Pages

Monday, August 31, 2015

தள்ளாடுது எஸ்.எஸ்.ஏ. சர்ச்சையில் ஆர்.எம்.எஸ்.ஏ., கல்வித் திட்டங்களுக்கு விரயமாகிறதா மத்திய அரசு நிதி

கல்வித்துறையில் கட்டாய கல்வி, மாணவர் கற்றல் திறன், பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தும் நோக்கத்தில், அனைவருக்கும் கல்வித் திட்டம் (எஸ்.எஸ்.ஏ.,) மற்றும் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டங்கள் (ஆர்.எம்.எஸ்.ஏ.,) ஏற்படுத்தப்பட்டன.முறையே 2002 மற்றும் 2009ம் ஆண்டுகளில் நடைமுறைக்கு வந்த இத்திட்டங்களுக்கு ஆண்டிற்கு ரூ.ஆயிரம் கோடிக்கு மேல் மத்திய அரசு, மாநில அரசுகள், 75:25 விகிதத்தில் நிதி ஒதுக்கீடு செய்கின்றன.

ஆனால் இத்திட்டங்கள் செயல்பாடு குறித்து பல சர்ச்சைகள் எழுந்துள்ளன.குறிப்பாக, எஸ்.எஸ்.ஏ., திட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருவதால் ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்து வருகின்றனர். தள்ளாட்டம்: மாணவர்கள் கற்றல் திறனை ஆய்வு செய்து மேம்படுத்துவதற்காக மாநில அளவில், 380 வட்டார வள மையங்கள் (பிளாக் ரிசோர்ஸ் சென்டர்ஸ்) உருவாக்கப்பட்டன. இவற்றை கண்காணிக்க மேற்பார்வையாளர் நியமிக்கப்பட்டனர். ஆனால், நிதிப் பற்றாக்குறை எனக் காரணம் காட்டி, 2013ம் ஆண்டில் இப்பணியிடங்களில் இருந்தவர்கள் கல்வித்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.

மாவட்ட அளவில் திட்டங்களை கண்காணிக்கும் கூடுதல் முதன்மை கல்வி அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால் தற்போது, 11 மாவட்டங்களில் இப்பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்ப இதுவரை நடவடிக்கை இல்லை.சர்ச்சையில் ஆர்.எம்.எஸ்.ஏ.,: இதேபோல் நடப்பாண்டில் ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டத்தில், 200 பள்ளிகளுக்கு மட்டுமே இதுவரை வகுப்பறை வசதி ஏற்படுத்தப்பட்ட நிலையில், 1250 தொடக்க மற்றும் உயர்நிலை பள்ளிகளுக்கு வகுப்பறை வசதி இல்லை. ஆனால் கட்டட வசதி ஏற்படுத்துவதற்கு முன்பே மாணவர் அமர 'ஸ்டீல் பெஞ்ச்' வசதி, புத்தகம் மற்றும் அலமாரி வசதிகள் பள்ளிகளில் மேற்கொள்ள ஆர்வம் காட்டுகின்றனர். இதுகுறித்து தலைமையாசிரியர்கள் சிலர் கூறியதாவது:'

ஸ்டீல் பெஞ்ச்' ஒன்று, ரூ.10 ஆயிரம் வீதம் ஒரு பள்ளிக்கு 40 'ஸ்டீஸ் பெஞ்ச்கள்' வாங்க அதிகாரிகள் வற்புறுத்துகின்றனர். ஆனால், அவற்றின் தரத்தை ஒப்பிட்டால் ரூ.5 ஆயிரம் கூட மதிப்பிட முடியவில்லை. அதேபோல் ஆண்டிற்கு ரூ.25 ஆயிரத்திற்கு நுாலகங்களுக்கான புத்தகங்கள் வாங்க அறிவுறுத்தப்படுகிறது. ஆனால் மாணவர்களுக்கு தேவையான புத்தகங்களை வாங்க முடியவில்லை. அதிகாரிகள் குறிப்பிடும் புத்தகங்களை மட்டும் தான் வாங்கமுடிகிறது. அறிவியல் ஆய்வக உபகரணங்கள் வாங்கும் விஷயத்திலும் தலையீடு உள்ளது என்றனர். இத்திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை ஏனோதானோ என பயன்படுத்தாமல் மாணவர் நலன், பள்ளி மேம்பாட்டிற்காக பயன்படுத்தும் வகையில், இன்று (செப்.,1) நடக்கும் கல்வி மானிய கோரிக்கையில் வழிகாட்டுதல்களை அரசு அறிவிக்க வேண்டும் என ஆசிரியர்கள், கல்வியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்

