Pages

Sunday, October 05, 2014

அக்டோபர் 9 முதல் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15 வரை தூய்மைப் பள்ளி நிகழ்ச்சி: பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவு

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் சுத்தம், சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வை மாணவர்களிடம் ஏற்படுத்துவதற்காக அக்டோபர் 9 முதல் 2015 ஆகஸ்ட் 15-ஆம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வி இயக்ககம் செவ்வாய்க்கிழமை பிறப்பித்த உத்தரவு:

பள்ளி வளாகத்தையும், விளையாட்டு மைதானத்தையும் தூய்மை செய்ய வேண்டும். வளாகத்தில் முள் புதர்கள் இருந்தால் அவற்றை அகற்ற வேண்டும். குடிநீர்த் தொட்டியை சுத்தம் செய்து சுகாதாரத்துடன் பராமரிக்க வேண்டும். சமையலறை, தலைமையாசிரியர் அறை, நூலகம், ஆய்வகம் ஆகியவற்றை ஒட்டடை அடித்து தூய்மைப்படுத்துதல் வேண்டும். பள்ளிகளில் உள்ள மேசைகள், நாற்காலிகள், அலமாரிகள் உள்ளிட்டப் பொருள்களை பழுது நீக்கி பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும். பழுது நீக்க முடியாத நிலையில் உள்ள பொருள்களை பதிவேட்டில் பதிவு செய்து அப்புறப்படுத்த வேண்டும். அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலமாக வழங்கப்படும் பராமரிப்புத் தொகையை வைத்து இந்தப் பணிகளை வேலையாள் மூலமாக மேற்கொள்ள வேண்டும். சுத்தம், சுகாதாரம் சார்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி போன்றவற்றின் மூலம் தூய்மையான பள்ளியை அறியச் செய்ய வேண்டும். இதுதொடர்பாக விழிப்புணர்வு பேரணியும் நடத்த வேண்டும். பல் துலக்குதல், குளித்தல், நகம் வெட்டுதல், தூய்மையான உடை அணிதல், சாப்பிடுவதற்கு முன்பு சோப்பினால் நன்கு கை கழுவுதல், சுகாதாரத்துடன் உணவு உண்ணுதல், குப்பைத் தொட்டிகளைப் பயன்படுத்துதல் தொடர்பாக ஆசிரியர்கள் அறிவுரைகளை வழங்கி, மாணவர்களிடம் நல்லப் பழக்கங்களை ஏற்படுத்த வேண்டும்.

அதோடு, சுத்தம் சார்ந்த உறுதிமொழியையும் எடுத்துக் கொள்ள வேண்டும். இதுதொடர்பாக, தலைமையாசிரியர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். இந்த நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது தொடர்பாக அறிக்கையையும் பெற வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment