Pages

Monday, December 09, 2013

3-ம் பருவத்துக்கு 2.4 கோடி புத்தகங்கள்: 25-ஆம் தேதிக்குள் அனுப்பப்படும்

முப்பருவ முறையில் மூன்றாம் பருவத்துக்கான 2.4 கோடி புத்தகங்கள் டிசம்பர் 25-ஆம் தேதிக்குள் மாவட்டங்களுக்கு அனுப்பப்படும் என தமிழ்நாட்டுப் பாடநூல் கழக வட்டாரங்கள் தெரிவித்தன. ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முப்பருவ முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. மூன்றாம் பருவத்துக்கான புத்தகங்கள் அச்சிடும் பணிகள் குறித்து தமிழ்நாட்டுப் பாடநூல் கழக வட்டாரங்கள் கூறியது: மூன்றாம் பருவத்துக்கான வகுப்புகள் ஜனவரி 2-ஆம் தேதி தொடங்க உள்ளன.

முதல் நாளிலேயே அனைத்து மாணவர்களுக்கும் புத்தகங்களை வழங்குவதற்காக புத்தகங்களை அச்சடிக்கும் பணி ஏற்கெனவே தொடங்கிவிட்டது. இதுவரை 70 சதவீத புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள புத்தகங்களும் அச்சடிக்கப்பட்டு மாவட்டங்களுக்கு டிசம்பர் 25-க்குள் அனுப்பப்பட்டு விடும். தமிழகம் முழுவதும் 66 புத்தக விநியோக மையங்களும், பாடநூல் கழகத்துக்குச் சொந்தமாக 22 கிடங்குகளும் உள்ளன. இந்த இடங்களுக்கு அனைத்துப் புத்தகங்களும் நேரடியாக அனுப்பப்படும். அங்கிருந்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் மூலமாக புத்தகங்கள் பள்ளிகளுக்கு விநியோகிக்கப்படும் என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment