இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Sunday, August 16, 2015

ஒப்பந்ததாரர்களே சத்துணவு மையத்துக்கு நேரடியாக முட்டை வினியோகிக்கும் திட்டம்

தமிழகம் முழுவதும், சத்துணவு மையங்களுக்கு, டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர்களே நேரடியாக முட்டை வினியோகம் செய்யும் திட்டம், இந்த வாரம் முதல் அமலுக்கு வருகிறது. எடை குறைவாக இருந்தாலோ, புல்லட் முட்டையாக இருந்தாலோ, அவற்றை திருப்பி கொடுத்து விட வேண்டும். அவ்வாறான முட்டைகள், பள்ளியில் வழங்கப்பட்டால் அமைப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

தமிழகத்தில், 41 ஆயிரம் சத்துணவு மையங்கள் உள்ளன. 1.27 லட்சம் பணியாளர் இருக்க வேண்டிய நிலையில், 30 ஆயிரம் காலிப்பணியிடம் போக, 97 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். தொடக்க, நடுநிலை மற்றும் உயர்நிலைப்பள்ளியைச் சேர்ந்த, 55 லட்சம் மாணவ, மாணவியர் சத்துணவு சாப்பிடுகின்றனர். தற்போது கலவை சாதத்துடன் தினசரி முட்டை வழங்கப்பட்டு வருகிறது. முட்டை கொள்முதலை பொறுத்தமட்டில், சென்னையில் உள்ள சமூக நலத்துறை அலுவலகத்தில் மாநில அளவிலான டெண்டர் விடப்படுகிறது. இதில், பல்வேறு மாவட்ட கோழிப் பண்ணையாளர்களும் பங்கேற்பர். மாவட்ட வாரியாக டெண்டர் எடுத்தோர், செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில், அந்தந்த ஒன்றிய அலுவலகத்துக்கு முட்டையை அனுப்பி விட வேண்டும்.

அமைப்பாளர்கள் ஒவ்வொருவரும் ஒன்றிய அலுவலகம் சென்று, முட்டையை வாங்கிக்கொண்டு மையத்துக்கு செல்ல வேண்டும். சத்துணவு முட்டையானது, தலா, 46 முதல், 52 கிராம் வரை இருக்க வேண்டும். 12 முட்டைகளை ஒரே சமயத்தில் எடை போட்டால், 552 கிராம் இருக்க வேண்டும் என்ற விதி உள்ளது. இந்நிலையில், சத்துணவு முட்டையில் பல்வேறு ஊழல் நடந்திருப்பதாக கூறப்படுகிறது. அரசு மீது எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இதனால், முட்டை வினியோகத்தை நேரடியாக பண்ணையாளர்களே செய்வதற்கான உத்தரவை அரசு பிறப்பித்துள்ளது.

இந்த வாரம் முதல் இம்முறை அமலுக்கு வருகிறது. முட்டை வாங்கும்போது, அதன் எடை சரியாக உள்ளதா, சிறிய அளவிலான முட்டை உள்ளதா? என்பதை கவனித்து வாங்கினால் போதும். முட்டையில் குறைபாடு இருந்தால், சம்பந்தப்பட்ட பி.டி.ஓ.,விடம் தெரிவிக்கலாம். இதுகுறித்து, சத்துணவு பிரிவு அலுவலர் ஒருவர் கூறுகையில், ‘’பள்ளிகளுக்கு நேரடியாக முட்டை சப்ளை செய்யும் திட்டம் இந்த வாரம் அமல்படுத்தப்படுகிறது. ஒரு முட்டைக்கு, 15 காசு வீதம் போக்குவரத்து கட்டணத்தை அரசு வழங்குகிறது. அமைப்பாளர்களுக்கு இது பற்றிய தகவல் விரைவில் அறிவிக்கப்படும். சிவில் சப்ளைஸ் எவ்வாறு பொருள் வழங்குகின்றனரோ அதுபோல், முட்டை இனி சத்துணவு மையத்துக்கு வந்து சேரும். அவை சரியான எடையில் உள்ளதா, சிறிய முட்டையாக உள்ளதா? என்பதை பார்த்து வாங்க வேண்டும்.