தேசிய திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம்

பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள், பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் போது, மாதம், 1,250 ரூபாய்; பட்டம் மற்றும் பட்ட மேற்படிப்பு படிக்கும் போது, மாதம், 2,000 ரூபாய் கல்வி உதவித்தொகை, மத்திய அரசால் வழங்கப்படுகிறது.இதற்கான நுழைவுத் தேர்வு, முதலில் மாநில அளவில் நடக்கும். அதில் தேர்ச்சி பெறுவோருக்கு, தேசிய அளவில் தேர்வு நடக்கும்.

மாநில தேர்வு, தமிழகத்தில், நவ., 8ம் தேதி நடக்கிறது. இதற்கான அறிவிப்பை, பள்ளிக் கல்வித்துறையின் அரசுத் தேர்வுகள் துறை அறிவித்துள்ளது. தேர்வு எழுத விரும்புவோர், பள்ளி தலைமை ஆசிரியர் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 'விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான அவகாசம், வரும், 5ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தலைமை ஆசிரியர்கள், வரும், 10ம் தேதி வரை, விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம்' என, தேர்வுத்துறை இயக்குனர் (பொறுப்பு) வசுந்தரா தேவி தெரிவித்துள்ளார்

377 ஆசிரியர்கள்ராதாகிருஷ்ணன் விருதுக்கு தேர்வு

மறைந்த முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான, வரும், 5ம் தேதி, ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில், ஒவ்வொரு ஆண்டும் சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு, டாக்டர் ராதாகிருஷ்ணன், 'நல்லாசிரியர்' விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு, தமிழகம் முழுவதுமுள்ள பல பள்ளிகளில் பணியாற்றும், 377 ஆசிரியர்கள், ராதாகிருஷ்ணன் விருதுக்கு தேர்வாகியுள்ளனர். தொடக்கப் பள்ளி, 201; உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி, 134; மெட்ரிக், 30; ஆங்கிலோ இந்தியன் பள்ளி, இரண்டு; கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன ஆசிரியர்கள், 10 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.-

டெபிட், கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துவோருக்கு லாபம்: கட்டண சலுகை வழங்க மத்திய அரசு புதிய திட்டம்

பொருட்கள், சேவைகளுக்கான கட்டணங்களை நேரடியாகச் செலுத்துவதற்குப் பதிலாக, 'எலக்ட்ரானிக் பேமென்ட்' எனப்படும், கடன் அல்லது பண அட்டைகளைப் பயன்படுத்தி பணத்தை செலுத்துவோருக்கு சலுகைகள் வழங்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

'நெட் பேங்கிங்' எனப்படும், வங்கிகளின் இணையதளம் வழியாக பணம் செலுத்துவது, அதே முறையில், அவரவர் மொபைல் போன்கள் மூலம் பணம் செலுத்தும், 'மொபைல் பேங்கிங்', ஒரு வங்கியிலிருந்து மற்றொரு வங்கியின் கணக்கிற்கு இணையதளம் மூலம் பணத்தை மாற்றும் வழிமுறை போன்றவை மூலம் பணம் செலுத்துவதை, மத்திய அரசு ஊக்குவிக்கிறது.

கட்டுப்படுத்த...:

இத்தகைய முறையை அனைவரும் பின்பற்றினால், கறுப்புப் பண உற்பத்தி மற்றும் புழக்கத்தை கட்டுப்படுத்த முடியும் என்பது, மத்திய அரசின் நம்பிக்கை. ஏனெனில், இந்த முறையில் பணம் செலுத்தும் போது, இருபுறமும் அதற்கான விவரங்கள் தெளிவாக இருக்கும் என்பதால், முறைகேடுக்கு வாய்ப்பில்லை என, மத்திய அரசு கருதுகிறது.இத்தகைய பணம் செலுத்தும் முறைகளால், பொய் கணக்கு எழுதுவது, செலுத்திய தொகைக்கு அதிகமாக கணக்கு காண்பிப்பது போன்ற முறைகேடுகளை தவிர்க்க முடியும்; நேர்மையான பண பரிமாற்றங்கள் நடைபெறும் என்பது மத்திய அரசின் கணிப்பு.இத்தகைய முறைகளில் அதிகமானோரை ஈடுபடுத்தவும், இத்தகைய முறைகளில் பணத்தை செலுத்துவோருக்கு சில சலுகைகளை வழங்கவும், மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி வெளிப்படையான, எலக்ட்ரானிக் முறையில் பணத்தை செலுத்துவோருக்கு, குறிப்பிட்ட சதவீதம் வரிச் சலுகை, கட்டணச் சலுகை வழங்க, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. அதுபோல, இந்த முறையில் பணத்தை பெறும் வர்த்தகர்கள், நிறுவனங்கள், அமைப்பிற்கும், குறிப்பிட்ட சதவீதம் ஊக்கத்தொகை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இப்போது, டெபிட் கார்டு முறையில் பணத்தை பெற்றுக் கொள்ளும் வர்த்தகர்களுக்கு, 0.75 முதல், 1 சதவீதம் வரை ஊக்கப்பணம் வழங்கப்படுகிறது. ஊக்கத்தொகை : அந்த வகையில், அட்டைகளை பயன்படுத்தி பணம் செலுத்துபவர்களுக்கு, வாகனங்களுக்கு பெட்ரோல் போடும் போது, ரயில் பயணத்திற்கு டிக்கெட் எடுக்கும் போது, சமையல் காஸ் சிலிண்டர் வாங்கும் போது, குறிப்பிட்ட தொகையை ஊக்கத்தொகையாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக, கடந்த ஜூன் மாதம், வரைவு அறிக்கை ஒன்றை தயாரித்து, அனைத்து துறைகள் மற்றும் வங்கிகளுக்கு, மத்திய அரசு அனுப்பி வைத்தது. அவற்றில் தெரிவிக்கப்பட்ட திருத்தங்களின் அடிப்படையில், மத்திய அரசு குறிப்பு ஒன்றை தயாரித்துள்ளது.கேபினட் கூட்டத்தில் அந்த குறிப்பு விவாதிக்கப்பட்டு, ஒப்புதல் வழங்கப்பட்டதும், இ - பேமென்ட் முறைகளுக்கு வரிச்சலுகைகள் வழங்கப்படும் என, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 'இ - பேமென்ட்' முறைகள்: * கிரெடிட் கார்டு * டெபிட் கார்டு * இ.சி.எஸ்., *என்.இ.எப்.டி., *ஐ.எம்.பி.எஸ்., * நெட் பேங்கிங் *மொபைல் பேங்கிங் நன்மைகள் என்ன? * மிகவும் எளிதானது; பாதுகாப்பானது; முறைகேடுகளுக்கு வாய்ப்பில்லாதது. *வங்கி அல்லது பணம் செலுத்தும் இடத்திற்கு நேரடியாக செல்லத் தேவையில்லை. * பணத்தை கையில் வைத்திருக்கத் தேவையில்லை; இதனால், தொலைந்து போதல், திருடப் படுதல் போன்ற பிரச்னை இல்லை.

* குறிப்பிட்ட நேரத்தில் தான் செயல்படுத்த முடியும் என்றில்லாமல், 24 மணி நேரத்தில் எப்போது வேண்டுமானாலும் பணத்தை செலுத்த முடியும்.

* எந்த நேரமும் விவர அறிக்கை பெற்றுக் கொள்ள முடியும். தவறுகளுக்கும் வாய்ப்பு உள்ளது: இ - பேமென்ட் முறை எளிதாக இருந்தாலும், படித்தவர்களாலும், விவரம் அறிந்தவர்களாலும் தான், இணையதளங்கள், மொபைல் போன்களை பயன்படுத்தி, தவறின்றி பணத்தை செலுத்த முடியும். சிறு தவறு கூட, பணத்தை இழக்கும் அபாயத்தை ஏற்படுத்தி விடும்.இணையதள முறைகேடுகள் அதிகரித்துள்ள இந்த காலத்தில், மிகுந்த கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

Saturday, August 29, 2015

அரசு பள்ளி மாணவர்களுக்குஇலவச அறிவியல் சுற்றுலா

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, அறிவியல் பாட விழிப்புணர்வை செய்முறை பயிற்சி வழியே ஏற்படுத்த, பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதற்கு, மத்திய அரசு நிதி உதவி வழங்குகிறது. 'அனைவருக்கும் கல்வி இயக்ககம்' திட்டத்தில், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, இலவச அறிவியல் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி, பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: புதிய அணுகுமுறை கல்வித் திட்டத்தின் கீழ் மாணவியர், சிறுபான்மை, பட்டியலின மாணவ, மாணவியர் மற்றும் நகர்ப்புற நலிவடைந்த குழந்தைகளின் அறிவியல் அறிவை வளப்படுத்த, இலவசமாக அறிவியல் சுற்றுலா அழைத்துச் செல்ல வேண்டும். அரசுப் பள்ளிகளில், எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களை, இந்த சுற்றுலாவில் அழைத்துச் செல்லலாம். ஆராய்ச்சி மையங்கள், அறிவியல் மையங்கள், விவசாய ஆராய்ச்சி நிலையங்கள், அரசு தோட்டப் பண்ணைகளுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். ஒரு நாள் சுற்றுலாவுக்கு, காலைச் சிற்றுண்டி, மதிய உணவு, பேருந்து போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து செலவுகளுக்கும், 'அனைவருக்கும் கல்வி இயக்ககம்' நிதி வழங்கும்.

அரசு பேருந்துகளை மட்டுமே வாடகைக்கு அமர்த்திச் செல்ல வேண்டும். தனியார் பேருந்துகளில் செல்லக் கூடாது. மாணவர்களுடன் உடல்நலன் மிக்க, சுற்றுலா தகவல்கள், சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கக் கூடிய ஆசிரியர்கள், ஐந்து மாணவருக்கு ஒருவர் என, பாதுகாப்புக்கு செல்ல வேண்டும். அனைத்து பாதுகாப்பு விதிகளையும் கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது

அரசு பள்ளிகளில் மந்தமான மாணவர்கள் உஷார்!

தேர்ச்சி விகிதம் குறித்து இலக்கு நிர்ணயித்துள்ளதால், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், மாணவர்களை, 'பெயில்' ஆக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

இலவச திட்டம்: தமிழக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம், தனியார் மெட்ரிக் பள்ளிகளை விட குறைவாக உள்ளது. இதனால், தனியார் பள்ளிகளை நோக்கி, பெற்றோர் கவனம் திரும்பிஉள்ளது.இந்நிலையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு, அரசின் இலவச திட்டங்கள், மானியங்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான மானியம் போன்றவற்றால், தேர்ச்சி விகிதம் பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த தேர்ச்சி விகித இலக்கை ஆசிரியர்கள் தவறாக புரிந்து கொண்டு, 'ஆவரேஜ்' மாணவர்களை, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளில்,'பெயில்' ஆக்குகின்றனர்.

இதனால், மனதளவில் பாதிக்கப்படும் மாணவர்கள் தவறான முடிவுகளை மேற்கொள்கின்றனர். வழக்கு: மதுரை, ஆலம்பட்டியிலுள்ள அரசு உதவிபெறும் பள்ளியில், இரண்டு மாணவர்கள், ஒன்பதாம் வகுப்பில்,'பெயில்' செய்யப்பட்டதால், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்ததாக, மாணவனின் தாய் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.இந்த வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற கிளை, பள்ளி கல்வித்துறைக்கு,'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டுள்ளது.இதற்கிடையில்,'பெயில்' ஆக்கும் சம்பவங்கள் குறித்து விசாரித்த போது, கட்டாயமாக, 'பெயில்' ஆக்குவது, மாணவர்களை பாதியிலேயே பள்ளியில் இருந்து விரட்டுவது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது அவர்கள் கூறியதாவது: கட்டாயமாக, 'பெயில்' ஆக்குவது, பள்ளியில் இடைநிற்றல் போன்றவற்றை, நாங்கள் அனுமதிப்பதில்லை. தேர்ச்சி இலக்கு வேண்டும் என்பதை, ஆசிரியர்கள் புரிந்து கொண்டு கற்பித்தலில் மாணவர்களை அறிந்து, அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டும்.

