இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, June 17, 2015

அதிக கட்டண விவகாரம் தனியார் பள்ளிகளை கட்டுப்படுத்த புதியசட்டம்

தமிழகம் அதிக கட்டண விவகாரம் தனியார் பள்ளிகளை கட தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளை கட்டுப்படுத்த தமிழக அரசு புதிய சட்டம் இயற்ற உள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல் தெரிவித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், பாமகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.வேலு தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

ஏழை மாணவர்கள் நலனுக்காக தமிழக அரசு சமச்சீர் கல்வி முறையையும், மத்திய அரசு கட்டாய கல்வி உரிமைச் சட்டம் முறையையும் கொண்டு வந்தது. அது வந்த பிறகும் தனியார் பள்ளிகளை கட்டுப்படுத்த சட்டம் எதுவும் இதுவரை இல்லை. ஏற்கனவே உள்ள பழைய சட்டம், மெட்ராஸ் பல்கலைக்கழகம் பள்ளிக்காக ஆங்கிலேயர் காலத்தில் கொண்டு வரப்பட்டது. எனவே, தனியார் பள்ளிகளை கட்டுப்படுத்த ஒரு புதிய சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று அரசுக்கு பல முறை கடிதம் எழுதியும் மனு அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தனியார் பள்ளிகளில் அதிகமாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இதனால் பெற்றோர், மாணவர்கள் பெரிதும் சிரமப்படுகிறார்கள். மாணவர்கள் சேர்ககையின்போது பள்ளிகள் தன்னிச்சையாக செயல்படுகிறது. எனவே தனியார் பள்ளிகளை அரசு கட்டுப்படுத்த புதிய விதிமுறைகளை வகுத்து சட்டம் இயக்கவேண்டும் இவ்வாறு அவர் மனுவில் கூறியுள்ளார். இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக பள்ளிக் கல்வித்துறை செயலாளருக்கு, ஏற்கனவே உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இந்த நிலையில், இந்த மனு தலைமை நீதிபதி கவுல், நீதிபதி புஷ்பாசத்தியநாராயணன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது பள்ளிக் கல்வித்துறை இணை செயலாளர் அழகேசன் சார்பாக அரசு சிறப்பு வக்கீல் கிருஷ்ணகுமார் ஆஜராகி பதில் மனு தாக்கல் செய்தார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன் உள்ளிட்ட பள்ளிகளை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த புதிய சட்டங்கள் கொண்டு வர உயர்நிலை குழு அமைக்கப்பட உள்ளது. இந்த புதிய சட்டம், சமச்சீர் கல்விச் சட்டம், கட்டாய கல்வி உரிமைச் சட்டம் ஆகியவைகளை உள்ளடங்கியதாக இருக்கும். எனவே, இந்த உயர் நீதிமன்றம் கால நிர்ணயம் செய்யும்பட்சத்தில், அந்த காலத்துக்குள் தனியார் பள்ளிகளை கட்டுப்படுத்தும் புதிய சட்டத்தை தமிழக அரசு கொண்டு வரும். எனவே, இந்த மனுவை தள்ளுபடி செய்யவேண்டும். இவ்வாறு அவர் பதில் மனுவில் கூறியிருந்தார். பின்னர் இந்த வழக்கில் மனுதாரர் சார்பாக வக்கீல்கள் வி.செல்வராஜ், கே.பாலு ஆகியோர் ஆஜராகி, உயர் நீதிமன்றம் பல முறை உத்தரவிட்டும் அரசு அதை அமல்படுத்தவில்லை. எனவே கால கெடு நிர்ணயிக்கவேண்டும் என்றனர்.

உடனே தமிழக அரசு சார்பாக அட்வகேட் ஜெனரல் சோமையாஜி ஆஜராகி, தனியார் பள்ளிகளை கட்டுப்படுத்த சட்டம் கொண்டு வர எவ்வளவு கால கெடு தேவை என்று அரசிடம் கேட்டு பதில் அளிக்கிறேன் என்றார். இதை கேட்ட நீதிபதிகள் நாளைய தினம், கால கெடுவை அரசு தெரியப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்

தமிழக அரசுத்துறையில் பணியாற்றுவோர் ஆதார் எண்ணை சமர்ப்பிக்க வேண்டும்

தமிழக அரசுத் துறைகளில் பணியாற்றும் ஊழியர்களின் அடிப்படை விவரங்களுடன் ஆதார் எண்ணையும் பதிவு செய்ய வேண்டும் என்று கருவூலத் துறை அறிவுறுத்தியது. தமிழக அரசு ஊழியர்களில் பலருக்கும் ஆதார் எண் இல்லாத காரணத்தால், கருவூலத் துறையின் இந்த அறிவிப்பு அவர்களை பதற்றம் அடையச் செய்துள்ளது.

