Pages

Monday, October 29, 2018

பொது தேர்வு வினாத்தாள் தயாரிக்க ஆசிரியர்கள் தேர்வு


பத்தாம் வகுப்பு முதல், பிளஸ், 2 வரையிலான, பொது தேர்வு வினாத்தாள் தயாரிப்பு பணிகள் துவங்கியுள்ளன.வரும், 2019 மார்ச்சில், பள்ளி பொது தேர்வுகள் நடக்கின்றன. அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், பல்வேறு பாடங்களில் நிபுணத்துவம் பெற்ற ஆசிரியர்கள், வினாத்தாள் தயாரிப்புக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த முறை, பாடத்தின் பின்பக்க கேள்விகள் மட்டுமின்றி, உள்பக்க கேள்விகள், உதாரண கேள்விகள் என, அனைத்தும் சம அளவில் இடம் பெறும் வகையில், வினாத்தாள் தயாரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2வுக்கு, வினாத்தாள் கட்டமைப்பு என்ற, 'ப்ளூ பிரின்ட்' முறை ஒழிக்கப்பட்டுள்ளது.எனவே, பாடத்தின் உள்பக்கத்தில் இருந்து, எந்த கேள்வியும் இடம் பெறலாம். ஒவ்வொரு பாடத்துக்கும், 10க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உதவியுடன், வினாக்கள் தயாரிக்கப்பட்டு, அவற்றில் முக்கிய கேள்விகளை தேர்வு செய்து, வினாத்தாள் தயாரிக்க முடிவு செய்துள்ளதாக, பள்ளி கல்வி மற்றும் தேர்வு துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Thursday, October 25, 2018

பள்ளி மாணவர்களுக்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு


பள்ளி மாணவர்களுக்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், சுகாதார உறுதிமொழி எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழகத்தில், தென் மேற்கு பருவமழை முடிந்த நிலையில், டெங்கு, பன்றி காய்ச்சல் மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இதில், குழந்தைகள், மாணவர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பள்ளிகளில் காய்ச்சல் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள, பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.இதையடுத்து, பள்ளிகளில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், காய்ச்சல் தடுப்பு உறுதிமொழி எடுக்கப்படுகிறது.உறுதிமொழி வருமாறு:நான், என் வீட்டிலோ, வீட்டின் சுற்றுப்புறத்திலோ, பள்ளி வளாங்களிலோ, டயர்கள், தேங்காய் சிரட்டைகள், உடைந்த குடங்கள், உபயோகமற்ற பிளாஸ்டிக் பொருட்களை குவிக்க மாட்டேன். தேவையற்ற பொருட்கள் கிடந்தால், அவற்றை உடனே அகற்றுவேன்.

என் வீட்டில் தண்ணீர் சேமித்து வைக்கும் குடங்கள், சிமென்ட் தொட்டிகள் உள்ளிட்டவற்றை, கொசு புகாத வண்ணம் மூடி வைப்போம். தண்ணீர் சேகரிப்பு தொட்டிகளை, அடிக்கடி சுத்தம் செய்து வைப்போம். அரசு மேற்கொள்ளும் அனைத்து கொசு ஒழிப்பு நடவடிக்கைகளுக்கும், நானும், பெற்றோரும், அண்டை வீட்டாரும் ஒத்துழைப்போம்.இவ்வாறு உறுதிமொழியில் கூறப்பட்டுள்ளது.

26-10-18 school morning prayer

26-10-18
School morning prayer

திருக்குறள்:72

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.

உரை:
அன்பு இல்லாதவர் எல்லாப்பொருள்களையும் தமக்கே உரிமையாகக் கொண்டு வாழ்வார்: அன்பு உடையவர் தம் உடமையும் பிறர்க்கு உரிமையாக்கி வாழ்வர்.

பழமொழி :

Cowards die many times before their death

வீரனுக்கு ஒரு முறை சாவு; கோழைக்கு தினந்தோறும் சாவு

பொன்மொழி:

நீ உன்னுடைய

நண்பனுக்கு பணம் தந்து

உதவ முடியாமற் போகும்பட்சம்,

ஒரு ஆறுதல்

வார்த்தையைக் கூறி

அவனுக்கு உதவலாம்.

இரண்டொழுக்க பண்பாடு :

1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .

2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .

பொது அறிவு :

1.ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் நீல நிற உடை அணியும் அணி?
இந்தியா

2.குழந்தைகளின் மன வளர்ச்சிக்குத் தகுந்தபடி பாடம் சொல்லிக் கொடுக்கும் முறையை உருவாக்கிய இத்தாலியர் யார்?
மரியா மாண்டிச்சேரி

நீதிக்கதை

நன்றி மறந்த முதலாளி!

செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வந்த செல்வந்தன் ஒருவன் பல ஊர்களுக்கு வணிகம் செய்வதற்காகச் செல்ல வேண்டி இருந்தது. இதற்காக விலை உயர்ந்த குதிரை ஒன்றையும் அவன் வாங்கி வைத்திருந்தான். அந்தக் குதிரை காற்றை விட வேகமாக ஓடக் கூடியது. அந்தக் குதிரையின் வேகத்திற்கு இணையாக எந்தக் குதிரையாலும் ஓட முடியவில்லை.

அவனும் அந்தக் குதிரையின் அருமை தெரிந்து அதை நல்ல முறையில் கவனித்து வந்தான்.
அந்த நகரத்தில் வாழ்ந்த அனைவருக்கும் அந்த குதிரையைப் பற்றியும் அதன் வேகத்தைப் பற்றியும் தெரிந்திருந்தது.

ஒரு முறை வணிக வேலையாக தொலைவிலிருந்த நகரத்துக்குக் குதிரையில் சென்ற அவன் தான் கொண்டு சென்ற பொருட்களை உடனுக்குடன் விற்று நிறைய பணம் சம்பாதித்தான். அந்தப் பணத்துடன் அந்த நகரத்தில் இருக்க விரும்பாத அவன் உடனே வீடு திரும்ப விரும்பினான்.

குதிரை சற்று கூட ஓய்வெடுக்க முடியாமல் களைத்துப் போயிருந்தது.
வணிகனும் உடனே திரும்ப வேண்டி வந்ததால், குதிரையை மெதுவாக ஓட்டிச் செல்வோம் என்று அந்தக் குதிரையின் மேல் அமர்ந்தான்.

காட்டு வழியாக குதிரையில் வந்து கொண்டிருந்த அவனை குதிரையோடு வழிப்பறித் திருடர்கள் சுற்றிச் சூழ்ந்து கொண்டார்கள்.

முதலாளியைக் காப்பாற்ற விரும்பிய அந்தக் குதிரை திருடர்களைக் காலால் உதைத்துத் தள்ளியபடி முன்னால் ஓடத் துவங்கியது. திருடர்களும் குதிரையைத் தாக்கத் துவங்கினார்கள். குதிரையின் உடலெங்கும் காயம் ஏற்பட்டது.
அந்தக் காயத்தைப் பொருட்படுத்தாத குதிரை தன் முதலாளியைக் காப்பாற்றும் நோக்கத்தில் வேகமாக ஓடத் துவங்கியது.

திருடர்கள் வந்த குதிரையால் இந்தக் குதிரையின் வேகத்தைப் பிடிக்க முடியவில்லை.

குதிரை தன் முதலாளியை வீட்டில் கொண்டு வந்து சேர்த்ததுடன் வாயில் நுரை தள்ளியவாறு அப்படியே மயங்கி விழுந்தது.

தன் உயிரையும் பொருளையும் காப்பாற்றித் தந்த அந்தக் குதிரையை நன்றியோடு பார்த்த முதலாளி வீட்டுக்குள் சென்றான்.
அங்கிருந்த பணியாட்கள் அந்தக் குதிரையின் மயக்கத்தைத் தெளிவித்தார்கள். அதற்கு உணவு அளித்தார்கள்.

அதன் உடலெங்கும் ஏற்பட்ட காயம் ஆறப் பல நாட்கள் ஆகியது. அந்தக் குதிரை நலமடைந்து விட்டாலும் அதனால் முன் போல் வேகமாக ஓட முடியவில்லை. நொண்டியபடியே நடந்தது.

பயனற்ற அந்தக் குதிரையைச் செல்வந்தன் கவனிக்கவில்லை. அதன் கண்களும் பார்வை இழக்கத் துவங்கின. அதன் நிலை பரிதாபமாக ஆனது.
பயனற்ற குதிரையால் தேவையற்ற செலவு வருவதாக எண்ணிய அந்த செல்வந்தன், அந்தக் குதிரையை வீட்டை விட்டு விரட்டும்படி பணியாட்களுக்குக் கட்டளையிட்டான்.

பணியாட்களும் அந்தக் குதிரையை வெளியே தள்ளி கதவைத் தாழிட்டார்கள்.
பசியால் துடித்த அது நகரம் முழுவதும் அலையத் துவங்கியது.

அந்நகரத்தில் யாருக்காவது ஏதேனும் குறை ஏற்பட்டால் ஊர் மத்தியில் அமைக்கப்பட்டிருந்த மணியை அடிப்பார்கள். உடனே அந்த ஊரின் முக்கியமான பெரியவர்கள் கூடி அவரின் குறையைத் தீர்த்து வைப்பார்கள். அது அந்த ஊரின் வழக்கமாக இருந்தது.

பசியுடன் வந்த குதிரை அந்த மணிக்காகக் கட்டப்பட்டிருந்த கயிற்றை வைக்கோல் என நினைத்துத் தின்பதற்காக அதைப் பிடித்து இழுத்தது.
மணியோசை கேட்டு வந்த அந்த நகரப் பெரியவர்கள் அந்தக் குதிரையைப் பார்த்தார்கள்.

எலும்பும் தோலுமாக இருந்த அந்தக் குதிரையைப் பார்த்த பெரியவர்கள் அது செல்வந்தனின் குதிரை என்பதையும் செல்வந்தனை திருடர்களிடமிருந்து காப்பாற்றிய குதிரை அது என்பதையும் அறிந்து செல்வந்தனை விசாரணைக்காக வரச் செய்தார்கள்.
அவனோ இந்தக் குதிரை பயனற்றது, அதனால் விரட்டி விட்டேன். என்மீது எந்தத் தவறுமில்லை என்று வாதிட்டான்.
இந்தக் குதிரை எவ்வளவு அருமையான குதிரை. எவ்வளவு வேகமாக ஓடியது. உன்னைத் திருடர்களிடமிருந்து காப்பாற்றியதால் தானே இது இப்படி ஆனது. உன் உயிரைக் காப்பாற்றிய இந்தக் குதிரையிடம் உமக்கு சிறிது கூட நன்றி இல்லையா?

இதற்கு நாள்தோறும் நல்ல உணவு அளித்துப் பாதுகாக்க வேண்டியது உன் பொறுப்பு. ஒவ்வொரு வாரமும் எங்களில் ஒருவர் வந்து இந்தக் குதிரையைப் பார்வையிடுவோம். இந்தக் குதிரைக்கு ஏதேனும் தவறு நேர்ந்தால் உமக்குக் கடுமையான தண்டனை கிடைக்கும்.என்று தீர்ப்பு வழங்கினார்கள்.

தலை கவிழ்ந்த அந்த செல்வந்தன் அந்தக் குதிரையைத் தன் வீட்டிற்கு ஓட்டிச் சென்றான்.

இன்றைய செய்தி துளிகள்:

1.வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க சிறப்புசலுகை - தமிழக அரசு அரசாணை வெளியீடு!

2.தேசிய திறனாய்வு தேர்வுக்கு, 'ஹால் டிக்கெட்' வெளியிடப்பட்டுள்ளது.

3.18 தொகுதிகளும் காலியானதாக அறிவித்தால் 6 மாதத்திற்குள் இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையர் ஓ.பி. ராவத் பேட்டி

4.பிரதமர் மோடி அக். 28, 29 தேதிகளில் ஜப்பான் பயணம்

5.மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான கடைசி 3 ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு

Wednesday, October 24, 2018

25-10-2018 Morning prayer

*👉🏻👉🏻👉🏻👉🏻👉🏻👉🏻👉🏻👉🏻👉🏻👉🏻👉🏻👉🏻பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:*
*25/10/2018 THURSDAY*
*👉🏻திருக்குறள்:71*

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்.

உரை:
அன்புக்கும் அடைத்து வைக்கும் தாழ் உண்டோ? அன்புடையவரின் சிறு கண்ணீரே ( உள்ளே இருக்கும் அன்பைப் ) பலரும் அறிய வெளிப்படுத்திவிடும்.

*👉🏻பழமொழி :*

Covert all, lose all

பேராசை பெரு நட்டம்

*👉🏻பொன்மொழி:*

கிரீடங்களை விட
கனிந்த இதயங்கள்
மேலானவை.

*👉🏻இரண்டொழுக்க பண்பாடு :*

1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .

2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .

*👉🏻பொது அறிவு :*

1.பியானோ சட்டங்களின் எண்ணிக்கை?
88

2.ஸ்நூக்கர் விளையாட்டில் எத்தனை பந்துகள் பயன்படுத்தப்படுகின்றன?
22

*👉🏻நீதிக்கதை:*

தேளும் தவளையும் – ஈசாப் நீதிக் கதை

அது ஒரு அழகிய காடு, அந்த காட்டில் கெட்ட சுபாவமுள்ள தேள் ஒன்று வசித்து வந்தது.  அந்தக் காட்டின் நடுவில் ஒரு நீரோடை இருந்தது. அந்தத் தேளுக்கு இக்கரையில் இருந்து அக்கரைக்கு போக வேண்டி இருந்தது.

அக்கரைக்குப் போவதற்காக அந்த நீரோடையில் இருக்கும் பெரிய மீன்கள், நண்டு, ஆமை போன்றவைகளிடம் தேள் உதவி கேட்டது, ஆனால் அந்த பொல்லாத தேள் தம்மை கொட்டிவிடும் என்று அவை மறுத்து விட்டன.
எப்படி நீரோடையைக் கடப்பது என்று தேள்யோசித்துக்கொண்டு இருந்தபோது அந்த நீரோடையில் தவளை ஒன்று வந்து கொண்டிருந்தது.

தவளையைக் கண்ட தேள், “தவளையாரே! நான் அக்கரைக்குச் செல்லவேண்டும் என்னை அங்கு கொண்டு போய் விட்டு விடுவீரா?” என்று கேட்டது.

“நானும் அக்கரைக்குத்தான் போகிறேன், என் முதுகில் ஏறிக்கொள்ளும் உம்மை நான் அக்கரையில் விட்டுவிடுகிறேன்!“, என்றது தவளை.

தேளும் தவளையின் முதுகில் ஏறிக்கொண்டது. தவளை நீரில் நீந்திச்செல்ல அரம்பித்தது, சிறிது தூரம் தான் தவளை சென்றிருக்கும் தேளுக்கு ஒரு யோசனை வந்தது, நான் பல பேரைக கொட்டியிருக்கிறேன். அவர்கள் வலியால் துடித்ததையும் பார்த்திருக்கின்றேன்.

ஆனால் நான் ஒரு நாளும், தவளையை கொட்டவில்லை, இந்த தவளையைக் கொட்டினால் எப்படித் துடிக்கும்?
இதை விட்டால் வேறு சந்தர்ப்பம் கிடைக்காது என்று தவளையை கொட்டிப் பார்க்க நினைத்தது.
தேள் தவளையின் முதுகில் கொட்டியது.  அனால் தவளை பேசாமல் போய்க்கொண்டிருந்தது.

தேள் தவளையைப் பார்த்து, “தவளையாரே! உமது உடம்பில் வலியே வருவதில்லையா?” என்று கேட்டது.
தேளின் கெட்ட எண்ணத்தைப் புரிந்துகொள்ளாத தவளை, “எனது முதுகு வழவழப்பானது. அதனால் எனக்கு அந்த இடத்தில் வலியே வருவதில்லை” என்று சொன்னது தவளை.

ஆனால் எனது கழுத்துப்பக்கம் மென்மையாக இருக்கும்.  இதில் தான் எனக்கு வலிகள் காயங்கள் ஏற்படும் என்று சொன்னது தவளை.
ஓகோ; அப்படியா? என்று கேட்ட தேள்,  மெதுவாக தவளையின் கழுத்துப் பகுதியை நோக்கிச் சென்றது.
கழுத்தில் இருந்து தலைப்பகுதிக்குச் சென்ற தேள் தவளையை கொட்ட ஆரம்பித்தது.

தேள் கொட்டவருவதை அறிந்து தவளை தலையை தண்ணீருக்குள் இழுத்துக் கொண்டது. தேள் நீரோடையில் விழுந்து விட்டது.

தனக்கு உதவி செய்த தவளைக்கு கேடுவிளைவிக்க நினைத்த தேள் தண்ணீரில் மூழ்கி இறந்தது.  தவளை கரையை நோக்கி நீந்திச் சென்றது.

நீதி:

ஒருவர் எவ்வித பலனையும் எதிர்பாராமல் எமக்கு உதவி செய்தாராயின், அவரின் உதவியை நாம், எம் வாழ் நாளில் என்றுமே மறந்து விடலாகாது.  அவருக்கு நன்றியுடையவனாக இருத்தல் வேண்டும். மாறாக அவருக்கு கெடு செய்ய நினைப்போமாயின், அது எம்மையே வந்து சேரும்.

*👉🏻இன்றைய செய்தி துளிகள்:*

1.ஹெல்மெட் அணிய வேண்டும் உத்தரவை ஏன் முறையாக அமல்படுத்தவில்லை?: அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

2.2020 ஏப்ரல் 1க்கு பிறகு பிஎஸ்-4 வாகனங்கள் விற்பனை, பதிவு செய்தல் கூடாது: உச்ச நீதிமன்றம்

3.இந்திய கப்பற்படைக்கு ராக்கெட்டுகள் வாங்க இஸ்ரேலுடன் ரூ.5,685 கோடி மதிப்பில் ஒப்பந்தம்

4.சர்வதேச கராத்தே போட்டியில் 5 தங்கப் பதக்கங்களை வென்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பாராட்டு!

5.ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 10000 ரன்களை வேகமாக கடந்து விராட்கோலி உலகசாதனை       🙏🙏🙏🙏🙏🙏🙏

Tuesday, October 23, 2018

24-10-18 morning prayer

24-10-18

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:

திருக்குறள்:70

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்.

உரை:
மகன் தன் தந்தைக்குச் செய்யத் தக்க கைம்மாறு, இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன தவம் செய்தானோ என்று பிறர் புகழ்ந்து சொல்லும் சொல்லாகும்.

பழமொழி :

Count not your chicken before they are hatched

பிள்ளை பெரும் முன் பெயர் வைக்காதே

பொன்மொழி:

எவன் ஒருவன் பொறுமைசாலியாக
இருக்கிறானோ, அவன்
தான் நினைத்ததை
கட்டாயம் அடைவான்.

இரண்டொழுக்க பண்பாடு :

1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .

2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .

பொது அறிவு :

1.திண்டிவனம் முன்பு எவ்வாறு அழைக்கப்பட்டது?
தின்திருணிவனம்

2.விருத்தாசலத்தின் அன்றைய பெயர் என்ன?
முதுகுன்றம்

நீதிக்கதை

ஆணவம்

ஒரு நாள், ஏழை விவசாயி ஒருவர் அருகில் உள்ள கிராமத்திற்கு நடந்து சென்றார். அது ஒரு கோடை காலம்.

வெயில் சுட்டெரித்து விவசாயிக்கு பசி வயிற்றைக்கிள்ளியது. வெயில் காரணமாக தண்ணீர் தாகமும் எடுத்தது. சோர்வடைந்த அவர், சாலை ஓரத்தில் இருந்த மரத்தடியில் நிழலில் ஒதுங்கினார்.


அப்போது அங்கு ஒரு இளைஞன் வந்தான். அவன் மெத்தப்படித்த மேதாவி. தனக்கு மட்டுமே எல்லாம் தெரியும் என்ற எண்ணம் கொண்டவன். தான் சந்திக்கும் நபர்களிடம் தனது புத்திசாலித் தனத்தையும், மேதமை கொள்வான்.
மேலும் தனக்கு தெரியாதது எதுவும் இல்லை என் ஆணவம்.

அப்படி தெரிந்தால் அதை தனக்கு கூறுமாறு பிறரிடம் கேட்பான். அவனது இந்த ஆணவப்பெருக்கை அறிந்த பலரும் அவனைக்கண்டால் ஒதுங்கிச் செல்லத் தொடங்கினார்கள். இதை தனக்கு சாதகமாக எடுத்துக் கொண்ட அந்த இளைஞன், தன்னைப்போல சிறந்த கல்வியாளர் யாரும் இல்லை என்ற அகந்தயுடன் இருந்தான்.

அந்த இளைஞன் மரநிழலில் ஒதுங்கி இருந்த விவசாயியை பார்த்தான். உடனே அவரிடம் பேச ஆரம்பித்தான். ஐயா விவசாயி நான் நிறைய படித்திருக்கிறேன். எனக்கு எல்லாமே தெரியும். இருந்தாலும் எனக்கு தெரியாத எதுவும் உங்களுக்கு தெரிந்தால் அதை கூறுங்கள் பார்க்கலாம் என்று ஆனவத்துடன் பேசினான்.

அந்த இளைஞனின் ஆணவம் குறித்து அந்த விவசாயி ஏற்கனவே அறிந்திருந்தார். எனவே அவர் அமைதியாக இருந்தார்.

அது அந்த இளைஞனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அவன் என்னதான் பேசினாலும் அதற்கு எந்த பதிலும் சொல்லாமல் விவசாயி மவுனம் காத்தார்.

இந்த நிலையில் அந்த இளைஞன் தன்னிடம் இருந்த உணவுப்பொட்டலத்தை பிரித்தான். சாப்பாட்டைப் பார்த்ததும் விவசாயிக்கு பசி அதிகரித்தது. அவர் கண்களில், ‘கொஞ்சம் உணவு கிடைக்காதா?’ என்ற ஏக்கம் எட்டிப்பார்த்தது. இதை வைத்து அந்த விவசாயியை மடக்க அவன் நினைத்தான்.

இதையடுத்து அந்த விவசாயியிடம், ‘ஐயா என்னிடம் உள்ள உணவை நான் பங்கிட்டு கொடுக்க தயாராக இருக்கிறேன். ஆனால் எனக்கு தெரியாத , நான் அறியாத, நான் கற்றுக்கொள்ளாத விஷயம் ஒன்றை நீங்கள் சொல்ல வேண்டும். அப்போது தான் என்னிடம் உள்ள உணவை உங்களுக்கு கொடுக்க முடியும்’ என்றான்.

விவசாயி கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தார். பின்னர் அவர் அந்த இளைஞனுக்கு சரியான பதிலடி கொடுத்தால் தான் அடங்குவான் என்று கருதினார். பின்னர் அந்த இளைஞன் நோக்கி, ‘படித்த முட்டாள் தான் பெருமை பேசித்திரிவான்’ என்றார். தொடர்ந்து அவர், ‘இது தான் இது வரை நீ கற்றுக்கொள்ளாத விஷயம், நான் அறிந்த விஷயம்’ என்றார்.

விவசாயி கூறிய இந்த பதிலைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்து போய் விட்டான் அந்த இளைஞன். தற்பெருமை, அகங்காரம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பதை அந்த இளைஞன் உணர்ந்து கொண்டான், தன்னை மன்னிக்கும்படி அந்த விவசாயிடம் கேட்டுக்கொண்டு, தனது உணவை மகிழ்ச்சியுடன் அவரிடம் பங்கிட்டுக்கொண்டான்.

இன்றைய செய்தி துளிகள்:

1.தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு

2.தமிழகத்தில் வரும் 26, 27ம் தேதி கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

3.தீபாவளியன்று இரவு 8 முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசுகள் வெடிக்க அனுமதி: உச்சநீதிமன்றம் தீர்ப்பு

4.ஈரோடு அருகே பெற்றோரை இழந்த மாணவியின் கல்வி செலவை ஏற்றது தமிழக அரசு

5.உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி: இந்திய வீரர் பஜ்ரங் புனியா வெள்ளிப் பதக்கம் வென்றார்

Monday, October 22, 2018

23-10-18 Morning prayer

23-10-18
school morning prayer

ருக்குறள்:69

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.

உரை:
தன் மகனை நற்பண்பு நிறைந்தவன் என பிறர் சொல்லக் கேள்வியுற்ற தாய், தான் அவனை பெற்றக் காலத்தில் உற்ற மகிழ்ச்சியை விடப் பெரிதும் மகிழ்வாள்.

பழமொழி :

Contentment is more than a kingdom

போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து

பொன்மொழி:

மனிதனின் குற்றங்களில் பெரும்பாலானவை அவனது நாவிலிருந்துதான்
பிறக்கின்றன.

-நபிகள் நாயகம்

இரண்டொழுக்க பண்பாடு :

1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .

2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .

பொது அறிவு :


1.கோஹினூர் வைரம் எந்த தங்க சுரங்கத்தில் எடுக்கப்பட்டது?

கோல்கொண்டா (ஆந்திரா)

2.பாரசீகர்கள் எதை கடவுளாக வழிபட்டனர்?

நெருப்பு

நீதிக்கதை

அதிசய பூசணிக்காய்

ஓர் ஊரில் பெரிய பண்ணையார் ஒருவர் இருந்தார். அந்த ஊரில் இருந்த பெரும்பாலான நிலங்கள் அவருக்குத் தான் சொந்தம். அவர் கொடுர மனம் படைத்தவர், யாருக்கும் உதவி செய்ய மாட்டார், பணம், பணம் என்று பேராசையில் வாழ்பவர்.
அவரிடம் நல்லதம்பி என்ற உழவர் வேலை பார்த்து வந்தார். அவருக்குக் குடிசை ஒன்றும் சிறிதளவு நிலமும் இருந்தன.

பண்ணையாரிடம் வந்த அவர், ஐயா! எல்லா நிலத்திலும் உழுது விதை நட்டு விட்டார்கள். என் நிலம் மட்டும் தான் வெறுமனே உள்ளது. நீங்கள் சிறிது தானியம் தாருங்கள். என் நிலத்திலும் விதைத்து விடுகிறேன், அது வளர்ந்து அறுவடை செய்ததும், உங்களுக்குரிய பணத்தை கொடுத்து விடுகிறேன், மீதி என் பிள்ளைகள் படிப்பிற்கு உதவியாக இருக்கும் ” என்றார்.

”என் நிலத்திலேயே உழுது பயிரிடு. சொந்தமாகப் பயிரிட வேண்டாம். பண்ணையாராகும் ஆசையை விட்டு விடு. கூலியாளாகவே இரு, உன் பிள்ளைகள் ஒன்றும் படிக்க வேண்டாம், அவர்களும் இங்கேயே வேலைக்கு வரச் சொல். அரை வயிற்றுக் கஞ்சியாவது கிடைக்கும்” என்று கோபத்துடன் சொன்னார் அவர்.

சோகத்துடன் வீடு திரும்பினார் அவர்.
தன் மனைவியிடம், நாம் வளம் பெறுவது பண்ணையாருக்குப் பிடிக்கவிலலை. தானியம் தர மறுத்து விட்டார். நீயும் நம் குழந்தைகளும் எப்போதும் போலப் பட்டினி கிடக்க வேண்டியதுதான், நம் பிள்ளைகள் கூட படிக்க முடியாது போலிருக்குது. இதுதான் நம் தலைவிதி” என்று வருத்தத்துடன் கூறினார்.
அவர்கள் குடிசையில் குருவி ஒன்று ஏற்கனவே கூடு கட்டி இருந்தது, அந்த குருவிக்கு தினமும் கொஞ்சம் தானியங்கள் உழவரின் மனைவியும், குழந்தைகளும் கொடுப்பார்கள்.சின்னஞ்சிறு குடிசையில் குருவிக்கும் தங்க இடம் கொடுத்து மகிழ்ந்தார்கள், கூட்டில் அந்தக் குருவி நான்கு முட்டைகள் இட்டது. நான்கும் குஞ்சுகளாயின.
அந்த குஞ்சுகளின் சப்தம் இனிமையாக இருந்தது, தினமும் குருவியானது வெளியே சென்று பூச்சிகளை பிடித்து கொண்டு வந்து குஞ்சுகளுக்கு கொடுக்கும், ஒரு நாள் சரியான புயல், மழை பெய்தது, வெளியே சென்ற குருவி வீட்டிற்கு வரவே இல்லை.பாவம் குஞ்சுகள் பசியால் கத்தியது, அதைக் கண்ட உழவரும், குழந்தைகளும் தங்களுடைய உணவில் கொஞ்சம் கொடுத்தது, குஞ்சுகளின் பசியைப் போக்கினார்கள்.

திடீரென்று அந்தக் குருவிக் கூட்டுக்குள் ஒரு பாம்பு நுழைந்தது. குருவிக் குஞ்சுகளைப் பிடித்துச் சாப்பிடச் சென்றது, உடனே அங்கு வந்த உழவர் பாம்பை அடித்துக் கொன்றார். கொஞ்ச நேரத்தில் தாய் குருவி வீட்டிற்கு வந்தது, குஞ்சுகள் சொன்னதைக் கேட்டது, தாய்க்குருவி ஆனந்தக் கண்ணீர் விட்டது.

அடுத்த சில நாட்களில் உழவரும் குடும்பத்தினரும் வறுமையில் வாடினார்கள். குஞ்சுகள் வளர்ந்ததும், தாய் குருவியும், குஞ்சுகளும் உழவர் மற்றும் குடும்பத்தினரிடம் நன்றி கூறி வானில் பறந்து போயின.
சில நாட்களில் உழவரின் வீட்டில் சாப்பிடவே தானியங்கள் இல்லை என்ற நிலை ஏற்ப்பட்டது.

“இப்படியே அரை வயிறு சாப்பிட்டு எவ்வளவு காலம் வாழ்வது? நமக்கு விடிவே கிடையாதா?” என்றாள் மனைவி.
அப்பொழுது அவர்கள் வீட்டுக் கதவை யாரோ தட்டும் ஓசை கேட்டது. கதவை திறந்தார் உழவர். அங்கே அவர்கள் வீட்டில் கூடு கட்டிய தாய் குருவி இருந்தது. அதன் வாயில் ஒரு விதை இருந்தது. அதை அவர் கையில் வைத்தது.

இதை உங்கள் வீட்டுத் தோட்டத்தில் நடுங்கள். சிறிது நேரத்தில் வருகிறேன்” என்று சொல்லிவிட்டுப் பறந்தது அது.
மீண்டும் வந்தது அது. இன்னொரு விதையைத் தந்தது.

இதை உங்கள் வீட்டின் முன்புறத்தில் நடு” என்று சொல்லிவிட்டுப் பறந்தது.
மூன்றாம் முறையாக வந்த அது இன்னொரு விதையைத் தந்தது ” இதை சன்னல் ஓரம் நடுங்கள்.
எங்கள் மீது காட்டிய அன்பிற்கு நன்றி” என்று சொல்லிவிட்டுப் பறந்தது.
குருவி சொன்னபடியே மூன்று விதைகளையும் நல்லதம்பி நட்டார்.
மறுநாள் காலையில் அங்கே மூன்று பெரிய பூசணிக் காய்கள் காய்த்து இருந்தன. இதைப் பார்த்து வியப்பு அடைந்தார்.தோட்டத்தில் இருந்த பூசணிக் காயை வீட்டிற்குள் கொண்டு வந்தார். அதை இரண்டு
துண்டாக வெட்டினார் நல்லதம்பி.

என்ன வியப்பு! அதனுள் இருந்து விதவிதமான உணவுப் பொருள்கள் வந்தன. சுவையான அவற்றை எல்லோரும் மகிழ்ச்சியாக உண்டனர்.
மீண்டும் அந்தப் பூசணிக் காயை ஒன்று சேர்த்தனர். பழையபடி அது முழுப் பூசணிக் காய் ஆனது.மகிழ்ச்சி அடைந்த அவர், ” இது மந்திரப் பூசனிக் காய். நமக்கு உணவு தேவைப்படும் போது பிளந்தால் உணவு கிடைக்கும். மீண்டும் சேர்த்து விட்டால் பழையபடி ஆகி விடும். இனி நமக்கு உணவுப் பஞ்சமே இல்லை, நாம் குருவிகளுக்கு செய்த உதவிக்கு இத்தனை பெரிய உதவியாக செய்திருக்கிறது, அவற்றை நாம் மறக்கக்கூடாது” என்றார்.

“வீட்டின் முன் புறத்தில் ஒரு பூசணிக் காய் உள்ளது. அதைக் கொண்டு வாருங்கள். அதற்குள் என்ன இருக்கிறது என்று பார்த்து விடலாம்” என்றார் மனைவி.அந்தப் பெரிய பூசணிக் காயை உருட்டிக் கொண்டு வந்தார் அவன். கத்தியால் அதை வெட்டினார். உள்ளிருந்து அழகான ஆடைகள், விலை உயர்ந்த மணிகள் கொட்டின.
அதற்குள் அவரது குழந்தைகள் சன்னலோரம் இருந்த மூன்றாவது பூசணிக் காயையும் கொண்டு வந்து கொடுக்க, நல்லதம்பி அதை வெட்டினார். அதற்குள் இருந்து பொற்காசுகள் கொட்டின.அதன் பிறகு அவரும் மனைவியும் குழந்தைகளும் நல்ல உணவு உண்டனர். விலை உயர்ந்த ஆடைகளை அணிந்தனர். மிகப் பெரிய வீடு ஒன்றைக் கட்டத் தொடங்கினார்கள். பெரிய பள்ளியில் படிக்க அவரது குழந்தைகள் சென்றார்கள். நல்லதம்பி தன்னைப் போல் ஊரில் கஷ்டப்பட்டவர்கள் அனைவருக்கும் உதவி செய்யத் தொடங்கினார்.
உழவர் சில நாள்களில் பெருஞ்செல்வனானதையும், தன்னை விட பெரும் புகழ் பெற்றதையும் அறிந்தார் பண்ணையார்.உழவரின் வீட்டிற்கு வந்த அவர்,
டேய்! நல்லதம்பி! உனக்கு எங்கிருந்து இவ்வளவு செல்வம் கிடைத்தது? உண்மையைச் சொல்” என்று கேட்டார்.
அவரும் நடந்ததை எல்லாம் அப்படியே சொன்னார்.

