இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Saturday, July 04, 2015

பி.எட்,எம்.எட் கல்லூரிகளுக்கு புதிய நடைமுறை

பி.எட்., கல்லுாரிகளில், இரண்டு ஆண்டுக்கான நடைமுறை வந்தால், பேராசிரியர் எண்ணிக்கையை, 16 ஆக அதிகரிக்க வேண்டும் என, கல்லுாரி முதல்வர்களுக்கு, கல்வியியல் பல்கலை அறிவுறுத்தியுள்ளது. தமிழக ஆசிரியர் கல்வியியல் பல்கலை சார்பில், பி.எட்., - எம்.எட்., மற்றும் பி.பி.எட்., படிப்பு நடத்தப்படுகிறது. இந்தப் படிப்பை, ஓர் ஆண்டிலிருந்து, இரண்டு ஆண்டாக மாற்ற வேண்டும்; புதிய விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என, தேசிய கல்வியியல் கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது.

இதற்கு தமிழக அரசும் அனுமதி கடிதம் அளித்துள்ளது. ஆனால், இதுகுறித்து நீதிமன்றத்திலுள்ள வழக்கின் தீர்ப்பின் படி, இறுதி முடிவு எடுக்கப்படும் என்று, தமிழக அரசு தெரிவித்து உள்ளது.இந்நிலையில், புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தால், என்னென்ன வசதிகள் வேண்டும் என, தமிழகத்திலுள்ள அனைத்து பி.எட்., கல்லுாரி முதல்வர்களுக்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக, வடமாவட்ட கல்வியியல் கல்லுாரி முதல்வர்கள் கூட்டம், சென்னையில் நடந்தது. இதில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலுார், வேலுார், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களின் கல்லுாரி முதல்வர்கள் பங்கேற்றனர்

.முதல்வர்களின் சந்தேகங்களுக்கு, கல்வியியல் பல்கலை துணைவேந்தர் விஸ்வநாதன் அளித்த பதில்: புதிய விதிமுறைகள் வந்தால், புதிய, இரண்டாண்டு பாடத்திட்டம் அமலாகும். ஒவ்வொரு கல்லுாரியிலும், முதல் ஆண்டு மாணவர்களுக்கு, எட்டு ஆசிரியர்களும்; அடுத்த ஆண்டில் அவர்கள், இரண்டாம் ஆண்டுக்கு மாறும்போது, அதற்கு, எட்டு ஆசிரியர்களும் தேவை.

எனவே, அடுத்த ஆண்டு முதல், ஒரே நேரத்தில், இரண்டு ஆண்டுகளின் மாணவர்களுக்கு பாடம் எடுக்க, குறைந்த பட்சம், 16 பேராசிரியர்கள் இருக்க வேண்டும். கூடுதல் ஆசிரியர் நியமனத்தை, அடுத்த ஆண்டுக்குள் முடிக்க வேண்டும். அடுத்த ஆண்டு முதல், இரு மடங்காகும் மாணவர்களுக்கு, கல்லுாரியில் கூடுதல் வகுப்பறைகள், விடுதி, ஆய்வக வசதிகள் இருக்க வேண்டும். இதற்கு, ஒவ்வொரு கல்லுாரியிலும், 26,800 சதுர அடி பரப்பளவாக, வகுப்பறை கட்டடத்தை அதிகரிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் அறிவுறுத்தினார்.

கூடுதல் சி.இ.ஒ பணியிடங்களை கலைக்க முடிவு

தமிழகத்தில், அனைவருக்கும் கல்வி இயக்க, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பணியிடங்கள், 10க்கும் மேற்பட்டவை காலியாக இருந்தும், அவை நிரப்பப்படாமல் இருப்பதால், அப்பணியிடங்களை கலைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல் பரவியுள்ளது.கல்வி அலுவலகங்கள்தமிழகத்தில் உள்ள பள்ளிகளை மேலாண்மை செய்யும் வகையில், கல்வி மாவட்டம் மற்றும் வருவாய் மாவட்ட அளவில், கல்வி அலுவலகங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இதில் கல்வி மாவட்ட அளவில், உயர்நிலை கல்வி வரை, கண்காணிக்க, மாவட்டக்கல்வி அலுவலரும், வருவாய் மாவட்ட அளவில், அனைத்து வகை பள்ளிகளுக்கும் பொறுப்பாக, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் பணிஇடங்களும் உள்ளனர்.மத்திய அரசின் திட்டமான அனைவருக்கும் கல்வி இயக்க பணிகளையும், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரே கவனித்து வந்தனர். இதனால், வேலைப்பளு அதிகரித்துள்ளதாக கோரிக்கை எழுந்த நிலையில், கூடுதல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டன.மாநிலத்தில் மேலும் 32 முதன்மைக்கல்வி அலுவலர், பதவி உயர்வு அடிப்படையில் நியமிக்கப்பட்டனர்.