இதனால், இந்த மாதத்துக்கான ஊதியத்தில் ஏதேனும் பிரச்னை ஏற்படுமோ என்றும் ஊழியர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். தமிழகம் முழுவதும் பொதுமக்களிடம் அடிப்படைத் தகவல்களைச் சேகரித்து அவர்களுக்கு ஆதார் எண் வழங்கப்பட்டு வருகிறது. இந்தப் பணிகள் முழுமையான அளவில் முடிக்கப்படவில்லை. இதனால், எந்தத் துறையிலும் ஆதார் எண்ணை இதுவரை கட்டாயமாக்கவில்லை. கருவூலத் துறையின் திடீர் உத்தரவு: எந்தப் பணிகளுக்கும் ஆதார் எண் கட்டாயமில்லை என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், தமிழக அரசின் கருவூலத் துறை வெளியிட்டுள்ள அறிவுறுத்தல் அரசு ஊழியர்களை அச்சமடையச் செய்துள்ளது.

இதுகுறித்து கருவூலத் துறை வெளியிட்ட கடித விவரம்: தமிழக அரசுத் துறைகளில் பணியாற்றும் அனைத்துப் பணியாளர்களின் ஊதியப் பட்டியல்கள் இணையதளத்தில் தயார் செய்யப்பட்டு அனுப்பப்பட்டு வருகின்றன. அதில், பணியாளர்கள் அனைவரின் அடிப்படை விவரங்களும் பதிவு செய்து வைக்கப்பட்டுள்ளன. இப்போது இந்த அடிப்படை விவரங்களுடன் ஆதார் எண் விபரத்தையும் பதிவேற்றம் செய்யுமாறு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. எனவே, இணையதளத்தில் ஊதியப் பட்டியல் தயாரிக்கும் பணியில் ஈடுபடும் அனைத்து அரசு அலுவலகங்களும் தங்களது அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களின் அடிப்படை விபரங்களில் ஆதார் எண்ணை பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்தப் பணியை ஜூன் மாத ஊதியப் பட்டியல் சமர்ப்பிக்கும்போது முழுமையாக முடிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

சம்பளம் கிடைக்குமா? அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 15-ஆம் தேதி சம்பளப் பட்டியல் தயாரிக்கப்பட்டு, 19-ஆம் தேதிக்குள் கருவூலத் துறையிடம் வழங்கப்பட்டு விடும். இந்த நிலையில், பெரும்பாலான அரசு ஊழியர்களுக்கு ஆதார் எண் இல்லாத காரணத்தால் அதை இந்த மாதத்துக்குள்ளே (ஜூன்) முடிக்க முடியுமா என்று அரசு ஊழியர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர். இதனால், ஜூன் 30-ஆம் தேதி சம்பளம் கிடைக்குமா என்று தெரியவில்லை எனவும், ஆதார் எண்ணை சமர்ப்பிக்க போதிய காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டும் என்றும் அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

நெட் தேர்வு முடிவு இணையத்தில் வெளியீடு

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) சார்பில், கடந்த டிசம்பர் மாதம் நடத்தப்பட்ட "நெட்' தகுதித் தேர்வு முடிவுகள் நீண்ட தாமதத்துக்குப் பிறகு வெளியிடப்பட்டுள்ளது. cbseresults.nic.in என்ற இணையதளத்தில் கடந்த திங்கள்கிழமை இரவு இந்த முடிவுகள் வெளியிடப்பட்டன.

பல்கலைக்கழக, கல்லூரி உதவிப் பேராசிரியர் பதவிக்கு தகுதி பெறுவதற்கும், மத்திய அரசின் இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெறுவதற்கும் ஒவ்வொரு ஆண்டும் ஜூன், டிசம்பர் மாதங்களில் தேசிய அளவிலான தகுதித் தேர்வு "நெட்' நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வை யுஜிசி நடத்தி வந்தது. கடந்த 2014 டிசம்பர் மாதம் முதல் இந்தத் தேர்வை நடத்தும் பொறுப்பை சி.பி.எஸ்.இ. வசம் யுஜிசி ஒப்படைத்தது. அதன்படி, டிசம்பர் மாதத் தேர்வை சி.பி.எஸ்.இ. நடத்தியது. இந்த நிலையில் அடுத்த "நெட்' தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு, தேர்வு தேதியும் நெருங்கிய நிலையில், டிசம்பர் மாதத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படாமல் இருந்தது.

யுஜிசி, சி.பி.எஸ்.இ. இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடே தேர்வு முடிவுகள் வெளியிடாததற்கு காரணம் என கூறப்பட்டது. இப்போது பிரச்னை முடிவுக்கு வந்துவிட்டது. ஜூன் 5 அல்லது 6-ஆம் தேதிகளில் நிச்சயம் முடிவுகள் வெளியிடப்பட்டு விடும் என யுஜிசி துணைத் தலைவர் ஹெச். தேவராஜ் தெரிவித்திருந்தார். ஆனால், அப்போதும் முடிவுகள் வெளியிடப்படவில்லை. இந்த நிலையில் திங்கள்கிழமை இரவு (ஜூன் 15) தேர்வு முடிவுகளை சி.பி.எஸ்.இ. வெளியிட்டது. தேர்வு பதிவு எண், பிறந்த தேதியைப் பதிவு செய்து தேர்வர்கள் முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம்.

தேர்வர்கள் எடுத்துள்ள மதிப்பெண், கட்-ஆஃப் மதிப்பெண் என்பன உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இதில் வெளியிடப்பட்டுள்ளன.

Tuesday, June 16, 2015

தமிழக பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள மழலையர் பள்ளிக்கான வரைவு விதி

அங்கீகாரம்
ஏற்கனவே தொடங்கப்பட்ட, புதிதாக தொடங்கப்பட உள்ள அனைத்து மழலையர் பள்ளிகளும், இந்த புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்த நாளில் இருந்து 3 மாதங்களுக்குள் தங்களது பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெறவேண்டும். இந்த அங்கீகாரங்களை வழங்கும் அதிகாரம் கொண்ட அதிகாரி, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ஆவார். அங்கீகாரத்தை வழங்குவதற்கு முன்பு, சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு நேரில் சென்று அந்தந்த மாவட்ட உதவி தொடக்கக் கல்வி அலுவலர் (நர்சரி), உதவி தொடக்கக் கல்வி அலுவலர் ஆகியோர் கொண்ட கமிட்டி ஆய்வு செய்யவேண்டும். அதன்பின்னர் அந்த பள்ளிக்கு அங்கீகாரம் வழங்குவதா? அல்லது நிராகரிப்பதா? என்பதை ஒரு மாதத்துக்குள் முடிவு செய்து உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.
தரைத்தளம்
இவ்வாறு வழங்கப்படும் அங்கீகாரத்தை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பந்தப்பட்ட பள்ளிகள் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். இப்போது உருவாக்கப்பட்டுள்ள விதிமுறைகளை மீறினாலோ, தவறாக பயன்படுத்தினாலோ சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட அங்கீகாரத்தை அதிகாரிகள் திரும்பப் பெறலாம்.

மழலையர் பள்ளிகள் சொந்த கட்டிடம் அல்லது குத்தகைக்கு கட்டிடத்தில் இயங்கவேண்டும். குத்தகை கட்டிடம் என்றால், அந்த குத்தகை ஒப்பந்தம் 5 ஆண்டுகளுக்கு குறையாமல் இருக்க வேண்டும். பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டியிருக்க வேண்டும். முள்வேலி, பிறவகை வேலிகள் அமைக்கக் கூடாது. வகுப்பு அறையில் ஒரு குழந்தைக்கு 10 சதுர அடி இடம் ஒதுக்கப்படவேண்டும். வகுப்புகள் அனைத்தும் தரைத்தளத்தில் இருக்க வேண்டும். வகுப்பறையில் இரண்டு நுழைவு வாயில்கள் இருக்க வேண்டும். அந்த கதவுகள், ஜன்னல் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்க வேண்டும்.

குற்ற பின்னணி
தண்ணீர் வசதியுடன் கழிவறை வசதிகள், குடிநீர் வசதிகள், திறந்த வெளி நிலம், விளையாட்டு மைதானம் இருக்க வேண்டும். பள்ளிக்கூடத்தில் நுழைவு வாயில், வாகனங்கள் அதிகம் செல்லும் சாலையை ஒட்டியும், குப்பை கொட்டும் பகுதிக்கு அருகிலும் இருக்கக்கூடாது. தீயணைப்பு எந்திரங்கள் வைத்திருக்க வேண்டும். 15 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற வீதத்தில் ஆசிரியர் பட்டயப் பயிற்சி முடித்த தகுதியான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு உதவியாளர்கள், ஆசிரியர் அல்லாத ஊழியர்களை நியமிக்க வேண்டும். ஆசிரியர்கள், உதவியாளர்கள், ஊழியர்கள் ஆகியோரை நியமிப்பதற்கு முன்பு அவர்கள் குற்ற பின்னணி உடையவர்களா? என்பதை உள்ளூர் போலீசாரிடம் பள்ளி நிர்வாகம் சரி பார்க்கவேண்டும்.

அவர்கள் தொற்று நோய் எதுவும் இல்லை என்பதை அரசு ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்து சான்றிதழ் பெற வேண்டும்.
மருத்துவ வசதி
இந்த பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 31-ந் அன்று ஒன்றரை வயது பூர்த்தியான குழந்தைகளை மட்டும் சேர்க்க வேண்டும். வயது வரம்பில் எந்த விலக்கும் அளிக்கக்கூடாது. ஒரு வகுப்பு அறைக்கு 15 குழந்தைகளை மட்டுமே சேர்க்கவேண்டும். அதற்குமேல் குழந்தைகளை சேர்க்க தடை விதிக்கப்படுகிறது.
பள்ளியை சுற்றி ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்குள் வசிக்கும் குழந்தைகளை மட்டுமே பள்ளியில் சேர்க்க வேண்டும். காலை 9.30 மணி முதல் 1.30 மணி வரை வேலை நேரமாக இருக்கவேண்டும்.

ஒரு மணி நேரத்துக்கு 15 நிமிடம் இடைவேளை வழங்க வேண்டும். பள்ளிக்குள் நுழையும்போது, வீட்டுக்கு செல்லும்போதும் குழந்தைகள் குறித்த விவரங் களை பதிவேட்டில் பதிவு செய்யவேண்டும். முதலுதவி வசதி, மருத்துவ வசதி இருக்க வேண்டும்.
அடித்தால் வழக்கு
பள்ளி ஆசிரியர்கள் குழந்தைகளை ஒருபோதும் அடிக்கக்கூடாது. ஒருவேளை குழந்தைகளை அடித்தால், அந்த பள்ளி நிர்வாகம் மீது கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

குழந்தைகளின் பெற்றோரின் வீட்டு முகவரி, இ-மெயில், தொலைப்பேசி எண் ஆகியவை வைத்திருக்க வேண்டும். குழந்தைகளுக்கு விளையாட்டு, இசை, மழலை பாடல்கள், கலை உள்ளிட்டவைகளை சொல்லிக் கொடுக்க வேண்டும்.
பள்ளி வாகனங்கள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும். 20 முதல் 30 நிமிடங்களுக்கு மேல் பயணம் நேரம் இருக்கக்கூடாது. வாகனத்தில் ஓட்டுனர்கள், நடத்துனர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டிருக்க வேண்டும். உதவி தொடக்கக் கல்வி அலுவலர் இந்த பள்ளிகளை எப்போது வேண்டுமானாலும் ஆய்வு செய்யலாம்.
இவை உள்பட ஏராளான விதிமுறைகள் அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

பத்தாம் வகுப்பு துணைத்தேர்வுக்கு நாளை ஹால் டிக்கெட்

பத்தாம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு 26ம் தேதி சிறப்பு துணைத் தேர்வு நடக்க இ ருக்கிறது. இந்த தேர்வு எழுத விண்ணப்பித்தவர்கள் (தட்கல் உள்பட) நாளை முதல் www.tndge.in என்ற இணைய தளத்தில் இருந்து தங்களின் ஹால்டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேற்கண்ட இணைய தளத்தில் சென்று ‘‘SSLC EXAM JUNE/JULY 2015 -PRIVATE CANDIDATE-HALL TICKET PRINTOUT’’ என்ற வாசகத்தை ‘‘Click’’ செய்து தோன்றும் பக்கத்தில் தங்களின் மார்ச் 2015 தேர்வின் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்தால் அவர்களின் ஹால்டிக்கெட் திரையில் தோன்றும். அதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