மாறாக அவர்களை கட்டாய,'பெயில்' ஆக்குவது கூடாது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.ஆசிரியர்கள் தரப்பில் விசாரித்தபோது, 'பள்ளிக்கு பாதி நாட்கள் வராத கிராமப்புற மாணவர்களும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கின்றனர். அவர்களிடம் தேர்ச்சி இலக்கை எதிர்பார்க்க முடியாது. எனவே, மாணவர்களின் குடும்ப, சமூக சூழல்களுக்கு ஏற்ற நிலையில் தான், அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் கிடைக்கும்' என்றனர்.

டிசம்பருக்குள் மாணவர்களுக்கு லேப் - டாப் வழங்க உத்தரவு

தமிழகத்தில், பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச லேப் - டாப்புக்கான செலவுத்தொகை, ஆண்டுக்கு, ஆண்டு எகிறி வரும் நிலையில், சட்டசபை தேர்தல் நெருங்கி வருவதை கருத்தில் கொண்டு, நடப்பாண்டில் டிசம்பர் மாதத்துக்குள், லேப் - டாப் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பயிலும் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், தொழில்நுட்ப கல்லுாரி மாணவர்களுக்கு, அரசின் சார்பில் இலவச லேப் -- டாப் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த, 2011 செப்., 15ல் இத்திட்டத்தை, தமிழக முதல்வர் ஜெயலலிதா, திருவள்ளூர் மாவட்டம் காக்களுரில் துவக்கி வைத்தார். கடந்த, 2011 முதல், 2013 வரை, இத்திட்டத்தில், மாணவர்களுக்கு தங்கு தடையின்றி லேப் - டாப் வழங்கி முடிக்கப்பட்டது. இதில், குறிப்பாக, 2014 - 2015 கல்வி ஆண்டில், 50 சதவீதத்துக்கும் மேலான மாணவ, மாணவியருக்கு, லேப் - டாப் வழங்கப்படவில்லை. இதில் சென்னையில் பயிலும் மாணவர்களுக்கு, 90 சதவீதம் வரை, வழங்கப்பட்ட நிலையில், பிற மாவட்டங்களில் பயிலும் மாணவ, மாணவியருக்கு, 30 சதவீதம் மட்டுமே வழங்கப்பட்டது.

தற்போது, லேப் - டாப் கொள்முதலுக்கான டெண்டர் பணி முடிந்துள்ளது. விரைவில் லேப் - டாப் வினியோகம் செய்யப்பட உள்ளது. இதில், லேப் - டாப் கொள்முதலில் பள்ளிக் கல்வித்துறையில் மட்டும், கடந்த, 2011 - -12ல் அரசுக்கு, 739 கோடி ரூபாய் வரை செலவான நிலையில், தற்போது, 1,120 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதன் மூலம், இந்த திட்டத்தின் காரணமாக, அரசுக்கு ஆண்டுக்கு, 400 கோடி ரூபாய் வரை, கூடுதல் செலவு ஆகி உள்ளது. உயர் கல்வித்துறையின் சார்பில் ஆண்டுக்கு, 10 லட்சம் மாணவர்களுக்கு லேப் - டாப் வழங்கப்படுகிறது. அந்த வகையில், அரசுக்கு ஆண்டுக்கு மேலும் கூடுதலாக, 200 கோடி ரூபாய் வரை, செலவாகி வருகிறது.

பள்ளிக் கல்வித்துறை, உயர்கல்வித்துறை ஆகிய இரண்டு துறைகளால் வழங்கப்படும் இலவச லேப் - டாப்புகளால் அரசுக்கு ஆண்டுக்கு, 500 கோடி ரூபாய் வரை, கூடுதல் செலவாகி வருகிறது. எதிர்பார்ப்பு:கடந்த, 2014- - 15ம் கல்வி ஆண்டில் பயின்ற மாணவர்கள், நடப்பு 2015 - -16ம் கல்வி ஆண்டில் பயின்று வரும் மாணவ, மாணவியர், அவர்களின் பெற்றோரின் ஓட்டுகளை தங்கள் பக்கம் இழுக்கும் வகையில், டிசம்பர் மாதத்துக்குள் இலவச லேப் - டாப், வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதனால், பள்ளிக் கல்வித்துறை, உயர்கல்வித்துறை, சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அதிகாரிகள் அதற்கான பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். நடப்பாண்டில் டிசம்பருக்குள், லேப் - டாப், மாணவர்களை வந்தடையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. வேலுார் முதலிடம்:இலவச லேப் - டாப் திட்டத்தில் பயன் அடையும் மாணவ, மாணவியரின் எண்ணிக்கையில், வேலுார் மாவட்டம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கடந்த 2014 - -15 கல்வி ஆண்டில், வேலுாரில், 34,772 மாணவர்கள் பட்டியலில் இடம் பெற்று இருந்தனர். சென்னை, 28,352, சேலம், 27 ,007 என, அடுத்தடுத்த இடங்களை பெற்றன.

அதே நிலை நடப்பு கல்வி ஆண்டு, 2015- - 16ல் தொடர்கிறது. ஆனால், சென்னையில் உள்ள அனைத்து பயனாளிகளுக்கும், ஒவ்வொரு ஆண்டும் முழுமையாக லேப்- டாப் வழங்கி முடிக்கப்படும் நிலையில், பிற மாவட்டங்களில் குறிப்பிட்ட சதவீதம் மட்டுமே வழங்கப்பட்டு வருவதாக பள்ளிக் கல்வித்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன

Friday, August 28, 2015

பி.எட். கலந்தாய்வு: விண்ணப்பங்கள் எங்கு கிடைக்கும்? விண்ணப்பத்தை சமர்ப்பிக்க செப்.11 கடைசிநாள்

இந்தக் கல்வியாண்டில் (2015-16) பி.எட். படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் சென்னை விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் உள்பட தமிழகம் முழுவதும் 13 மையங்களில் செப்டம்பர் 3 ஆம் தேதி முதல் விநியோகிக்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் செப்டம்பர் 10 ஆம் தேதி வரை சனி, ஞாயிறு உள்பட அரசு விடுமுறை நாள்களிலும் காலை 10 மணி முதல் விநியோகிக்கப்பட உள்ளன.

இதுகுறித்து கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி: 2015-16 கல்வியாண்டு பி.எட். மாணவர் சேர்க்கை ஒற்றைச் சாளர கலந்தாய்வு முறையில் நடத்தப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் சென்னை சைதாப்பேட்டை கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம், விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம், குமாரபாளையம் அரசு கல்வியியல் கல்லூரி, ஒரத்தநாடு அரசு கல்வியியல் கல்லூரி, புதுக்கோட்டை அரசு கல்வியியல் கல்லூரி, கோவை அரசு கல்வியியல் கல்லூரி, வேலூர் காந்திநகர் அரசு கல்வியியல் கல்லூரி, திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராம் லட்சுமி கல்வியியல் கல்லூரி, சேலம் ஸ்ரீ சாரதா கல்வியியல் கல்லூரி, மதுரை தியாகராஜர் பர்செப்டார் கல்லூரி, தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் கல்வியியல் கல்லூரி, பாளையங்கோட்டை செயின்ட் இக்னேசியஸ் கல்வியியல் கல்லூரி, திருவட்டாறு ஆத்தூர் என்.வி.கே.எஸ்.டி. கல்வியியல் கல்லூரி ஆகிய 13 மையங்களில் செப்டம்பர் 3 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை விநியோகிக்கப்பட உள்ளது.

விண்ணப்பக் கட்டணம் ரூ, 300 ஆகும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கான கல்விக் கட்டணம் ரூ. 175. கட்டணத்தை பணமாகவோ அல்லது, "செயலர், தமிழ்நாடு பி.எட். சேர்க்கை, சென்னை - 600005' என்ற பெயரில் வங்கி கேட்பு வரைவோலையாக சமர்ப்பித்து விண்ணப்பத்தைப் பெற்றுக் கொள்ளலாம். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரால் சான்றொப்பமிட்ட சாதிச் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் நேரில் மட்டுமே வழங்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை "செயலர், தமிழ்நாடு பி.எட். சேர்க்கை 2015-16, விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் (தன்னாட்சி), காமராஜர் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை - 600005' என்ற முகவரிக்கு செப்டம்பர் 11 மாலை 5 மணிக்குள் வந்து சேரும் வகையில் அனுப்ப வேண்டும். அதன் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. பி.எட். சேர்க்கை வழிகாட்டி நெறிமுறைகள் www.ladywillingdoniase.com என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

பி.இ., பட்டதாரிகள் பி.எட்., படிக்க அனுமதி ஆசிரியர் பணி யாருக்கு என்பதில் குளறுபடி

பி.எட்., படிப்பில், இன்ஜினியரிங் படித்தவர்களும் சேர, இந்த ஆண்டு முதல், அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அதனால், கலை, அறிவியல் பட்ட தாரிகளிடம் குழப்பம் ஏற்பட்டுள்ளது. பி.இ., முடித்தவர்களுக்கு, ஆசிரியர் பணி வழங்க முடியுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

மாணவர் சேர்க்கை: பி.எட்., படிப்பில் புதிய விதிமுறைகள் தொடர்பான குழப்பத்தால், இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை, ஒரு மாதம் தாமதமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பி.எட்., படிப்பு எத்தனை ஆண்டு என்ற குழப்பம் தீர்க்கப்படாமலேயே, மாணவர் சேர்க்கை பணி துவங்கியுள்ளது. மத்திய அரசு அளித்த புதிய விதிமுறைகளையும், தமிழக அரசு எந்த திருத்தமும் இன்றி, அப்படியே வெளியிட்டு உள்ளது.இதன்படி, பி.இ., - பி.டெக்., போன்ற இன்ஜி., முடித்தவர்களும், பி.எட்., படிப்பில் சேரலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரிகள் குழப்பம் அடைந்துள்ளனர். பொதுவாக, பி.எஸ்சி., - எம்.எஸ்சி., - பி.ஏ., -எம்.ஏ., போன்ற பட்டப்படிப்புகளில், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், பொருளியல் மற்றும் மொழிப் பாடங்களில், அதாவது, பள்ளிகளில் பிளஸ் 2 வரை, அமலில் உள்ள பாடப்பிரிவுகளை படித்தால் மட்டுமே, அவர்களை, பி.எட்., படிப்பில் சேர்ப்பது வழக்கம்.

பி.எட்., முடித்த பின், சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் ஆசிரியராக பணி வாய்ப்பு பெறுவர்.அதுவும், ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் தகுதித் தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களே, ஆசிரியர்களாக நியமிக்கப்படுகின்றனர். ஆனால், பி.இ., - பி.டெக்., முடித்தால், அவர்கள் படிக்கும் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், சிவில் போன்ற பாடப்பிரிவுகள், பள்ளிகளில் கிடையாது. எனவே, அவர்களை எப்படி ஆசிரியர் பணியில் சேர்க்க முடியும். அதற்கு ஏற்றார் போல் பாடத்திட்டம் மாறுமா; எப்போது மாற்றப்படும். பணி நியமன விதிகளில் மாற்றம் வருமா என, பல கேள்விகள் எழுந்துள்ளன.

புது நடைமுறை வேண்டாம்: இதுகுறித்து, தரமான கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான அமைப்பின் தலைவர் கார்த்திகேயன் கூறும்போது, ''இது குளறுபடியான அறிவிப்பு. பி.இ., - பி.டெக்., படிப்புக்கும், பள்ளிப்படிக்கும் இணை வைக்க முடியாது.

''அப்படி வைப்பதாக இருந்தால், அந்த பாடப்பிரிவுகள் தனியாக பள்ளிகளில் துவங்கப்பட வேண்டும். எனவே, புதிய நடைமுறை தேவையற்ற பிரச்னைகளையும், குழப்பத்தையுமே உருவாக்கும்,'' என்றார். மாணவர் சேர்க்கையில் எஸ்.எம்.எஸ்., வசதி: இந்த ஆண்டு பி.எட்., படிப்புக்கு மட்டுமே, ஒற்றைச் சாளர முறையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. எம்.எட்., படிப்புக்கு அந்தந்த கல்லுாரிகளே மாணவர்களை சேர்த்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப பரிசீலனைக்கு பின், தேர்வானவர்கள் கலந்தாய்வுக்கு வர, இந்த ஆண்டு முதல் முறையாக, எஸ்.எம்.எஸ்., அனுப்பப்பட உள்ளது.