இதனால், 64 பணியிடங்களாக அதிகரித்தது. இதில், ஓய்வு பெறுவோர் மற்றும் பதவி உயர்வு பெறுவோரின் பணியிடங்களை, அடுத்தடுத்த பதவி உயர்வு மூலம், நிரப்பப்பட்டு வந்தது.ஆனால், சமீப காலமாக, அனைவருக்கும் கல்வி இயக்கத்தில், நிதி ஒதுக்கீடு, ஆண்டுக்காண்டு குறைந்து கொண்டே வருகிறது. இதனால், கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலர் பணியிடங்களை, 'கலைக்க' முடிவு செய்துள்ளதாக, அலுவலர்களிடையே தகவல் பரவியுள்ளது.இதற்கேற்ப, நடப்பு கல்வியாண்டில், 10க்கும் மேற்பட்ட அனைவருக்கும் கல்வி இயக்க மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் பணியிடம் நிரப்பப்படாமல், அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரிடமே பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக கல்வியாண்டு துவக்கத்தில் வழங்கப்படும் பதவி உயர்வு, இப்போது வரை வழங்கப்படவில்லை.இந்த நிலையை அடுத்த ஆண்டு வரை, கடைபிடிக்கும் பட்சத்தில், கூடுதல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் பணியிடங்களை முற்றிலும் கலைக்கும் வகையில், எண்ணிக்கை குறைந்துவிடும். இதனால், நடப்பு கல்வியாண்டில், சி.இ.ஓ., பதவி உயர்வு கிடைக்கும் என, எதிர்பார்த்து காத்திருந்த, மாவட்டக்கல்வி அலுவலர்கள் பலர் ஏமாற்றம் அடைந்துஉள்ளனர்.

இதுகுறித்து கல்வித்துறை அலுவலர்கள் கூறியதாவது:அனைவருக்கும் கல்வி இயக்கத்தில், திட்ட நிதி ஒதுக்கீடும், வேலைப்பளுவும் வெகுவாக குறைந்துள்ளது. மேலும், ஒரு மாவட்டத்தில், இரு சி.இ.ஓ.,க்கள் இருப்பதால், 'ஈகோ' காரணமாக பணிகள் பாதிக்கப்பட்டது. இதனால், இனி கூடுதல் சி.இ.ஓ., பணியிடங்களை நிரப்பப்போவதில்லை என்ற முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. வாய்ப்பில்லை:பதவி உயர்வு மற்றும் ஓய்வு பெறும் முதன்மைக்கல்வி அலுவலர் பணியிடம் நிரப்பப்படாமல் விடும் போது, கூடுதல் எண்ணிக்கை குறைக்கப்பட்டுவிடும். 64 ஆக உள்ள, சி.இ.ஓ., பணியிடங்களை, 32 ஆக குறைக்க முடிவு செய்யும் பட்சத்தில், அடுத்த ஆண்டு வரை, சி.இ.ஓ., பதவி உயர்வுக்கு வாய்ப்பில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.

நல்லாசிரியர் விருது பெற யோகா அவசியம்

'அரசின் நல்லாசிரியர் விருதுக்கு, ஆசிரியர்களின் யோகா பயிற்சி மதிப்பெண்ணும் கணக்கிடப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள் உட்பட தகுதியான ஆசிரியர்கள், ஆகஸ்ட், 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். கடந்த, 2014 - 15க்கான நல்லாசிரியர் விருதுக்கு, ஆசிரியர்களை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதன்படி, அனைத்து அரசு, அரசு உதவி பெறும், தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களும், தனியார் மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களும், ஆகஸ்ட், 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என, இடைநிலை கல்வி இணை இயக்குனர் கார்மேகம் அறிவித்துள்ளார். நல்லாசிரியராக விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள்:

* 15 ஆண்டுகள் தொடர்ந்து பணியில் இருக்க வேண்டும்.
* கடந்த ஆண்டு செப்டம்பர், 30ம் தேதிக்கு முன் ஓய்வு பெற்றவராக இருக்கக்கூடாது.
* பள்ளிக்கு காலந் தவறாமல் வந்திருக்க வேண்டும்.
* தொடர்ந்து, மூன்று ஆண்டுகள் தன் வகுப்பு அல்லது பாடத்தில், 'சென்டம்' அல்லது அதிக தேர்ச்சி அளித்திருக்க வேண்டும்.
* தலைமை ஆசிரியராக இருந்தால், தன் பதவிக்காலத்தில் தேர்ச்சி அதிகரித்திருக்க வேண்டும்.
* என்.சி.சி.,யான தேசிய மாணவர் படை, என்.எஸ்.எஸ்., என்ற நாட்டு நலப்பணித்திட்டம், 'சாரண, சாரணியர் இயக்கம் போன்றவற்றிலும், யோகா பயிற்சி அளிப்பதிலும் பங்கெடுத்திருந்தால், அதற்கு தனி மதிப்பெண் வழங்கப்படும்.

வருமான கட்டவில்லை என ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்

அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களிடம் வருமான வரி பிடித்தம் செய்யப்பட்டும், வருமான வரித் துறையில் இருந்து, 'நோட்டீஸ்' வந்ததால், ஆசிரியர்கள் பீதி அடைந்து உள்ளனர். கல்வித் துறையின் நிர்வாக பிரச்னையால், இந்தக் குழப்பம் ஏற்பட்டு உள்ளது. அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களின், மாத ஊதியத்தில், வருமான வரித் தொகையான டி.டி.எஸ்., பிடித்தம் செய்யப்படுகிறது. மாதம் தோறும் இந்தத் தொகையைக் கல்வித் துறையின் நிதிப் பிரிவினர், வருமான வரித் துறை அலுவலகத்தில் செலுத்த வேண்டும்.

நிதி ஆண்டின் இறுதியில், ஆசிரியர்களுக்கு வருமான வரி விவரங்கள் அடங்கிய படிவம், வருமான வரித் துறையால் வழங்கப்படும். வருமானம் மற்றும் செலவு தொடர்பான, 'ரிட்டர்ன்' அறிக்கையை, ஆசிரியர்கள் தனித்தனியே தாக்கல் செய்வர். ஆனால், சில ஆண்டுகளாக, அரசு உதவி பெறும் பள்ளிகளின் பெரும்பாலான ஆசிரியர்களுக்கு வருமான வரி பிடித்தம் செய்தும், அந்த தொகையை, வருமான வரித் துறையில் செலுத்தவில்லை. அதனால், வருமான வரித் துறையில் இருந்து அவர்களுக்கு 'நோட்டீஸ்' வந்துள்ளது. இதனால், ஆசிரியர்கள் அச்சம் அடைந்து உள்ளனர். ஆசிரியர்களிடம் மாதச் சம்பளத்தில் வருமான வரி பிடித்தம் செய்யப்படுகிறது.

ஆனால், நாங்கள் வரி கட்டவில்லை என்பது போல், நோட்டீஸ் வருகிறது. இதனால், வங்கிகளில் கடனும் பெற முடியவில்லை ஆசிரியர்கள் இந்தப் பிரச்னை குறித்து, நிதித் தணிக்கை செய்து வருகிறோம். அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான இணையதளத்தில் உள்ள பிரச்னையால், குழப்பம் ஏற்பட்டு உள்ளது. விரைவில் சரி செய்யப்பட்டு விடும். இதுகுறித்து, வருமான வரித்துறை அதிகாரிகளிடம் கடிதம் கொடுக்க உள்ளோம் கல்வி துறையினர்

Friday, July 03, 2015

மருந்துகள் குறித்து புகார் தெரிவிக்க தனி இணையதளம்

மருந்துகள் குறித்து புகார் தெரிவிப்பதற்கு புதிய இணையதள சேவை தொடங்கப்பட்டுள்ளது என மத்திய மருந்துகள் துறைச் செயலர் வி.கே.சுப்புராஜ் தெரிவித்தார். இந்த அறிவிப்பு இந்தியா முழுவதிலும் உள்ள 7 லட்சம் மருந்துக் கடைகளிலும் வெளியிடப்படும் என்று அவர் தெரிவித்தார். இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: இந்தியாவில் ஆண்டுக்கு ரூ. 2 லட்சம் கோடி மதிப்பிலான மருந்துகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அவற்றில் ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான மருந்துகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள மருந்துகள் உள்நாட்டுத் தேவைகளுக்காக பயன்படுத்தப்படுகிறது. தரம் குறைவு: இந்தியாவில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்து உற்பத்தியாளர்கள் உள்ளனர். ஆனால், அவற்றில் 15 சதவீதம் பேர் மட்டுமே உலக சுகாதார நிறுவனத்தின் தர நிர்ணய நெறிமுறைகளுக்கு உள்பட்டு மருந்துகளைத் தயாரிக்கின்றனர். இந்திய மருந்து உற்பத்தியாளர்கள் தரத்தில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். பெரும்பாலான உற்பத்தியாளர்கள் குறைவான காலத்தில் அதிகமான மருந்துகளைத் தயாரிக்க வேண்டும் என்று நினைக்கின்றனர்.

தரத்தைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. இதனால், முன்னணி நிறுவனங்களின் மருந்துகளைக்கூட சில நாடுகள் நிராகரித்துவிடுகின்றன. புகார்: இந்தியாவைப் பொருத்தவரை போலி மருந்துகள் உற்பத்தி மிக மிகக் குறைவாகக் காணப்படுகிறது. இந்தியாவில் 0.003 சதவீதம் மட்டுமே போலி மருந்துகள் உற்பத்தி செய்யப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் போலி மருந்து உற்பத்தியைத் தடுப்பதற்கான கண்காணிப்பு அதிகமாக உள்ளது. அதன்படி, மத்திய மருந்து விலை நிர்ணய ஆணையத்தின் இணையதளமான www.nppaindia.nic.in -இல் "பார்மா ஜன் சமாதன்' என்ற இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த இணையதள இணைப்பில் சென்று மருந்துகள் தொடர்பான புகாரை நேரடியாகத் தெரிவிக்கலாம்.

புகார்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்தியாவில் 7 லட்சம் மருந்துக் கடைகள் உள்ளன. தமிழகத்தைப் பொருத்தவரை 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்துக் கடைகள் உள்ளன. இந்தக் கடைகளில் புதிய இணையதளம் தொடர்பான அறிவிப்புகள் ஒட்டப்பட உள்ளன. அத்தியாவசிய மருந்துகள் விலை குறைவு: கடந்த ஓராண்டில் சர்க்கரை நோய், இருதய நோய், ஜீரணம் தொடர்பான நோய்கள், உயிர் காக்கும் மருந்துகள், நோய் எதிர்ப்பு சக்திக்கான மருந்துகள் உள்ளிட்ட 150 அத்தியாவசிய மருந்துகளின் விலை குறைக்கப்பட்டுள்ளன. காப்புரிமை பெறப்பட்ட வெளிநாட்டு மருந்துகளின் விலைதான் அதிகரித்துக் காணப்படுகிறது தெரிவித்தார்.

தனியார் பள்ளி அரசு ஒதுக்கீட்டில் 51685 காலி இடங்கள்

இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி, தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கான 25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் 51 ஆயிரத்து 685 இடங்கள் காலியாக உள்ளன. இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, சிறுபான்மையினர் அல்லாத தனியார் பள்ளிகளில் அறிமுக வகுப்புகளில் ஏழை, நலிவடைந்த பிரிவினருக்கு 25 சதவீத இடங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும். இந்த ஒதுக்கீட்டின் கீழ், ஜூன் 30-ஆம் தேதியன்று காலியாக உள்ள இடங்களின் விவரங்களை மெட்ரிக். பள்ளிகள் இயக்ககம் வியாழக்கிழமை வெளியிட்டது.

அதன் அடிப்படையில், எல்.கே.ஜி. உள்ளிட்ட அறிமுக வகுப்புகளில் சுமார் 4 லட்சம் இடங்கள் உள்ளன. அவற்றில் 25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் 1 லட்சத்து 17 ஆயிரத்து 480 இடங்கள் உள்ளன. இவற்றில் 65,795 இடங்களில் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். பெரும்பாலும் எல்.கே.ஜி. வகுப்புகளில் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். 51 ஆயிரத்து 685 இடங்கள் காலியாக உள்ளன. மெட்ரிக் பள்ளிகளைப் பொருத்த வரை, 3,673 பள்ளிகளில் எல்.கே.ஜி. உள்ளிட்ட அறிமுக வகுப்புகளில் 2 லட்சத்து 42 ஆயிரத்து 385 இடங்கள் உள்ளன. இவற்றில் 25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் 61,875 இடங்கள் உள்ளன. இதில் 39,329 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. 22,546 இடங்கள் காலியாக உள்ளன.

மழலையர் பள்ளிகள், தொடக்கப் பள்ளிகளைப் பொருத்த வரை, 5,314 பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீட்டுக்கு 55,605 இடங்கள் உள்ளன. இவற்றில் 26,466 இடங்களில் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். 29,139 இடங்கள் காலியாக உள்ளன. சென்னையில் 60 பள்ளிகளில் சேர்க்கை இல்லை: சென்னை மாவட்டத்தைப் பொருத்த வரை, மொத்தமுள்ள 304 மெட்ரிக் பள்ளிகளில் 60 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட இந்த ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கப்படவில்லை. இந்தப் பள்ளிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக மெட்ரிக் பள்ளிகள் இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனர். அதேபோல, சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் இந்த ஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கை விவரங்கள் கோரப்பட்டுள்ளன.

அந்த விவரங்கள் கிடைக்காததால் இத்துடன் சேர்த்து வெளியிடப்படவில்லை. விவரங்கள் கிடைத்ததும் இணையதளத்தில் வெளியிடப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர். விண்ணப்பங்களை எங்கே பெறலாம்? இந்த மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்திடமிருந்தோ, www.tnmatricschools.com என்ற இணைதளத்திலிருந்தோ பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்திடமோ அல்லது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகம், மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் அலுவலகம், உதவி தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகம் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு அலுவலகத்திலோ விண்ணப்பத்தை அளித்து சேர்க்கை பெறலாம். இந்த ஒதுக்கீட்டின் கீழ் உள்ள இடங்களில் நவம்பர் 30-ஆம் தேதி வரை மாணவர்களைச் சேர்க்கலாம்.

E.L details

ஈட்டிய விடுப்பு (EL) பற்றிய முழு விளக்கங்கள்:
⚡தகுதிகாண் பருவத்தில்உள்ளவர்கள் EL எடுத்தால்probation periodதள்ளிப்போகும்.

⚡பணியில் சேர்ந்து ஒரு வருடம்முடிந்ததும் ஈட்டியவிடுப்பினை ஒப்படைத்து பணமாகப்பெறலாம். ஆண், பெண்இருவரும். தகுதிகாண் பருவம் முடிக்கும்முன்பு (பணியில் சேர்ந்து 2வருடங்களுக்குள்)மகப்பேறு விடுப்பு எடுத்தால்அந்த வருடத்திற்கான EL -ஐஒப்படைக்க முடியாது. ELநாட்கள் மகப்பேறு விடுப்புடன்சேர்த்துக்கொள்ளப்படும்.(உதாரணமாக - அவரது கணக்கில் 10 நாட்கள் EL உள்ளது என்றால் மகப்பேறு விடுப்பில் அந்த 10 நாட்களை கழித்துவிட்டு (180-10=170) மீதம் உள்ள 170 நாட்கள் மட்டுமே வழங்கப்படும்.எனவே மகப்பேறு விடுப்பு எடுக்கும் முன்பே கணக்கில் உள்ள EL-ஐ எடுத்துவிடுவது பயனளிக்கும்)

⚡வருடத்திற்கு 17 நாட்கள் EL.அதில் 15நாட்களை ஒப்படைத்து பணமாகப்பெறலாம் .

⚡மீதமுள்ள 2 நாட்கள்சேர்ந்துகொண்டே வரும்அதை ஓய்வுபெறும்பொழுது ஒப்படைத்து பணமாகப்பெறலாம்.

⚡21 நாட்கள் ML எடுத்தால்ஒரு நாள் EL கழிக்கப்படும்.

��வருடத்திற்கு மொத்தம் 365நாட்கள்.இதை 17ஆல் (EL)வகுத்தால் 365/17=21.

⚡ எனவே 21 நாட்கள் MLஎடுத்தால் ஒரு நாள் EL என்றகணக்கில் கழிக்கப்படுகிறது.

⚡மகப்பேறு விடுப்பு எடுத்த வருடத்தில் ஈட்டிய விடுப்பு ஒப்படைக்கும் பொழுது , மகப்பேறு விடுப்பு எடுத்த 6 மாதங்கள் , மற்றும் ML எடுத்த நாட்கள் தவிர்த்து மீதம் வேலை செய்த நாட்களை 21 ஆல் வகுத்து EL கணக்கிடப்படும்.ML & EL எடுத்தது போக மீதம் உள்ள வேலை செய்த நாட்களுக்கு மட்டுமே EL கணக்கிடப்படும்.(CL & RH கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது)

⚡ ஒரு நாள் மட்டும் ELதேவைப்படின்எடுத்துக்கொள்ளலாம்.

⚡ அரசு ஊழியர்களுக்கு மட்டும்வருடத்திற்கு 30 நாட்கள் EL(ஆசிரியர்களுக்கு 17 நாட்கள்மட்டுமே). அதில் 15நாட்களை ஒப்படைக்கலாம்.மீதம் உள்ள 15 நாட்கள்சேர்ந்துகொண்டே வரும்..அதிகபட்சமாக 240 நாட்களைச்சேர்த்து வைத்து ஒப்படைக்கலாம்.அதற்கு மேல்சேருபவை எந்தவிதத்திலும்பயனில்லை.

மாறுதல் / பதவி உயர்வு /⚡பணியிறக்கம் / நிரவல் போன்றநிகழ்வுகளின் போது பழையஇடத்திற்கும் புதியஇடத்திற்குமிடையே குறைந்தது 8கி.மீ (ரேடியஸ்) இருந்தால்அனுபவிக்காதபணியேற்பிடைக்காலம் ELகணக்கில் சேர்த்துக்கொள்ளப்படும். இதற்கு 30நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.  90 நாட்களுக்குள் கணக்கில் சேர்க்கப்பட வேண்டும். (குறைந்தது 5நாட்கள். 160 கி.மீக்கு மேற்படின்அட்டவணைப்படி நாட்களின்எண்ணிக்கை அதிகரிக்கும்)

⚡ஒருமுறை சரண்டர் செய்தஅதே தேதியில் தான்ஆண்டுதோறும் செய்யவேண்டும் என்ற கட்டாயம்இல்லை.கணக்கீட்டிற்கு வசதியாகஇருக்கவும் Pay Rollல் விவரம்குறிக்க எளிமையாகஅமையவும் ஒரே தேதியில்ஆண்டுதோறும்அல்லது இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை சரண்செய்வது சிறந்தது.
எவ்வாறாயினும் ஒரு ஒப்படைப்பு நாளுக்கும்அடுத்தஒப்படைப்பு நாளுக்குமிடையே 15நாட்கள் ஒப்படைப்பெனில்ஓராண்டு / 30 நாட்கள்ஒப்படைப்பெனில்இரண்டாண்டு இடைவெளி இருக்கவேண்டும்.

⚡ஒப்படைப்பு நாள் தான்முக்கியமே தவிரவிண்ணப்பிக்கும்தேதியோ,அலுவலர் சேங்க்ஷன் செய்யும்தேதியோ, ECS ஆகும்தேதியோ அடுத்தமுறை ஒப்படைப்பு செய்யும்போது குறிக்கப்படவேண்டியதில்லை.
⚡EL ஒப்படைப்பு நாளின்போது குறைந்தஅளவு அகவிலைப்படியும்பின்னர் முன்தேதியிட்டு DAஉயர்த்தப்படும்போது ஒப்படைப்பு நாளில்அதிக அகவிலைப்படியும்இருந்தால் DA நிலுவையுடன்சரண்டருக்குரியநிலுவையையும்சேர்த்து சுதந்தரித்துக்கொள்ளலாம். ஊக்க ஊதியம்முன்தேதியிட்டுப் பெற்றாலும்நிலுவைக் கணக்கீட்டுக்காலத்தில்ஒப்படைப்பு தேதி வந்தால்சரண்டர் நிலுவையும் பெறத்தகுதியுண்டு.