எழுத்து தேர்வு மற்றும் செய்முறை அடங்கிய அறிவியல் பாடத்தில் செய்முறைத் தேர்வில் 15 மதிப்பெண்களுக்கு குறைவாக பெற்று தேர்ச்சி அடையாதவர்கள் கண்டிப்பாக செய்முறைத் தேர்வு எழுத வேண்டும். மார்ச் மாதம் நடந்த தேர்வின்போது அறிவியல் பாட செய்முறைத் தேர்வுக்கு வராதவர்கள் இப்போது நடக்க உள்ள சிறப்பு துணைத் தேர்வு அறிவியல் பாட செய்முறைத் தேர்வு எழுதுவதோடு எழுத்து தேர்வையும் மீண்டும் எழுத வேண்டும்.

ஆய்வக உதவியாளர் நியமனம் வெயிட்டேஜ் அடிப்படையில் நடைபெறும்

பள்ளிகளில் நியமிக்கப்படும் ஆய்வக உதவியாளர் பணிக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் நியமனம் செய்யப்படும் என்று தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் உள்ள ஆய்வகங்களில் 4,362 உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களை நிரப்ப தமிழக பள்ளிக் கல்வித்துறை கடந்த மே 31ம் தேதி தமிழகம் முழுவதும் எழுத்துத் தேர்வு நடத்தியது. இந்த தேர்வை சுமார் 8 லட்சம் பேர் எழுதியுள்ளனர்.

இந்த தேர்வு முறையை எதிர்த்து காஞ்சிபுரத்தை சேர்ந்த சதீஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், அவர் கூறியிருப்பதாவது:- ஆய்வக உதவியாளர் பணிக்கு போட்டித் தேர்வு மூலம் ஆட்களை தேர்வு செய்ய அரசு தேர்வுத்துறை இயக்குனர் வெளியிட்ட அறிவிப்பின் அடிப்படையில், கடந்த மே 31ம் தேதி தமிழகம் முழுவதும் எழுத்துத் தேர்வும் நடந்தது. இந்த எழுத்துத் தேர்வு, ஆட்களை குறைப்பதற்காக நடத்தப்பட்டுள்ளது. அதாவது எழுத்து தேர்வில் பெறப்படும் மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது என்றும் நேர்முகத் தேர்வில் 25 மதிப்பெண்களுக்கு ஒவ்வொருவரும் பெறும் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிரானது. எனவே, இந்த தேர்வு நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். கடந்த ஏப்ரல் 22ம் தேதி வெளியிடப்பட்ட தேர்வு அறிவிப்பை ரத்து செய்யவேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி டி.அரிபரந்தாமன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் ஏ.எல்.சோமயாஜி, ‘ஆய்வக உதவியாளர் பணிக்கு, எழுத்துத் தேர்வில் எடுத்த மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது.

நேர்முகத் தேர்வில் பெறப்படும் மதிப்பெண், பள்ளிப் படிப்பில் பெற்ற மதிப்பெண் உள்ளிட்டவைகளை கொண்ட வெயிட்டேஜ் மதிப்பெண் ஆகியவற்றின் அடிப்படையில் நியமனம் நடத்தப்படும்’ என்று கூறினார். இதை கேட்ட நீதிபதி வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை அடுத்த வாரம் தள்ளிவைத்தார். இந்த வழக்கில் மனுதாரர் சார்பாக வக்கீல் ஜி.சங்கரன் ஆஜராகி வாதாடினார்.

454 புதிய ஆசிரியர் தேர்வுப்பட்டியல் வெளியீடு

ஆதிதிராவிட பள்ளிகளில் இடைநிலைக் கல்வி ஆசிரியர்களுக்கான, 454 பேர் தேர்வுப் பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில், 1,096 ஆதிதிராவிடர்; 299 பழங்குடியினர் நலப்பள்ளிகள் உள்ளன. இவற்றில், 669 இடை நிலை ஆசிரியர் காலியிடங்களை நிரப்ப, டி.ஆர்.பி., நடவடிக்கை எடுத்தது.

கடந்த 2013ல், சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது. ஆனால், இதில், ஆதிதிராவிடர் மட்டுமின்றி, பிற்படுத்தப்பட்டோரையும் நிரப்பக் கோரி, மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்குத் தொடரப்பட்டது. நீதிமன்றம், தேர்வு முடிவை வெளியிட இடைக்கால தடை விதித்திருந்தது. பின், கடந்த ஏப்., 16ம் தேதி இடைக்கால தடை நீக்கப்பட்டு, 70 சதவீதம், அதாவது, 468 ஆசிரியர்களை பணியில் சேர்க்கலாம் என, நீதிமன்றம் உத்தரவிட்டது.

தேர்வு முடிவுகளை, டி.ஆர்.பி., நேற்று வெளியிட்டது. இதில், 454 பேரின் பெயர் இடம்பெற்றுள்ளன. மாற்றுத்திறனாளிகளுக்காக, 14 இடங்கள், 'ரிசர்வ்' செய்து வைக்கப்பட்டுள்ளன

Monday, June 15, 2015

2015-16ஆம் கல்வியாண்டிற்கான தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கான வேலை நாட்கள் விவரம் ›

குரூப் 1பதவிக்கு 10நாளில் தேர்வு அறிவிப்பு

குரூப் 4 பதவிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு வருகிற ஆகஸ்ட் 3ம் தேதி வரை நடைபெறும். குரூப்1 பதவிக்கு இன்னும் 10 நாளில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசுப்பிரமணியம் கூறியுள்ளார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) குரூப் 4 பதவியில் இளநிலை உதவியாளர் (பிணையம்) ( காலி பணியிடம் 39), இளநிலை உதவியாளர் (பிணையமற்றது)- 2133, தட்டச்சர்-1683, சுருக்கெழுத்து தட்டச்சர்-331, வரித் தண்டலர்-22, வரைவாளர்-53, நில அளவர்-702 உள்ளிட்ட 4963 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வை கடந்த டிசம்பர் 21ம் தேதி நடத்தியது. இதில், மதிப்பெண், தரவரிசை நிலை அடிப்படையில் 7,030 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டனர்.

இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நேற்று காலை சென்னை பிராட்வேயில் உள்ள டிஎன்பிஎஸ்சி தலைமை அலுவலகத்தில் தொடங்கியது. சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்ற இடத்திற்குள் தேர்வாளர்கள் தவிர வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை. சான்றிதழ் சரிபார்ப்பு பணியை டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசுப்பிரமணியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன் பின்னர், டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசுப்பிரமணியம் அளித்த பேட்டி: சான்றிதழ் சரிபார்ப்புக்கு ஒவ்வொரு நாளும் 200 பேர் வீதம் அழைக்கப்பட்டுள்ளனர்.

வருகிற ஆகஸ்ட் 3ம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெறும். சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில் சான்றிழ் சரிபார்ப்பு பணி நடைபெறாது. குரூப் 1 பதவியில் காலியாக உள்ள துணை கலெக்டர்(19 இடம்), போலீஸ் டிஎஸ்பி- 26, வணிகவரித்துறை உதவி ஆணையர்- 21, மாவட்ட பதிவாளர்- 8 உள்ளிட்ட காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு இன்னும் 10 நாட்களில் வெளியிடப்படும். அதே போல, நெடுஞ்சாலை துறையில் காலியாக உள்ள இன்ஜினீயர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பும் விரைவில் வெளியிடப்படும்.

இவ்வாறு பாலசுப்பிரமணியம் கூறினார். இன்ஜினியர் ரிசல்ட் டிஎன்பிஎஸ்சி கடந்த ஆண்டு நடத்திய 98 இன்ஜினியர் பணியிடத்துக்கான ரிசல்ட் இம்மாதம் இறுதியில் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு பணியாளர் தேர்வாணைய தலைவர் பாலசுப்பிரமணியம் கூறினார்.

Sunday, June 14, 2015

பிளஸ் 2 மறுமதிப்பெண்,மறுகூட்டல் விண்ணப்பித்தவர் பதிவெண் பட்டியல் இன்று வெளியீடு

பிளஸ் 2 பொதுத் தேர்வு மதிப்பெண் மறு கூட்டல், தேர்வுத் தாள் மறு மதிப்பீடுக்கு விண்ணப்பித்தவர்களில், மதிப்பெண் மாற்றம் உள்ளவர்களின் பதிவெண் பட்டியல் திங்கள்கிழமை (ஜூன் 15) வெளியிடப்பட உள்ளது. scan.tndge.in என்ற இணையதளத்தில் மாலை 4 மணி முதல் மாணவர்கள் இந்தப் பட்டியலைக் காண முடியும். 2015 மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வை 8 லட்சத்து 82 ஆயிரத்து 260 பேர் எழுதினர்.

இவர்களில் மதிப்பெண் மறு கூட்டல், விடைத்தாள் நகல் கோரி ஒரு லட்சத்து 566 பேர் விண்ணப்பித்தனர். அவர்களில் மதிப்பெண் மறு கூட்டலுக்கு 2,835 பேர், தேர்வுத்தாள் மறு மதிப்பீடுக்கு 3,502 பேர் என மொத்தம் 6,337 பேர் விண்ணப்பித்தனர். இதில் மறு மதிப்பீடுக்கு விண்ணப்பித்தவர்களில் 2,782 பேரின் மதிப்பெண்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

அதேபோல, மறு கூட்டலுக்கு விண்ணப்பித்தவர்களில் 696 பேரின் மதிப்பெண்களில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஜூன் 16-இல் மதிப்பெண் மாற்றம் தெரியும்: மதிப்பெண் மாற்றம் உள்ளவர்களின் பதிவெண் பட்டியல் வரும் திங்கள்கிழமை (ஜூன் 15) மாலை 4 மணிக்கு scan.tndge.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும். மதிப்பெண் மாற்றம் இல்லாத பதிவெண்கள் பட்டியலில் இடம் பெற்றிருக்காது.

மதிப்பெண் மாற்றம் உள்ள மாணவர்கள் செவ்வாய்க்கிழமை (ஜூன் 16) காலை 10 மணி முதல் www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில், தேர்வுப் பதிவெண், பிறந்த தேதி விவரங்களைப் பதிவு செய்து, திருத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய தாற்காலிக மதிப்பெண் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி

தனியார் பள்ளிகளில் 25 சதவீத இலவச மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் காலக்கெடு இன்று முடிகிறது. மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி சிறுபான்மை அந்தஸ்து பெற்ற பள்ளிகள் தவிர தனியார் மெட்ரிக், சி.பி.எஸ்.இ., மற்றும் ஐ.சி.எஸ்.இ., பள்ளிகளில், மொத்த இடங்களில் 25 சதவீதத்தை 6 முதல் 14 வயது வரையிலான மாணவர்களுக்கு இலவசமாக ஒதுக்க வேண்டும்.

இந்நிலையில் இலவச இடங்களின் எண்ணிக்கையை வெளிப்படையாக அறிவிக்கக் கோரி சமூக ஆர்வலர் 'பாடம்' நாராயணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இதையடுத்து இலவச இட விவரங்களை இணைய தளத்தில் வெளியிட நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனால், மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகத்தின் டttணீ:/tணட்ச்tணூடிஞிண்ஞிடணிணிடூண்.ஞிணிட்/ இணையதளத்தில் இலவச இடங்களின் எண்ணிக்கை மாவட்டம் மற்றும் பள்ளி வாரியாக வெளியிடப்பட்டு உள்ளது.

இதில் 32 மாவட்டங்களிலுள்ள 3,720 பள்ளிகள் இடம் பெற்றன. சென்னையில் 371 தொடக்கப் பள்ளிகளில் 11,130 இடங்களில் 2,903 இடங்களில் இலவச சேர்க்கை ஒதுக்கப்பட்டுள்ளது.இந்த இடங்களுக்கு விண்ணப்பிக்கும் காலக்கெடு இன்றுடன் முடிகிறது. விண்ணப்பிக்க விரும்புவோர் பட்டியலில் இடம் பெற்றுள்ள பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கைக்கான படிவத்தை இலவசமாக பெறலாம். அதை உரிய ஆவணங்களுடன் நிரப்பிக் கொடுத்து ஒப்புகைச்சீட்டு பெற்றுக் கொள்ள வேண்டும்.'பள்ளிகள் தவிர மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகம், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் அலுவலகம் மற்றும் மாவட்ட உதவி தொடக்கக் கல்வி அலுவலகம் ஆகியவற்றிலும் விண்ணப்பங்கள் பெற்று பூர்த்தி செய்து தரலாம்' என மெட்ரிக் இயக்குனரகம் அறிவித்துள்ளது.

விண்ணப்பப் பரிசீலனை விண்ணப்பத் தேர்வு குலுக்கல் மற்றும் இறுதிப் பட்டியல் வெளியிடும் தேதியை மெட்ரிக் இயக்குனரகம் ஓரிரு நாளில் அறிவிக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்