Pages

Monday, September 01, 2014

ஆசிரியர் தின விழா பெயரில் மாற்றம் இல்லை : கல்வித்துறை திட்டவட்டம்

'தமிழகத்தில் நடக்கும் ஆசிரியர் தின விழா பெயரில், எவ்வித மாற்றமும் கிடையாது; வழக்கம்போல், இந்த ஆண்டும், ஆசிரியர் தின விழா, வரும் 5ம் தேதி, சிறப்பாக கொண்டாடப்படும்' என, கல்வித்துறை வட்டாரம் தெரிவித்தது. முன்னாள் ஜனாதிபதி, ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்., 5ம் தேதி, தேசிய அளவில், ஆசிரியர் தின விழாவாக கொண்டாடப்படுகிறது. சிறப்பாக பணிபுரியும் ஆசிரியருக்கு, மத்திய, மாநில அரசுகள், விருதுகளை வழங்குகின்றன. இந்நிலையில், ஆசிரியர் தின விழா பெயரை, சமீபத்தில், 'குரு உத்சவ்' என, மாற்றி, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டதாக, தகவல் வெளியானது.

மாநில அரசுகளும், புதிய பெயரில், விழாவை கொண்டாட வேண்டும் என, மத்திய அரசு அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. வரும், 5ம் தேதி மாநில அரசுகளும், மத்திய அரசும், சிறந்த ஆசிரியர்களுக்கு விருது வழங்க உள்ளது. தமிழகத்திலும், விழாவுக்கான ஏற்பாடுகள், மும்முரமாக நடந்து வருகின்றன. இந்நிலையில், 'பெயர் மாற்றம், தமிழகத்தில் அமலுக்கு வருமா?' என்பது குறித்து, கல்வித்துறை வட்டாரம், நேற்று தெரிவித்ததாவது:

பெயர் மாற்றம் குறித்து, தமிழக அரசு, கல்வித்துறைக்கு, எவ்வித உத்தரவை யும் பிறப்பிக்கவில்லை. எனவே, வழக்கம் போல் தான், விழா நடக்கும். வரும், 5ம் தேதி சென்னை, சேத்துப்பட்டில் உள்ள கிறிஸ்தவ மேல்நிலைப் பள்ளியில் நடக்கும் விழாவில், 377 ஆசிரியர்களுக்கு, 'டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது' வழங்கப்பட உள்ளது. பள்ளிகல்வி அமைச்சர், வீரமணி, விருதுகளை வழங்குகிறார். இவ்வாறு, கல்வித்துறை வட்டாரம் தெரிவித்தது.

No comments:

Post a Comment