பண்ணையார் தன் மாளிகைக்கு வந்தார் . தன்னை விட நல்லதம்பி பெரிய பணக்காரன் ஆனதை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை, பொறாமை குணம் படைத்த அவர் எப்படியாவது மேலும் செல்வம் சேர்க்க வேண்டுமென்று நினைத்தார்.
வீட்டில் மேல் பகுதியில் குருவிக் கூடு ஒன்றை அவரே செய்தார். குருவிகள் அவரும் அதில் தங்கும் என்று எதிர்பார்த்தார்.அவர் எண்ணம் ஈடேறியது. ஒரு குருவி வந்து அந்தக் கூட்டில் தங்கியது. நான்கு முட்டைகள் இட்டது. நான்கு குஞ்சுகள் வெளியே வந்தன.

பாம்பு வரவே இல்லை.


பொறுமை இழந்த அவர் ஊரில் இருந்த பாம்பாட்டியிடம் சொல்லி, பெரிய கருநாகப்பாம்பை வீட்டில் கொண்டு வந்து குருவி கூட்டிற்கு அருகில் விட்டார், அந்த பாம்போ பசியில் இருந்ததால் ஓடி போய் 3 குஞ்சுகளை சாப்பிட்டு, ஏப்பம் விட்டது.

“அய்யோ, நான் நினைத்தது ஒன்று, நடந்தது ஒன்றாகிவிட்டதே என்று ஒரு பெரிய கம்புடன் குருவிக் கூட்டை நெருங்கினார், பாம்பை அடித்து நொறுக்கி வெளியே போட்டார், மீதி இருந்த ஒரு குஞ்சை காப்பாற்றியது போல் நடித்தார். வேளை தவறாமல் உணவு அளித்தார்.

சில நாட்களில் தாய் குருவியும், ஒரு குஞ்சும் கூட்டை விட்டு வெளியேறியது.“மூன்று விதைகளுடன் குருவி மீண்டும் வரும். அரசனைவிட செல்வன் ஆவேன்” என்ற எண்ணத்தில் காத்திருந்தார் அவர்.
அவர் எதிர்பார்த்தபடியே கதவைத் தட்டியது குருவி.

அவரிடம் மூன்று விதைகளைத் தந்தது. ” ஒன்றை வீட்டின் பின்புறம் நடு. இரண்டாவதை வீட்டின் முன்புறம் நடு. மூன்றாவதைக் கிணற்றோரம் நடு” என்று சொல்லி விட்டுப் பறந்து சென்றது.

எண்ணம் நிறைவேறியது என்று மகிழ்ந்தார் அவர்.

மூன்று தானியங்களையும் நட்டார். மறுநாளே மூன்று பெரிய பூசணிக் காய்கள் காய்த்து இருந்தன.
தோட்டத்தில் இருந்த பூசணிக் காயை வீட்டுக்குள் கொண்டு வந்தார்.
அதை வெட்டினார்.அதற்குள் இருந்து எண்ணற்ற பூச்சிகள் வெளிவந்தன. அவர் வயலில் விளைந்திருந்த பயிர்களை எல்லாம் ஒரு நொடிக்குள் தின்றுவிட்டு மறைந்தன
வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டார் அவர்.

முன்புறத்தில் இருந்த இரண்டாவது பூசணிக்காயை வெட்டினார். அதற்குள் இருந்து தீ வெளிப்பட்டது அது அந்த மாளிகையை ஒருநொடிக்குள் சாம்பல் ஆக்கியது. இத்தனை நடந்தும் அந்த பண்ணயார் திருந்தவில்லை.
அய்யோ எல்லாமே போய் விட்டதே, மூன்றாவது பூசணியிலாவது செல்வங்கள் இருக்கும் என்று எண்ணிய பண்ணையார்,
அதை வெட்ட, அதிலிருந்து கிளம்பிய பெரிய பூதம் அவரை தூக்கிக் கொண்டு பறந்தது. அதை அறிந்ததும் எல்லோரும் கொடிய பண்ணையார் ஒழிந்தார் என்று மகிழ்ந்தனர்.

பணம், பணம் என்று பேராசையால் ஏழை மக்களுக்கு துன்பம் உண்டாக்கிய பண்ணையார் இறந்து போனப்பின்பு, நல்லதம்பி ஊர் மக்களுக்கு நிறைய உதவிகள் செய்தார், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் கட்டிக் கொடுத்தார். அவரும் அவரது குடும்பத்தாரும் நல்ல பெயர் பெற்று விளங்கினார்கள்.

இன்றைய செய்தி துளிகள்:

1.2ஆம் வகுப்புவரை வீட்டு பாடம் கிடையாதுமீறினால் பள்ளியின் அங்கீகாரம் இரத்து - மத்திய அரசு சுற்றறிக்கை…

2.அனைத்து கோவில்களும் அதன் சொத்து மதிப்பை விளம்பர பலகையில் தெரிவிக்க உயர்நீதிமன்றம் கிளை உத்தரவு

3.இந்தியாவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை கடந்த 4 ஆண்டுகளில் 68% அதிகரிப்பு : மத்திய நிதித்துறை அமைச்சகம்

4.108 ஆம்புலன்ஸ் சேவை ஊழியர்கள் வேலை நிறுத்த அறிவிப்பு

5.மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சதமடித்ததன் மூலம் இந்திய அணி கேப்டன் விராட் கோஹ்லி, சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார்.