Pages

Monday, June 30, 2014

01.07.2014 முதல் அகவிலைப்படி உயர்வு எவ்வளவு -teachertn

மே'2014 மாத விலைவாசி உயர்வுக் குறியீட்டு எண் இன்று (ஜூன் 30) வெளியிடப்பட்டது. இதன் படி அகவிலைப்படி உயர்வு 106.17% ஆக உள்ளது. ஜூன் மாத விலைவாசி உயர்வுக் குறியீட்டு எண் ஜூலை 31 ஆம் தேதி வெளியிடப்படும். அதன்பிறகே அகவிலைப்படி உயர்வு எவ்வளவு என்பது துல்லியமாக தெரிய வரும்.  இதன்பிறகு அகவிலைப்படி உயர்வு பற்றிய நடைமுறைகள் தொடங்கும்.  ஆகஸ்ட் இரண்டாம் வாரம் அகவிலைப்படி உயர்வு பற்றிய பரிந்துரைகள் மத்திய அமைச்சரவை குழுவிற்கு அனுப்பப் படும்.

  மத்திய காபினெட் இதுபற்றி முடிவு செய்து, செப்டம்பர் முதல் அல்லது இரண்டாம் வாரம் அதிகாரப் பூர்வமான அறிவிப்பை வெளியிடும்.  இதன் பிறகு அரசாணை வெளியிடப்படும்.  மத்திய அரசின் அரசாணையை பின்பற்றி மாநில அரசுகள் தங்கள் ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு பற்றிய அறிவிப்பை வெளியிடும்.  மாநில அரசுகள் செப்டம்பர் 2 அல்லது 3 ஆம் வாரத்தில் அகவிலைப்படி உயர்வு பற்றிய அறிவிப்பை வெளியிடலாம் என எதிபார்க்கப் படுகிறது.  மாநில அரசு ஊழியர்கள் அக்டோபர் முதல் வாரத்தில் 3 மாத அகவிலைப்படி உயர்வு நிலுவைத் தொகையை பெறுவார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது. 01.07.2014 முதல் அகவிலைப்படி உயர்வு 7% அல்லது 8% ஆக இருக்கலாம் என கணிக்கப் பட்டுள்ளது.

புதிய மருத்துவ காப்பீட்டில் சேர ஓய்வூதியதாரர்களுக்கு காலக்கெடு நீட்டிப்ப

புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சேர ஓய்வூதியதாரர்களுக்கு காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: 1-7-2014 முதல் ஓய்வூதியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதற்காக ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் தங்களது விபரங்கள் அடங்கிய படிவத்தை ஜூன் 30க்குள் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. தற்போது இதற்கான காலக்கெடு இம்மாதம் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

எனவே, படிவங்களை இதுவரை அளிக்காத ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் 31ம் தேதிக்குள் ஓய்வூதியம் பெறும் அலுவலகத் தில் பொதுத்துறை வங்கி கிளையில் அளித்து, அதன் ஒரு நகலை ஓய்வூதியம் வழங்கும் அலுவலரின் கையொப்பத்துடன் பெற்றுக்கொள்ள வேண்டும். அந்த நகலை, அடையாள அட்டை வழங்கப்படும் வரை பணம் செலவின்றி மருத்துவச் சிகிச்சைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்

2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் பாடவாரியாக தேர்ச்சி பெற்றவர்களின் விவரம்; அதிகாரப்பூர்வ தகவல்

ஆசிரியர் தேர்வு வாரியம் துணை இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.811/TET/2014, நாள்.17.06.2014ன் படி  TNTETல்தேர்ச்சி பெற்றவர்களின் விவரம்

தமிழ் - 9853 ஆங்கிலம் - 10716 கணிதம் - 9074 தாவரவியல் - 295 வேதியியல் - 2667
விலங்கியல் - 405
இயற்பியல் - 2337 வரலாறு - 6211 புவியியல் - 526 மொத்தம் தேர்ச்சி பெற்றவர்களின் விவரம் : 42084

இட மாறுதல் கலந்தாய்வில் குழப்பம்: 'ஆன்லைன்' குளறுபடியால் ஆசிரியர்கள் ஆவேசம் A

: திருப்பூரில் நடந்த ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வில், நீலகிரி மாவட்டத்தில், பணியிடம் காலி இல்லை என 'ஆன்லைன்' தகவல் வந்ததால், ஆசிரியர்கள் ஆவேசம் அடைந்தனர். திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளியில், நேற்று, துவக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளை சேர்ந்த, இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான 'கவுன்சிலிங்' துவங்கியது. மாவட்ட கல்வி அலுவலர் கரோலின் தலைமையில், 26 உதவி தொடக்க கல்வி அலுவலர்கள், கவுன்சிலிங் நடத்தினர். திருப்பூர் மாவட்டத்தில் இடைநிலை ஆசிரியர்கள் 582 பேர், பட்டதாரி ஆசிரியர்கள் 195 பேர் பணி இட மாறுதலுக்கு விண்ணப்பித்திருந்தனர்.

நீலகிரி மாவட்டத்துக்கு இட மாறுதல் கேட்டு விண்ணப்பித்த ஆசிரியர்களுக்கு, அங்கு பணியிடம் காலி இல்லை என ஆன்-லைனில் வந்துள்ளது. இதனால் ஆவேசம் அடைந்த ஆசிரியர்கள், பள்ளி வளாகத்தில் திரண்டு நின்றிருந்தனர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், ஆசிரியர்களை சமாதானப்படுத்தினர். மாவட்ட கல்வி அலுவலர் கரோலின் கூறுகையில்,''நீலகிரி மாவட்டத்துக்கு இட மாறுதல் செய்ய, காலி பணியிடம் இல்லை என்று ஆன்-லைனில் தகவல் வந்தது. சென்னை இயக்குனரகத்தில் இருந்து, இத்தகவல் வருவதால், நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது. எங்கள் தரப்பில், எந்த தவறும் இல்லை,'' என்றார். ஆசிரியர்கள் மதியம் வரை காத்திருந்தனர்.

அதன்பின், மீண்டும் முயற்சி செய்தபோது, நீலகிரி மாவட்டத்தில் காலி பணியிடங்கள் இருப்பதாக காட்டியது. அதன்பின், அம்மாவட்டத்துக்கு விண்ணப்பித்த ஆசிரியர்கள் அழைக்கப்பட்டு, 'கவுன்சிலிங்'கில் பங்கேற்றனர். ஆசிரியர்கள் திடீர் மறியல்: ' திருநெல்வேலி, மதுரை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஆசிரியர் காலிப்பணியிடங்களை காட்ட மறுக்கின்றனர்; ஆன்லைன் கவுன்சிலிங்கில் குளறுபடி நடக்கிறது,' என, கூறி வெளிமாவட்ட ஆசிரியர்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர். நேற்று இரவு 8.00 மணிக்கு ஜெய்வாபாய் பள்ளி முன் ரோட்டில் அமர்ந்த ஆசிரியர்கள், 'ஆன்லைன் கவுன்சிலிங்கில் குளறுபடி நடக்கிறது; காலிப்பணியிடங்களை காட்ட மறுக்கின்றனர்,' எனக் கூறி கோஷம் எழுப்பினர்.

திருப்பூர் வடக்கு போலீசார் அவர்களை பள்ளிக்குள் அழைத்துச் சென்றனர். முதன்மை கல்வி அலுவலர் ஆனந்தி கூறுகையில், ''மாநிலம் தழுவிய கவுன்சிலிங்; சீனியாரிட்டி அடிப்படையில் நிரப்பப்படுகிறது. இன்றைய நிலை இது; நாளை (இன்று) காலை கவுன்சிலிங் 9.00 மணிக்கு துவங்கும். அதில் உள்ள பகுதிகளை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்,' என்றார்.

Sunday, June 29, 2014

பி.இ. பொதுப் பிரிவு கலந்தாய்வு தொடங்குவதற்கான மறு தேதி திங்கள்கிழமை (ஜூன் 30) இறுதி செய்யப்படும

அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள பொறியியல் கலந்தாய்வு ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட உள்ளது. அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சிலிடம் (ஏஐசிடிஇ) நிலுவையில் உள்ள பொறியியல் கல்லூரி விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்ய ஒரு வாரம் கால அவகாசத்தை அளித்து உச்ச நீதிமன்றம் கடந்த 26-ஆம் தேதி தீர்ப்பளித்தது. இந்த உத்தரவைத் தொடர்ந்து கடந்த 27-ஆம் தேதி தொடங்கியிருந்த பொதுப் பிரிவு கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் ஒத்தி வைத்தது.

இதனால் கடும் பாதிப்புக்கு ஆளான, மாணவர்களும் பெற்றோரும், கலந்தாய்வு மறு தேதி எப்போது அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்த நிலையில், நிலுவையில் உள்ள கல்லூரி விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யும் பணி திங்கள்கிழமை (ஜூன் 30) முடிக்கப்பட்டு விடும் என்றும், அதன் பிறகு பொதுப் பிரிவு கலந்தாய்வு மறு தேதியை நிர்ணயம் செய்து கொள்ளலாம் என அண்ணா பல்கலைக்கழகத்துக்கு இரு தினங்களுக்கு முன்பு ஏஐசிடிஇ அனுமதி அளித்தது. இதனடிப்படையில், கலந்தாய்வு மறு தேதியை இறுதி செய்வதற்கான ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தை அண்ணா பல்கலைக்கழகம் திங்கள்கிழமை கூட்டுகிறது. இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜாராம் கூறியது:

கலந்தாய்வு மறு தேதியை நிர்ணயம் செய்ய பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் கூட்டப்பட உள்ளது. பல்வேறு காரணிகளின் அடிப்படையில் ஏற்கெனவே கலந்தாய்வு தொடங்குவதற்கான மூன்று தேதிகள் தெரிவு செய்து வைக்கப்பட்டுள்ளன. ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் இதில் ஏதாவது ஒரு தேதி இறுதி செய்யப்பட்டு உடனடியாக அறிவிப்பு வெளியிடப்படும் என்றார்.

Saturday, June 28, 2014

பி.இ., கலந்தாய்வு தேதி நாளை வெளியாகுமா? -dinamalar

பி.இ., கலந்தாய்வு தேதியை, நாளை அல்லது நாளை மறுநாள், அண்ணா பல்கலை அறிவிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த, 27ம் தேதி துவங்க வேண்டிய பி.இ., பொதுப்பிரிவு கலந்தாய்வு, உச்சநீதிமன்றம் உத்தரவு காரணமாக, கடைசி நேரத்தில் தள்ளி வைக்கப்பட்டது. ஏ.ஐ.சி.டி.இ., (அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழு), தன்னிடம் நிலுவையில் உள்ள புதிய பொறியியல் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுத்ததும், அதன்பின், இணைப்பு அங்கீகாரம் வழங்க வேண்டிய பணியை, அண்ணா பல்கலை செய்யும். ஏ.ஐ.சி.டி.இ., நாளைக்குள், நிலுவை விண்ணப்பங்கள் மீது முடிவை எடுத்துவிடும் என, எதிர்பார்க்கப்படுகிறது

. எனவே, அதற்கடுத்த ஓரிரு நாளில், தமிழகத்தைச் சேர்ந்த கல்லூரிகளுக்கு இணைப்பு அங்கீகாரம் வழங்க, அண்ணா பல்கலை நடவடிக்கை எடுத்துவிடும்.எனவே, நாளை மாலைக்குள், ஏ.ஐ.சி.டி.இ., முடிவு தெரிந்துவிடும் என, அண்ணா பல்கலை எதிர்பார்க்கிறது. அதன்படி, நாளை, ஏ.ஐ.சி.டி.இ., முடிவு வந்ததும், கலந்தாய்வு துவங்கும் தேதியை, அண்ணா பல்கலை அறிவிக்கும். இழப்பு நாட்களை ஈடுகட்டும் வகையில், கலந்தாய்வு சுற்றுக்களை அதிகப்படுத்த, அண்ணா பல்கலை முடிவு செய்துள்ளது. இதற்கேற்ப, ஏற்கனவே வெளியிட்ட கலந்தாய்வு அட்டவணையை மாற்றி, புதிய அட்டவணையை வெளியிடவும், பல்கலை திட்டமிட்டுள்ளது.

ஓய்வூதியர்களுக்கான மருத்துவ காப்பீடுத் திட்டம் அறிமுகம்

: ஓய்வூதியர்கள் மருத்துவ காப்பீடுத் திட்டத்தில் பயன் பெற, ஒருங்கிணைப்பாளர்களை தொடர்பு கொண்டு விபரம் பெறலாம். தமிழக அரசின் நிதி மற்றும் கருவூலத்துறையின் அரசாணை எண் 171, நாள்: 26.6.2014 ன் படி, ஓய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் வரும் ஜூலை 1 முதல் 2018 ஜூன் 30 வரை அமலில் இருக்கும். இதில் பயன்பெற, ஓய்வூதியர்கள் ஜூலை 31 வரை, கருவூலத்தில் படிவம் பூர்த்தி செய்து வழங்கலாம்

. இதில் பயன்பெற விரும்பினால், '1800 233 5544' எண்ணில் தொடர்பு கொண்டு, விபரங்களை தெரிவிக்க வேண்டும். பின், பட்டியலில் உள்ள மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெறலாம். இம்மாவட்டத்தில் அரவிந்த் கண் மருத்துவமனை, அப்போலோ, ஜவஹர், ஆசீர்வாதம் மருத்துவமனைகள் உட்பட 44 மருத்துவமனைகளில் இத்திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறலாம். இதுதொடர்பாக ஒருங்கிணைப்பாளர் நாகேந்திரனை 73737 03197 ல் தொடர்பு கொள்ளலாம். திண்டுக்கல் மாவட்டத்தில் 21(ஜாபர் 73730 69010), தேனி 7 (கபீர் 73730 69012), ராமநாதபுரம் 7 (ரவிச்சந்திரன் 73737 03174), சிவகங்கை 6 (விஜயகுமார் 73730 69011), விருதுநகரில் 19 (சுரேஷ்குமார் 73730 69015) மருத்துவமனைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

பி.எட்., விண்ணப்ப வினியோகம் ஜூலை 18 வரை நீட்டிப்பு

  மதுரை காமராஜ் பல்கலை தொலைநிலைக் கல்வி இயக்ககத்தில் பி.எட்., படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பம் வினியோகம், ஜூலை 18ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது, என பல்கலை தொலைநிலைக் கல்வி இயக்குனர் பாலன் தெரிவித்துள்ளார். இதுகுறித்த விவரம்: தேசிய கல்விக் குழுமத்தால் அங்கீகரிக்கப்பட்ட இளங்கலை கல்வியியல் (பி.எட்.,) பட்டப் படிப்புக்கு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் 2 ஆண்டுகள் கற்பித்தல் அனுபவத்துடன் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் கற்பிக்கப்படும் பாடங்களில் ஏதேனும் ஒன்றில், அங்கீகரிக்கப்பட்ட பல்கலை மூலம் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அரசு இடஒதுக்கீடு அடிப்படையில் சேர்க்கை நடக்கும். நுழைவுத் தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

விண்ணப்பம் பெற தேதி 18.7.2014 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 'பல்கலை நகர், மாணவர் சேர்க்கை மையம் மற்றும் நகர் வளாகம், அழகர்கோவில் ரோடு, மதுரை-2' ஆகிய இரண்டு இடங்களில் வழங்கப்படுகிறது. விண்ணப்பங்களை www.mkudde.org என்ற இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம், என தெரிவித்துள்ளார்.