⚡பணிநிறைவு / இறப்பின்போது இருப்பிலுள்ள ELநாட்களுக்குரிய (அதிகபட்சம்240) அப்போதைய சம்பளம்மற்றும்அகவிலைப்படி வீதத்தில்கணக்கிடப்பட்டு திரள்தொகையாகஒப்பளிக்கப்படும்.

⚡அதிகபட்சம் தொடர்ந்து 180 நாட்கள் ஈட்டிய விடுப்பு எடுக்கலாம். அதனைத் தொடர்ந்து மருத்துவ விடுப்பு எடுக்கலாம்.180 நாட்களுக்குமேற்பட்ட விடுப்புக்கு வீட்டுவாடகைப்படி கிடைக்காது

நல்லொழுக்க கல்வி

மாணவர்களிடம், போதை பழக்கம் மற்றும் வன்முறை கலாசாரம் பரவுவதை தடுக்க, தமிழக அரசு பள்ளிகளில், இந்த ஆண்டு முதல் நல்லொழுக்க கல்வி துவக்கப்படுகிறது. தமிழக அரசு பள்ளிகள், பல துறைகளின் கீழ் இயங்கி வருகின்றன. இவற்றில், விழுப்புரம், கரூர், மதுரை, ராமநாதபுரம், தேனி, திருச்சி, விருதுநகர், துாத்துக்குடி, திருநெல்வேலி உட்பட, சில மாவட்டங்களில், ஒரு சில பள்ளிகளில், மாணவர்கள் பள்ளிக்கே, மது அருந்தி விட்டு வருவது;

மாணவியரை கிண்டல் செய்வது போன்ற நடவடிக்கைகள், கடந்த கல்வி ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டன.பல பள்ளிகளில், ஆசிரியைகள் பணிக்கு செல்லவே அச்சப்படும் அளவுக்கு, சில மாணவர்கள் முரட்டுத்தனமாகவும், ஒழுக்கமின்றியும் நடந்து கொள்வதாக புகார்கள் உள்ளன.இதுகுறித்து, கல்வித் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். சிறுபான்மையினர் பள்ளிகள் மற்றும் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில், நல்லொழுக்க பாடம் கற்றுத் தந்து, மாணவர்களை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது கண்டறியப்பட்டது. அதன்படி, இந்த ஆண்டு முதல், அரசு பள்ளிகளில் நல்லொழுக்க கல்வியை அறிமுகப்படுத்த, கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

இதற்கு என, சிறப்பு பாடத்திட்டம் மற்றும் கையேட்டை, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் தயாரித்துள்ளது.இந்த கையேட்டின்படி, பெற்றோர், ஆசிரியர், உறவினர்கள், சக மாணவ, மாணவியர் ஆகியோரிடம், எப்படி மரியாதையுடன், நட்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் என, மாணவர்களுக்கு கற்று தரப்படும்.மது, புகையிலை பொருட்கள் மற்றும் செயற்கையான பலவித போதை வஸ்துக்களால் ஏற்படும் பாதிப்புகள்; குடும்ப எதிர்காலம் மற்றும் மாணவர்களின் எதிர்காலம் சீரழியும் நிலை, மாணவர்கள், மாணவியரிடமும்; மாணவியர், மாணவர்களிடமும் நடந்து கொள்ளும் முறை குறித்து பயிற்றுவிக்கப்படும்.

''நல்லொழுக்க கல்விக்கான பாடங்களை தயார் செய்து விட்டோம்; இதற்கு, தனியாக சான்றிதழ் வழங்குவது பற்றி பரிசீலிக்கப்படுகிறது; அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, விரைவில் பயிற்சி அளிக்கப்படும். ராமேஸ்வர முருகன், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர்.