Pages

Friday, January 10, 2014

டியூஷனுக்குக் கட்டாயப்படுத்தினால் கடும் நடவடிக்கை: ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை

   அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களை டியூஷனுக்கு வர வேண்டும் என கட்டாயப்படுத்தும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு வியாழக்கிழமை (ஜன.9) அனுப்பிய சுற்றறிக்கையின் விவரம்:

   அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உயர் வகுப்புகளில் படிக்கும் மாணவ, மாணவியரைக் கட்டாயப்படுத்தி சில ஆசிரியர்கள் டியூஷனுக்கு (தனி வகுப்பு) வரவழைத்து கட்டணம் வசூலிப்பதாக அரசுக்குப் புகார்கள் வந்துள்ளன. இந்த நடவடிக்கைகள் கண்டிக்கத்தக்கவை. விழுப்புரம் மாவட்டத்தில் கட்டாய தனி வகுப்புகளால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவியர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக துறையின் கவனத்துக்கு எடுத்துவரப்பட்டது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் உடனடியாக தாற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. மாணவர்களைக் கட்டாயப்படுத்தி கட்டணம் வசூலித்து டியூஷன் நடத்துவது போன்ற முறைகேடான செயல்களில் ஈடுபடுவதை ஆசிரியர்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

இந்த அறிவுரைகளை மீறிச் செயல்படும் ஆசிரியர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மூலம் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் கோரப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment