Education Council, New Delhi) அனுமதி பெற்ற மொத்தம் 259 படிப்புகள் நடத்தப்படுகின்றன. மருத்துவம் படிப்புகள் 12-ம், மருந்தியல் படிப்புகள் 2-ம். வேளாண் படிப்புகள்- 9-ம், பொறியியல் படிப்புகள் 53-ம் மற்றும் கலை, அறிவியல், தமிழ், இசை உள்ளிட்ட துறைகளைச் சார்ந்த பல்வேறு இளங்கலை, முதுகலை, டிப்ளமா, முதுநிலை டிப்ளமா படிப்புகள் நடத்தப்படுகின்றன. இந்த கல்வி ஆண்டில் மாணவ, மாணவியர்கள் சேர்ந்து பயில டிச.15-ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி மையத்தின் தமிழகத்தில் 88 படிப்பு மையங்களும், 79 தகவல் மையங்களும் செயல்படுகின்றன. மேற்கண்ட மையங்களில் விண்ணப்பம் பெற்று, அங்கேயே அனுமதி சேர்க்கை செய்யலாம் என தொலைதூரக்கல்வி இயக்கக இயக்குநர் முனைவர் ஆர்.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

புதிய கல்வித்திட்டம் 8+4+3 என வருகிறது

புதிய கல்வி திட்டத்தின் முக்கிய அம்சங்களாவன:

*இப்போது நடைமுறையில் உள்ள, 10 + 2 + 3 கல்வி முறை, 1968ல், கோத்தாரி கமிஷன் பரிந்துரைப்படி அமலில் உள்ளது; இந்த முறை, விரைவில் மாற்றப்பட உள்ளது.
*மாணவர்களின் முதல் எட்டாண்டு படிப்பு, தனி பிரிவாகவும்; அதன் பின், நான்காண்டு தனிப்பிரிவாகவும்; அதன் பின், மூன்றாண்டு தனிப்பிரிவாகவும் பிரிக்கப்பட உள்ளது.
*முதல் எட்டாண்டு படிப்பு, மாணவர்களின் அடிப்படை கல்வி தொடர்பானதாக இருக்கும்; இதில், அவர்களின் தாய்மொழி தான், முதல் மொழியாக இருக்கும்; ஆங்கிலம், இந்தி துணை மொழிகளாக இருக்கும்.
*முதல் எட்டாண்டு படிப்பில், கணிதம், பொது அறிவியல், சமூக அறிவியல், உடற்கல்வி, வேலை, சுத்தம், பாரம்பரிய கல்வி, சமூக சேவை ஆகிய பாடப்பிரிவுகள் இருக்கும்.
*முதல் எட்டாண்டு படித்து முடிக்கும் மாணவன், விரும்பினால், படிப்பை அத்துடன் நிறுத்திக் கொண்டு, தொழில்கள் செய்யவோ, அல்லது தொழிற்கல்வி
படிக்கவோ செய்யலாம்.
*அதன் பின், விரும்பினால், நான்காண்டு படிப்பை தொடரலாம்.

கல்லூரி மட்ட படிப்பு:

*நான்காண்டு படிப்பு, கல்லூரி மட்ட படிப்பை ஒரே வீச்சில் படிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. விரும்பினால், முதலாண்டுடன் நிறுத்திக் கொள்ளலாம்; அப்போது முதலாண்டு சான்றிதழ் வழங்கப்படும். இரண்டாம் ஆண்டு முடித்த பிறகு, இன்னொரு சான்றிதழ் வழங்கப்படும்; அது, டிப்ளமோ சான்றிதழாகவும், மூன்றாம் ஆண்டு, டிகிரி சான்றிதழாகவும், நான்காம் ஆண்டு சான்றிதழ், ஹானர்ஸ் டிகிரி சான்றிதழாகவும் வழங்கப்படும்.
*இதனால், கல்வி, தொழில் ரீதியாகவும், நாட்டின் உற்பத்திக்கு உகந்ததாகவும் இருக்கும்.
*எந்த படிப்பில் சேரவும், நுழைவுத் தேர்வு முறை இருக்காது என்பது, பி.எஸ்.எம்., வரைந்துள்ள கல்வித் திட்டத்தின் முக்கிய அம்சம். மதிப்பெண் மட்டுமின்றி, பிற தகுதிகளும், பொருளாதாரமும் கவனத்தில் கொள்ளப்படும்.
*எல்லா வகையான படிப்பிலும், செய்முறை எனப்படும் பிராக்டிகல் அவசியம் இருக்கும்.

அரசு-தனியார் கூட்டு மாதிரி பள்ளிகள், 'மாநகராட்சியின் திட்டத்தை எதிர்த்து, போராட்டம் நடத்துவோம்' என, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிவித்துள்ளது.

அரசு -தனியார் கூட்டு மாதிரிப் பள்ளிகளுக்கு அனுமதியில்லை' என்ற, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாக்குறுதியை மீறும் வகையில், மாநகராட்சி பள்ளிகளை தனியாருக்கு தரை வார்க்கும் திட்டத்தை அமல்படுத்த, சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இது, கல்வித் துறையினரிடம், பெரும் எதிர்ப்பை உருவாக்கி உள்ளது.'மாநகராட்சியின் திட்டத்தை எதிர்த்து, போராட்டம் நடத்துவோம்' என, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிவித்துள்ளது.

'அரசு - தனியார் கூட்டு மாதிரிப் பள்ளிகள் துவங்கப்படும்' என, முந்தைய ஐ.மு., கூட்டணி அரசு அறிவித்தது. இதன் மூலம், பள்ளி துவங்க, 60 சதவீத பணத்தை தனியார் கொண்டு வந்தால், 40 சதவீத தொகையை அரசு அளிக்கும்.பள்ளி நிர்வாகம் முழுவதும், தனியார் கட்டுப்பாட்டில் இருக்கும். 10 ஆண்டுகளுக்குப் பின், முற்றிலும் தனியார் பள்ளியாக்கப்படும். இத்திட்டத்துக்கு, நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. கடந்த, 2013 நவம்பரில், இத்திட்டம் குறித்து, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில், 'விரைவில், மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படப் போகிறது. எனவே, அரசு - தனியார் கூட்டு மாதிரிப் பள்ளிகள் திட்டம் மாற்றப்படும். தமிழகத்தில், இத்திட்டத்தின் கீழ், பள்ளிகள் துவங்க, எந்த விண்ணப்பமும் பெறவில்லை' என, கூறியிருந்தார். ஆனால், இத்திட்டத்தைப் போலவே உள்ள, ஒரு புதிய திட்டத்தை, சென்னை மாநகராட்சி தற்போது அறிமுகம் செய்ய உள்ளது.

*மாநகராட்சி பள்ளிகளில், 50 மாணவர்களுக்கு கீழ் சேர்க்கை உள்ள, ஏழு பள்ளிகளை, முதல் கட்டமாக தனியாருக்கு அளிக்க உள்ளனர்.
*இப்பள்ளிகளின் கட்டடம், விளையாட்டு மைதானம் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகள் தனியாருக்கு அளிக்கப்படும்.
*இப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், பிற அரசுப் பள்ளிகளுக்கு மாற்றப்படுவர்.
*ஆண்டுக்கு, மாணவர் ஒருவருக்கு, 10 ஆயிரம் ரூபாயை, பள்ளியை நடத்தும் தனியாருக்கு, மாநகராட்சி அளிக்கும்.
*பள்ளி நிர்வாகம் முழுவதும், தனியார் வசமே இருக்கும்.இந்த திட்டத்திற்கு, கல்வியாளர்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் பலத்த எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

எந்த வகையில் சிறந்தவை?

பள்ளிக்கு தேவையான கழிப்பறை, துப்புரவாளர், இரவு பாதுகாவலர், மொழி ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்கள் என, எதையும் செய்து தராமல், சேர்க்கை விகிதம் குறைந்து விட்டது என, மாநகராட்சி காரணம் சொல்கிறது. 'அரசு - தனியார் கூட்டு மாதிரிப் பள்ளிகள் திட்டம் செயல்படுத்தப்படாது' என, ஜெயலலிதா உறுதி அளித்தார்.அவர் அளித்த வாக்குறுதிக்கு மாறாக, மாநகராட்சிப் பள்ளிகளை, தனியாருக்கு அளிக்கும் வேலையை, சென்னை மாநகராட்சி மேற்கொள்கிறது. தனியார் பள்ளிகள், எந்த வகையில் தரமானது என்பதை முதலில் அறிவிக்க வேண்டும்; என்ன மாற்றம் வரும் என்பதையும் தெரிவிக்க வேண்டும்.மேயர் சைதை துரைசாமி, ஐ.ஏ.எஸ்., அகாடமி நடத்துகிறார். அதன்மூலம், பல ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளை உருவாக்கினோம் என, சொல்பவர்கள், மாநகராட்சிப் பள்ளிகளில், அந்த நிர்வாகத்தை ஏன் அமல்படுத்தவில்லை.
பிரின்ஸ் கஜேந்திர பாபு
மாநில பள்ளிகள் பொது மேடை அமைப்பின் பொதுச்செயலர்

தனியாருக்கு துணைபோகும் அரசு :

இலவச கல்வி அளிப்பதை முற்றிலுமாக உதறிவிட, அரசு நினைக்கிறது. அதன் ஒரு கட்டமாக, மாநகராட்சிப் பள்ளிகளை தனியாருக்கு அளிக்கின்றனர்.ஒரு மாணவனுக்கு, 10 ஆயிரம் ரூபாய் அளிக்கப்படும் என்றால், அத்தொகையை மட்டும் கொண்டு, பள்ளியை தனியார் நடத்தி விடுவரா? மாறாக, மாணவர்களிடம் கட்டண வசூலில் ஈடுபடுவர். இதனால், கல்வி மூலம், தனியார் சம்பாதிக்க அரசே துணை போகிறது.மாணவர் சேர்க்கை குறைவுக்கான காரணத்தை கண்டறிந்து, அதை சீர்செய்ய, மாநகராட்சி ஏன் முன்வரவில்லை. தனியாரிடம் என்ன எதிர்பார்க்கின்றனரோ அதை மாநகராட்சியால் ஏன் செய்ய முடியாது. இந்தக் கேள்விகளுக்கு எல்லாம், மாநகராட்சி பதில் சொல்ல வேண்டும்.
வசந்தி தேவி,
முன்னாள் துணைவேந்தர்

கொள்கை இல்லாத அரசு:

அட்டவணை பாடம் (Activity Learning), புத்தக வழிப்பாடம் இதில் எதை நடத்துவது என, ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்குத்
தெரியவில்லை. இத்தகைய குழப்பமான ஆரம்பப் பள்ளி கல்விக் கொள்கையை, அரசு வைத்து உள்ளது.இருபது மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தை, 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என, மாற்றினர். பல பள்ளிகள், ஓராசிரியர் பள்ளியாகவே நீடிக்கின்றன. இந்நிலையில், 'கல்வித் தரம் குறைந்து விட்டது' என, அரசு எப்படி கூற முடியும்.அரசிடம் தெளிவான கல்விக் கொள்கையோ, இலவச கல்வியை தொடரும் எண்ணமோ இல்லை. தனியாரிடம் கல்வித் துறையை முழுமையாக அளிக்க திட்டமிடுகின்றனர். இத்திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்த, டிச., 7ம் தேதி நடக்கும், எங்கள் கூட்டணியின் மாநிலக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்வோம்.
கண்ணன்,
தலைவர்
தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி

அரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க வேண்டும்: ஜி. ராமகிருஷ்ணன்

அரசுப் பள்ளிகள் பாதுகாக்கப்பட்டால்தான் அனைவருக்கும் கல்வி கிடைக்கும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் தெரிவித்தார். மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற அரசுப் பள்ளிகளைப் பாதுகாப்போம், அனைவருக்கும் கல்வியை உறுதி செய்வோம் என்ற கருத்தரங்கில் அவர் பேசியது:

அனைவருக்கும் தரமான, சமமான கல்வி அளிக்காமல் நாடு வளராது. மக்களின் வாழ்க்கைத் தரம் உயராது. ஏழ்மை ஒழியாது. அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் வேலை என்ற முழக்கத்தை எல்லோரும் எழுப்புகிறார்கள். அரசுப் பள்ளிகள் மூலம்தான் ஏழை, நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு கல்வி அளிக்க முடியும். 1978-இல் தனியார் மெட்ரிக் பள்ளிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது. 2001-இல் 2,983 மெட்ரிக் பள்ளிகளில் 11,68,439 மாணவர்கள் படித்தனர். 2014-இல் மெட்ரிக் பள்ளிகளின் எண்ணிக்கை 11,462 ஆகவும், மாணவர்களின் எண்ணிக்கை 36,17,473 ஆகவும் அதிகரித்துள்ளது.

கடந்த 13 ஆண்டுகளில் தனியார் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை 3 மடங்கு அதிகரித்துள்ளது. இந்க காலகட்டத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைந்துள்ளது. அரசுப் பள்ளிகள் மூடப்பட்டால் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் எங்கே போவார்கள்? அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டுமானால் அரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க வேண்டும். தாய்மொழி பயிற்றுமொழியாகத் தொடர ஊக்கம், அரசு மழலையர் பள்ளிகள், மாணவர் இடைநிற்றலைத் தடுத்தல், கல்வித் தரத்தை உயர்த்த ஆசிரியர்களுக்கு பயிற்சி, அடிப்படை வசதிகள், ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புதல் மூலம் அரசுப் பள்ளிகளைப் பாதுகாக்கலாம் என்றார் ஜி. ராமகிருஷ்ணன்.

ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ம.ப. விஜயகுமார், எழுத்தாளர்கள் ஆயிஷா நடராஜன், சு. வெங்கடேசன் உள்ளிட்டோர் கருத்தரங்கில் பங்கேற்றனர்.

குறைந்தது காலாண்டு தேர்ச்சி சதவீதம்: அதிருப்தியில் கல்வித்துறை உயர் அதிகாரிகள்

அரசுப் பள்ளிகளில், நடப்பு கல்வியாண்டுக்கான காலாண்டு தேர்ச்சி சதவீதம் குறைந்ததால், கல்வித்துறை உயர் அதிகாரிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ள நிலையில், விடைக்குறிப்பு இல்லாததால், சரியான மதிப்பெண் மதிப்பீடு செய்ய முடியவில்லை என, மாவட்ட கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பள்ளிக் கல்வித்துறை சார்பில், ஆண்டுதோறும் நடத்தப்படும் இடைத் தேர்வு, திருப்பத் தேர்வு, காலாண்டு, அரையாண்டு, அலகுத் தேர்வு ஆகியன, மாநிலம் முழுவதும், பொதுத்தேர்வு நடத்துவது போல், ஒரே தேதியில் நடத்தப்படுகின்றன.

அதற்கான தேர்வு அட்டணையை, அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என, கல்வித் துறை அறிவுறுத்தி வருகிறது. இதில், கடந்த, செப்., 15ம் தேதி, பிளஸ் 2, அதே மாதம், 17ம் தேதி, ??ம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவருக்கு, காலாண்டுத் தேர்வு நடத்தப்பட்டது. அதில், ஒவ்வொரு பள்ளி வாரியாக, காலாண்டுத் தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண் எடுக்காத மற்றும் தேர்ச்சியற்ற பொதுத்தேர்வு மாணவர் பட்டியல், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் எடுக்க உத்தரவிடப்பட்டது.

நடப்பு கல்வியாண் டில், பொதுத்தேர்வு எழுதக்கூடிய மாணவர்களில், பெரும்பாலானோர், குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் கூட எடுக்கவில்லை. பாடம் வாரியாக, குறைந்தபட்ச மதிப்பெண் கூட எடுக்காத மாணவரின் எண்ணிக்கை மற்றும் அவர் தேர்ச்சி குறைவுக்கான காரணப் பட்டியலுடன், மாவட்ட கல்வி அதிகாரிகள், சில நாட்களுக்கு முன், பள்ளிக்கல்வி இயக்குனரகத்திற்கு சென்றனர். அப்போது, கல்வி மாவட்டம் வாரியாக காலாண்டுத் தேர்வு தேர்ச்சி சதவீதத்தை பார்த்த உயர் அதிகாரிகள், மூன்றில் ஒரு பாகம் பாடத்திட்டத்தில், மாணவர் அதிகபட்ச மதிப்பெண் எடுக்கவில்லையே என்ற அதிருப்தியை, மாவட்ட அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.

நடப்பாண்டு, பொதுத்தேர்வில் தேர்ச்சி சதவீதம் குறைந்தால், சம்பந்தப்பட் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் மாவட்ட அதிகாரிகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், எச்சரிக்கை விடுத்துள்ளனர். விடைக்குறிப்பு இல்லை: பொதுத்தேர்வு போல, காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுக்கு, விடைக்குறிப்பு வழங்கப்படுவதில்லை. இதனால், ஒவ்வொரு பள்ளி ஆசிரியரும், அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப, மாணவர்களின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்வர். சில பள்ளி ஆசிரியர்கள், குறைந்த மதிப்பெண் கொடுத்தால் தான், பொதுத் தேர்வுக்கு மாணவர் கடுமையாக படிப்பார் என நினைத்து, குறைந்த மதிப்பெண்ணை வழங்குவர்.

செய்முறை தேர்வுக்கு என, தனியாக மதிப்பெண் இருந்தாலும், அந்த மதிப்பெண்ணை கணக்கிடாமல், மீதமுள்ள, மதிப்பெண்ணுக்கு தேர்வு நடத்தி, அதை, மொத்த மதிப்பெண்ணுக்கு கணக்கிட்டுக் கொள்வர். காலாண்டு, அரையாண்டு மதிப்பீட்டை வைத்து, எந்த முடிவும் கூற முடியாது. இதற்கு முன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அளவில், காலாண்டு, அரையாண்டு மதிப்பெண் குறித்து ஆய்வு நடத்தப்படும். தற்போது, மாநில அதிகாரிகளே களத்தில் இறங்கி, மதிப்பெண்களைஆய்வு நடத்தி, நெருக்கடி கொடுப்பதால், எப்படி வகுப்பு எடுப்பது என்றே தெரியவில்லை. இப்பிரச்னைக்கு தீர்வு காண, பொதுத் தேர்வைப் போல, மற்ற தேர்வுகளுக்கும், விடைக் குறிப்பு வழங்கினால், விடைத்தாள் மதிப்பீடு சரியாக இருக்கும்.

புத்தக மூட்டைகளை தூக்கும் 'லோடு மேன்'களா நாங்கள்? துவக்கப்பள்ளி ஆசிரியைகள் குமுறல்

துவக்கப் பள்ளி மாணவர்களுக்கான இலவச பொருட்களை, பல கி.மீ., தூரம் பயணித்து, ஆசிரியர்கள், தங்கள் பள்ளிகளுக்கு எடுத்துச் செல்கின்றனர். 'பாடம் சொல்லிக் கொடுக்கும் நாங்கள், லோடு மேன்களா?' என, துவக்கப்பள்ளி ஆசிரியைகள் ஆதங்கப்படுகின்றனர். தமிழக அரசு, துவக்கப் பள்ளி மாணவ, மாணவியருக்கு சீருடை, புத்தகம், நோட்டு, பை, செருப்பு, வண்ண பென்சில் டப்பா உட்பட பல்வேறு பொருட்களை இலவசமாக வழங்கி வருகிறது.

மாநிலத்தில், 23 ஆயிரம் துவக்கப் பள்ளி கள் உள்ளன. இதில், 17 ஆயிரம் பள்ளிகள், ஈராசிரியர் பள்ளிகள். அரசு கொடுக்கும் இலவச பொருட்கள் நேரடியாக, இப்பள்ளிகளை சென்றடைவதில்லை. மாவட்டத்தில் உள்ள யூனியன் அலுவலகத்திற்கு கட்டுப்பட்ட குடோனில், இலவச பொருட்கள் பாதுகாக்கப்படுகின்றன. துவக்கப் பள்ளி ஆசிரியர்கள், தங்கள் பள்ளியில் இருந்து, பல கி.மீ., தூரம் பயணம் செய்து, குடோனில் இருக்கும் பொருட்களை எடுத்து வருகின்றனர். மொத்தமுள்ள, 1.25 லட்சம் துவக்கப் பள்ளி ஆசிரியர்களில், 75 சதவீதத்தினர் ஆசிரியைகள். இவர்கள், இலவச பொருட்களை கொண்டு செல்வதில் பல நடைமுறை சிக்கல்கள் உள்ளன. துவக்கப்பள்ளி ஆசிரியை ஒருவர் கூறியதாவது:

ஓராண்டில், மூன்று பள்ளி பருவங்கள் வருகின்றன. ஒவ்வொரு பருவத்திற்கும், ஒவ்வொரு பொருளாக அரசு தருகிறது. புத்தக பை, காலணியை மட்டுமே, ஆண்டிற்கு, ஒரு முறை தருகிறது. மற்ற பொருட்களான புத்தகம், நோட்டு போன்றவற்றை, கொஞ்சம் கொஞ்சமாக தருகிறது. இதனால், அதிகம் பாதிக்கப்படுவது ஈராசிரியர் பள்ளிகள் மட்டுமே. ஒரு ஆசிரியர் சென்று விட்டால், மற்றொரு ஆசிரியர் பாடம் நடத்த முடியாது. மாணவர்களை ஒழுங்குபடுத்தவே நேரம் சரியாக இருக்கும். இப்பிரச்னைக்கு தீர்வு காண, சத்துணவு திட்டத்தை போன்று, இலவச பொருட்களை, பள்ளிகளுக்கு நேரடியாக வினியோகம் செய்ய வேண்டும். பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு, குறிப்பிட்ட தேதியை குறிப்பிட்டு, அந்த தேதியில், இலவச பொருட்களை ஒட்டுமொத்தமாக கொடுத்து விட்டால், பாடம் நடத்துவதில் ஆசிரியர்கள் கவனம் செலுத்துவர்.

நாங்கள் என்ன, மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும், 'லோடு மேன்'களா? இவ்வாறு, அவர் கூறினார். தொடக்க கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்த ஆண்டிற்கு, இலவச பொருட்கள் தயாரிப்புக்கு, 'டெண்டர்' விடப்பட்டு, பொருட்கள் வினியோகம் நடக்கிறது. ஒவ்வொரு பொருள் தயாரிப்புக்கும் கால அளவு மாறுபடுகிறது. முதலில் எந்த பொருள் வருகிறதோ, அதை தாமதிக்காமல், மாணவர்களுக்கு சேர்க்க வேண்டும் என, மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளோம். எல்லா பொருட்களையும் ஒட்டுமொத்தமாக தயாரித்து, ஒரே நேரத்தில் கொடுப்பதற்கு சில நடைமுறை சிக்கல்கள் உள்ளன. வரும் ஆண்டில் இது குறித்து பரிசீலிக்கப்படும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

உயர்கல்வி அனுமதி: ஏ.இ.இ.ஓ., க்களுக்கு அதிகாரம்

   அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் எம்.பில்., பிஎச்.டி., போன்ற உயர்கல்வி பயில அனுமதி வழங்கும் அதிகாரம், உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு (ஏ.இ.இ.ஓ.,க்கள்) அளிக்கப்பட்டுள்ளது. தொடக்கக்கல்வி இயக்குனரகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: எம்.பில்., பிஎச்.டி., பயில அனுமதி கோரும் ஆசிரியர்கள் தொடக்கக் கல்வி இயக்குனரகத்திற்கு மனுவை அனுப்புகின்றனர்.

அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் அஞ்சல்வழி கல்வி மூலம் மேற்படிப்பு பயில முன் அனுமதி வழங்கும் அதிகாரம், உதவி மற்றும் கூடுதல் தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, உயர்கல்வி பயில சம்பந்தப்பட்ட உதவி மற்றும் கூடுதல் தொடக்கக்கல்வி அலுவலர்களிடம் அனுமதி பெறலாம். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

அடுத்த ஆண்டு முதல் வடமாநிலப் பள்ளிகளில் திருவள்ளுவர் பிறந்ததினக் கொண்டாட்டம்: மத்திய அரசு அறிவிப்பு

  திருவள்ளுவர் பிறந்த தினம் அடுத்த ஆண்டு முதல் வடமாநிலப் பள்ளிகளில் சிறப்பாகக் கொண்டாடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக உத்தரகாண்ட் மாநில பாரதிய ஜனதா உறுப்பினர் தருண்விஜய் முன்வைத்த கோரிக்கையை ஏற்பதாக மாநிலங்களவையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி ராணி தெரிவித்தார்.

இது தொடர்பாக மாநிலங்களவையில் பேசிய தருண்விஜய், திருவள்ளுவர் பிறந்த தினத்தை நாடுமுழுவதும் சிறப்பாகக் கொண்டாட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். மேலும், நாட்டின் மிகப்பழமையும், சிறப்பும் வாய்ந்த செம்மொழியான தமிழுக்கு, வட மாநிலங்கள் உரிய மதிப்பளிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். அவரது இந்தக் கருத்தை, ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத்யாதவ், சமாஜ்வாதி உறுப்பினர் ராம் கோபால் யாதவ், திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் அஹமத் ஹசன், திமுக உறுப்பினர்கள் கனிமொழி, திருச்சி சிவா, அதிமுக உறுப்பினர் நவநீதகிருஷ்ணன் உட்பட அவையில் இருந்த அனைத்து உறுப்பினர்களும் ஆரவாரத்துடன் வரவேற்றனர்.

உடனடியாக இதற்கு பதிலளித்த மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் ஸ்மிருதிராணி, தருண்விஜயின் கோரிக்கை ஏற்கப்படுவதாக அறிவித்தார். மேலும், அடுத்த ஆண்டு முதல் வடமாநிலப் பள்ளிகளில் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுவதுடன், திருக்குறளைக் கற்றுத்தரவும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்மிருதி ராணி உறுதியளித்தார்.

தேசிய திறனாய்வு தேர்வு: கீ - ஆன்சர் வெளியீடு

அரசு தேர்வுகள் இயக்கக இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ள, தேசிய திறனாய்வு தேர்வுக்கான விடைகள் குறித்த கருத்துகளை தெரிவிக்கலாம் என, தேர்வுத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அறிவிப்பு: சமீபத்தில் நடந்த, தேசிய திறனாய்வு தேர்வுக்கான, விடைகள், ஆன் - லைனில், டிச., 12ம் தேதி வரை, அரசு தேர்வுகள் இயக்ககத்தின், www.tndge.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. மாணவர்கள் மற்றும் பெற்றோர், தங்கள் கருத்துகளை, dgedirector@gmail.com என்ற முகவரிக்கு, இ - மெயில் வாயிலாக, அனுப்பலாம். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Thursday, November 27, 2014

இணை இயக்குநர்கள் மாற்றம் ! புதிய பதவி விபரம்

பள்ளிக்கல்வித்துறையில் உள்ள இணை இயக்குனர்கள் பணியிட மாற்றம் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் உள்ள இணை இயக்குனர்களுக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

*மேல்நிலைக் கல்வி இணை இயக்குனராக திரு. எம். பழனிசாமி அவர்களையும்,

*இடைநிலைக் கல்வி இணை இயக்குனராக திரு.கார்மேகம் அவர்களையும்,

*ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவன இணை இயக்குனராக திரு.பாலமுருகன் அவர்களையும்,

*மெட்ரிக் பள்ளிகள் இணை இயக்குனராக திருமதி.ஸ்ரீதேவி அவர்களையும் நியமித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆசிரியர்களுக்கான உயர்கல்வி அனுமதி


     பட்டதாரி மற்றும் மேல்நிலை பள்ளி ஆசிரியர்களின் உயர்கல்வி படிப்பதற்கான அனுமதியை சம்மந்தப்பட்ட தலைமையாசிரியர்களே வழங்கும் வகையில் கல்வித்துறை உத்தரவிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் பணியில் சேர்ந்த பின் எம்.பில்., பி.எச்டி., போன்ற உயர்கல்வி படித்தால் ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்கப்படும்.

இதனால் பலர் உயர்கல்வி படிக்க அனுமதி கோரி ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் விண்ணப்பம் செய்வர். தொடக்கம், பட்டதாரி மற்றும் மேல்நிலை பள்ளிகளின் ஆசிரியர்கள் அத்துறைக்கு உட்பட்ட இணை இயக்குனர் அந்தஸ்தில் உள்ளவர்களிடம் அனுமதி பெற வேண்டும். இதில் காலதாமதம் ஏற்படுவதாக சர்ச்சை எழுந்தது. இதனால் தொடக்கக் கல்வியில் சம்பந்தப்பட்ட உதவித் தொடக்கக் கல்வி அலுவலரே அதற்கான அனுமதியை அளிக்கலாம் என உத்தரவிடப்பட்டது. இதேபோல் பட்டதாரி மற்றும் மேல்நிலை பள்ளி ஆசிரியர்களும் எதிர்பார்க்கின்றனர்.

இதுகுறித்து தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட செயலாளர் பிரபாகரன், சட்ட ஆலோசகர் வெங்கடேஷன் கூறியதாவது: இணை இயக்குனருக்கு விண்ணப்பித்துள்ள ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் மாதக் கணக்கில் 'பெண்டிங்'கில் உள்ளன. தொடக்க கல்வித்துறையில் உள்ளதுபோல் பட்டதாரி மற்றும் மேல்நிலை பள்ளி ஆசிரியர்களுக்கும் அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்களே அனுமதி அளிக்கும் உத்தரவை கல்வித்துறை பிறப்பிக்க வேண்டும். இதனால் காலதாமதம் தவிர்க்கப்படும்