டி.என்.பி.எஸ்.சி., தலைவராக பாலசுப்ரமணியன் நியமனம்

டி.என்.பி.எஸ்.சி., (அரசுப் பணியாளர் தேர்வாணையம்) உறுப்பினர், பாலசுப்ரமணியனிடம், தலைவர் பதவி, கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. தேர்வாணையத் தலைவர் பதவியில் இருந்த, நவநீதகிருஷ்ணன், அ.தி.மு.க., சார்பில், ராஜ்யசபா எம்.பி., தேர்தலில் போட்டியிட்டதால், டி.என்.பி.எஸ்.சி., தலைவர் பதவியை, 10 நாட்களுக்கு முன், ராஜினாமா செய்தார். எனினும், தேர்வாணைய இணையதளத்தில் இருந்து, நவநீதகிருஷ்ணன் புகைப்படம் மற்றும் பெயர் அகற்றப்படாமல் இருந்தது. இது குறித்து, 'தினமலர்' நாளிதழில், நேற்று செய்தி வெளியான நிலையில், தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) இருந்து, நவநீதகிருஷ்ணன் புகைப்படம் மற்றும் பெயர் நீக்கப்பட்டது.

மேலும், தேர்வாணைய உறுப்பினர்களில் ஒருவரான, பாலசுப்ரமணியன், தலைவர் பதவியை, கூடுதல் பொறுப்பாக வகிப்பார் எனவும், அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய தலைவர் நியமிக்கப்படும் வரை, தலைவர் பதவியை, பாலசுப்ரமணியன் கவனிப்பார்.

ஆசிரியர் நியமனத்தில் ‘வெயிட்டேஜ் மார்க்’ அரசாணையை ரத்து செய்ய ஐகோர்ட்டில் மனுதாக்கல


புதுக்கோட்டையை சேர்ந்த பிரபாகர். ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: நான் எம்எஸ்சி, எம்எட் முடித்துள்ளேன். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிந்துள்ளேன். கடந்தாண்டு நடந்த டிஇடி தேர்வில் 84 மதிப்பெண்கள் பெற்றுள்ளேன். கல்வித்துறையின் சார்பில் கடந்த மே 30ம் தேதி அரசாணை எண் ‘71’ வெளியிடப்பட்டது.
அதில், டிஇடி தேர்வில் வெற்றி பெற்றவர்களில் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்திற்கு 100 வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. பிளஸ் 2விற்கு 10, டிகிரிக்கு 10, பிஎட் 15 என தனித்தனியாக வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. இந்த முறையால் 10 ஆண்டுக்கு முன் பிளஸ் 2 முடித்தவர்களுக்கு பாதிப்பு ஏற்படும். 

இதே போல் டிகிரி பாடத்திட்டமும் ஒவ்வொரு பல்கலைக்கழகத்திற்கும் மாறுபடுகிறது. தன்னாட்சி கல்லு£ரிகளிலும் பாடத்திட்ட முறை மாறுபடுகிறது. எனவே இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை நீதிபதி ரவிசந்திரபாபு விசாரித்தார். மனு குறித்து பதில் அளிக்குமாறு பள்ளிக் கல்வித்துறை செயலாளர் மற்றும் இயக்குநர், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர், தொடக்ககல்வி இயக்குநர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை 2 வாரம் தள்ளி வைத்தார்

Wednesday, June 25, 2014

ஆசிரியர்களின் திறனையும் ஆய்வு செய்து பள்ளிகளுக்கு 'கிரேடு' வழங்க திட்டம்


    படைப்பாற்றல் மற்றும் செயல்வழிக் கல்வி வகுப்புகளில், அரசு பள்ளி குழந்தைகளை மட்டுமின்றி, ஆசிரியர்களின் திறனையும் ஆய்வு செய்து, பள்ளிகளுக்கு 'கிரேடு' வழங்கும் முறையை செயல்படுத்த, திருப்பூர் மாவட்ட கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு கல்விச் செயல்பாடுகள், படைப்பாற்றல் கல்வி, கல்வி இணைச் செயல்பாடுகள், எளிய செயல்வழிக் கற்றல், எளிய படைப்பாற்றல் கல்வி உள்ளிட்ட கல்வி கற்பிக்கும் முறைகளை, அனைவருக்கும் கல்வி இயக்கத்தினர் ஆய்வு செய்கின்றனர்.

இதில், தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு என்னும் அடிப்படையில், ஏ,பி,சி,டி, என்ற கிரேடுகளை கல்வித்துறை மூலம், அரசு பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.நடப்பு கல்வியாண்டில், பள்ளிகளில் அனைத்து வகுப்புகளுக்கும் சேர்த்து, இக்கல்வி முறைகளை ஆய்வு செய்வதை காட்டிலும், வகுப்பு வாரியாகவும், பாட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட அனைவரிடத்தும், படைப்பாற்றல் மற்றும் செயல்வழிக் கல்வி முறைகள் குறித்து ஆய்வு நடத்தி, கிரேடு வழங்க திருப்பூர் மாவட்ட கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:

மாணவர்களின் கற்பனைத்திறன்களை வெளிப்படுத்தவும், பாடங்கள் எளிதில் மனதில் பதிய வேண்டிய செயல்வழி மற்றும் படைப்பாற்றல் கல்வி வகுப்புகள் முறையை பின்பற்றப்படுகிறது. இம்முறை முழுமையாக பயனுள்ளதாக இருக்க, ஆசிரியர்களும் இக்கல்வி முறைகள் குறித்து அறிந்திருக்கவும், பின்பற்றவும் வேண்டும். ஆசிரியர்களுக்கு பாடவாரியாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதன் செயல்பாடுகள் குறித்து பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

ஆசிரியர் பட்டய படிப்பு தேர்வு: புதிய முறையில் விடைத்தாள் தயாரிப்பு

ஆசிரியர் கல்வி மற்றும்பயிற்சி நிறுவன பட்டயப்படிப்பு மாணவர்களுக்கான தேர்வு துவங்க உள்ள நிலையில், 40 பக்கத்தில் விடைத்தாள் ஏடுகள் தைக்கும் பணி துவங்கி உள்ளது. தமிழக அரசின், மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும், அரசு மற்றும் தனியார் ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி பட்டயத்தேர்வு கடந்த 11ம் தேதி தேர்வு துவங்கும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் கடந்த 14ம்தேதி வி.ஏ.ஓ. தேர்வு நடந்ததால் இத்தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது.அதன்படி தொடக்கக் கல்வி பட்டய படிப்பின் இரண்டாம் ஆண்டுக்கு நாளை (26ம் தேதி) துவங்கி வரும் ஜூலை 3ம் தேதி வரை நடக்கிறது. முதலாம் ஆண்டுக்கு ஜூலை 7ம் தேதி துவங்கி 14ம் தேதி வரை நடக்கிறது. தேர்வுக்கான பணிகளை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் தீவிரப்படுத்தி உள்ளது.கடந்த, 2012-13ம் கல்வியாண்டில் தேர்வு நடந்தது போல் அல்லாமல், புதியமுறையில் நடப்பாண்டு தேர்வு நடத்தப்படுகிறது. அதில் 40 பக்கம் கொண்ட விடைத்தாள் முறை அறிமுகப்படுத்தப்படும். விடைத்தாள் குளறுபடிகள் ஏற்படாமல் இருக்க, பிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.ஸி. பொதுத் தேர்வில் பின்பற்றப்பட்ட விடைத்தாள் பராமரிக்கும் முறை, ஆசிரியர் பட்டயத் தேர்வுக்கும் பின்பற்றப்படும்.

இந்நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனங்களில் படித்த 2,053 மாணவ, மாணவியருக்கு விடைத்தாள் தைக்கும் பணி, நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் துவங்கி உள்ளது. முதல் பக்கம் டாப் சீட்டில், மாணவர் பற்றிய விபரங்கள், பார் கோடு வசதியுடன் பிரின்ட் செய்யப்பட்டுள்ளது.புதிய முறையில் விடைத்தாள் தயாரிக்கப்பட்டு, தேர்வு நடத்தப்படுவதால், எவ்வித குளறுபடி மற்றும் முறைகேடு நடக்க வாய்ப்பில்லை என கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tuesday, June 24, 2014

பாரதியார் பல்கலை: எம்.பில், பி.எச்டி, படிப்புக்கான சேர்க்கை

கோவை, பாரதியார் பல்கலைக்கழகத்தில், எம்.பில், பி.எச்டி.,(முழுநேர/பகுதிநேர) படிப்புக்கு சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பாரதியார் பல்கலைக்கழகத் துறைகளிலும், படலகலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளிலும் கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் உதகமண்டலம்)மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களிலும் அனுமதிக்கப்பட்ட எம்.பில், பி.எச்டி படிப்புக்கு மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் CET நுழைவுத்தேர்வு ஜூலை 6ம் நடத்தப்படுகிறது.

இத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். www.b-u.ac.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூலை 31ம் தேதி மாலை 5.30 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

பள்ளிகளில் 13 வகை புதிய விளையாட்டுகள்: உடற்கல்வி ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி

அரசு பள்ளிகளில் நடப்பு கல்வி ஆண்டில் 13 வகை புதிய விளையாட்டுகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதுகுறித்து உடற்கல்வி, இயக்குனர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தமிழக பள்ளி கல்வித்துறை உத்தரவு படி, தடகளம், ஹாக்கி, கால்பந்து, கைப்பந்து, கூடைப்பந்து, டென்னிஸ் உள்பட 40 வகை விளையாட்டுகள் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு கற்றுத்தரப்படுகிறது. இவற்றில் சில விளையாட்டுகளில் மட்டும் மாணவர்கள், தங்களது திறமைகளை வெளிப்படுத்த முடிகிறது. 20 விளையாட்டுகள் மட்டுமே, கல்லூரியில் சேரும்போது, மாணவர்களுக்கு தெரியவருகிறது.

இதனால், அனைத்து விளையாட்டுகளும், பள்ளி மாணவர்களுக்கு கற்று தர வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. இதன்படி ஜிம்னாஸ்டிக்ஸ், டேக்வாண்டோ, குத்துச்சண்டை, ஜூடோ, பென்சிங், சைக்கிளிங், பீச் வாலிபால், கேரம், செஸ், டென்னி காய்ட் உள்பட 13 வகை புதிய விளையாட்டுகளை நடப்பு கல்வி ஆண்டில் பள்ளி மாணவர்களுக்கு கற்றுத்தர முடிவு செய்யப்பட்டது. இந்த விளையாட்டுகள் குறித்து உடற்கல்வி ஆசிரியர்கள், இயக்குனர்களுக்கு சென்னை, கோவை, நாமக்கல், சேலம் உள்ளிட்ட இடங்களில் கடந்த வாரம் முதல் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. ஒரு விளையாட்டிற்கு மாவட்டத்திற்கு 5 உடற்கல்வி ஆசிரியர்கள், இயக்குனர்கள் வீதம் 65 பேருக்கு 3 நாள் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி முடிந்ததும் ஒரு மணி நேர தேர்வு நடத்தப்படுகிறது. இதில் 70 மதிப்பெண்களுக்கு மேல் எடுக்கும் ஆசிரியர்களுக்கு முதல் கிரேடு, 60 முதல் 70 மதிப்பெண் எடுக்கும் ஆசிரியர்களுக்கு 2 ம் கிரேடு, 50 மதிப்பெண் எடுத்தால் 3 ம் கிரேடு சான்றிதழ் வழங்கப்படுகிறது. சான்றிதழ் பெறும் ஆசிரியர்கள் மட்டுமே புதிய விளையாட்டுகளில் பயிற்சி அளிக்கவும், போட்டிகளின் போது நடுவர்களாக பணியாற்றவும் பள்ளி கல்வித்துறை மூலம் அனுமதிக்கப்பட உள்ளனர்.

Sunday, June 22, 2014

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வுக்கு மனிதநேய மையம் இலவச பயிற்சி;

மாணவர்களைத் தேர்ந்தெடுக்க நுழைவுத் தேர்வு
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வுக்கு மனிதநேய பயிற்சி மையம் இலவச பயிற்சி அளிக்கிறது. இதற்காக மாணவர்கள் நுழைவுத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

கட்டணமில்லா பயிற்சி
சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி, மனிதநேய கட்டணமில்லா பயிற்சி மையத்தை நடத்தி வருகிறார். இந்த மையம் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வு உள்பட பல்வேறு மத்திய, மாநில பணிகளுக்காக நடக்கும் தேர்வுகளில் மாணவர்கள் கலந்துகொள்ள இலவச பயிற்சி அளித்து வருகிறது.இந்த ஆண்டு வெளியிடப்பட்ட சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகளில், மனிதநேய மையத்தில் படித்த 46 பேர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். முதல்நிலை தேர்வுதொடர்ந்து அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் தேர்வுக்காக மாணவர்களுக்கு இந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் அடுத்த ஆண்டு மே மாதம் வரை முதல்நிலை தேர்வுக்காக இலவச பயிற்சி அளிக்கிறது.
இந்த பயிற்சியில் கலந்துகொள்ள தகுதியும், ஆர்வமுள்ள மாணவர்களை தேர்வு செய்ய, சென்னை, வேலூர், சேலம், ஈரோடு, கோவை, கரூர், திருச்சி, திண்டுக்கல், கன்னியாகுமரி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டத்தலைநகரங்களில் நுழைவுத்தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள்நுழைவுத் தேர்வு எழுதி அதிக மதிப்பெண்கள் பெறும் 2 ஆயிரம் மாணவர்களுக்கு கட்டணமில்லா பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த தேர்வுக்கான பாடத்திட்டத்தை மனிதநேய மையத்தின் இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளலாம். இந்த பயிற்சி வகுப்புக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் http://saidaiduraisamysmanidhaneyam.com/ என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி 22.7.2014 ஆகும். 23.7.2014 முதல் மாணவர்கள் தாங்கள் எந்த மாவட்டத்தில் தேர்வு எழுத விரும்புகிறார்களோ, அந்த மாவட்டங்களில் தேர்வு எழுத நுழைவுத்தேர்வுக்கான தங்களின் ஹால்டிக்கெட்டை மேலே குறிப்பிட்ட இணையதள முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்து, அதில் தங்களது சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை ஒட்டி, அரசு அதிகாரியிடம் கையெழுத்து பெறவேண்டும். அரசு அதிகாரியிடம் கையெழுத்து பெறமுடியாதவர்கள், தங்கள் புகைப்படம் உள்ள அடையாள அட்டையை ஹால்டிக்கெட்டுடன் கொண்டுவரவேண்டும். நுழைவுத்தேர்வு ஆகஸ்டு 3-ந் தேதி நடைபெறும். மேற்கண்ட தகவல்கள் மனிதநேய மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.