தவறுதலாக வரும் பட்சத்தில் பி.டி.ஓ.,விடம் தகவல் தெரிவிக்க வேண்டும். இதற்கு முன், பி.டி.ஓ., அலுவலகத்தில் இருந்து வாங்கி வரும்போது, முட்டை சேதமாகும் நிலை ஏற்பட்டது. இதனால் அமைப்பாளர்கள் அவித்த முட்டைக்கு பதிலாக ஆம்லெட் போடவேண்டிய நிலை இருந்தது. இனி, அந்த நிலை இருக்காது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 1523 மையங்களுக்கும் இவ்வாறு நேரடியாக முட்டை சப்ளை செய்யப்படும்’’ என்றார்.

பி.இ. சேர்க்கை: வைப்புத்தொகையை திரும்பப் பெற விண்ணப்பிக்கலாம்

பொறியியல் இடங்களைத் தேர்வு செய்து, கல்லூரிகளில் சேராதவர்களிடமிருந்து வைப்புத்தொகையைத் திரும்பப் பெறுவதற்கான விண்ணப்பத்தை அண்ணா பல்கலைக்கழகம் வரவேற்றுள்ளது. பொறியியல் சேர்க்கையை அண்ணா பல்கலைக்கழகம் கடந்த ஜூன் 28 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வரை நடத்தியது. இதற்கு விண்ணப்பித்த மாணவர்கள் முன்வைப்புத் தொகையாக ரூ.5 ஆயிரம் செலுத்திவிட்டு, கலந்தாய்வில் பங்கேற்று இடங்களைத் தேர்வு செய்தனர்.

எஸ்.சி., எஸ்.டி., எஸ்.சி.ஏ. பிரிவினர் ரூ.1,000 முன்வைப்புத் தொகை செலுத்தினர். இவர்கள் கல்லூரிகளில் சேரும்போது, இந்த முன்வைப்புத் தொகையை கழித்துவிட்டு மீதித் தொகையை கல்விக் கட்டணமாகச் செலுத்தினால் போதுமானது. அவ்வாறு இடங்களைத் தேர்வு செய்த சிலர் பல்வேறு காரணங்களால் பி.இ. படிப்புகளில் சேர்வதைத் தவிர்த்திருப்பர். இவ்வாறு பொறியியல் கல்லூரிகளில் சேராதவர்களுக்கு பல்கலைக்கழகத்தில் செலுத்திய முன்வைப்புத் தொகையில் குறிப்பிட்ட சதவீதம் திருப்பி அளிக்கப்படும். அவ்வாறு கல்லூரிகளில் சேராதவர்களிடமிருந்து வைப்புத் தொகையைத் திரும்பப் பெற விண்ணப்பங்களை அண்ணா பல்கலைக்கழகம் வரவேற்றுள்ளது. இதற்கு w‌w‌w.‌t‌r‌e‌f.a‌n‌na‌u‌n‌i‌v.‌e‌d‌u இணையதளம் மூலம் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய ஆசிரியர்கள் அறிவியல் மாநாடு ஆய்வுக்கட்டுரை தலைப்பு அறிவிப்பு

எட்டாவது தேசிய ஆசிரியர்கள் அறிவியல் மாநாட்டில் பங்கேற்கும் ஆசிரியர்கள் சமர்ப்பிக்க வேண்டிய ஆய்வுக்கட்டுரைக்கான மையப் பொருள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செயலாளர் சுந்தர் கூறியதாவது:கணிதம் மற்றும் அறிவியல் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு புதிய கற்றல் முறைகளையும், அறிவியல் கல்விக்கான புதிய ஆலோசனைகளை வெளிப்படுத்தவும், பகிர்ந்து கொள்ளவுமான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக கடந்த 2003 முதல் மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை, தேசிய தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழு ஆகிய அமைப்புக்களால் தேசிய ஆசிரியர்கள் அறிவியல் மாநாடு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இந்த நிகழ்வை மாநில அளவில் ஒருங்கிணைத்து வருகிறது. இந்த ஆண்டிற்கான மையப் பொருளாக 'செயல்பாடுகளின் மூலம் அறிவியல் கற்றல்,' என்ற தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. துணைப் கருப்பொருள்களாக செலவில்லாத மற்றும் புதுமையான கற்றல் கற்பித்தல் கருவிகள், அறிவியல் தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகியவற்றை பள்ளிகளில் இருந்து சமூகத்திற்கு கொண்டு செல்வதில் எதிர்கொள்ளும் சவால்கள், சுயசார்பிற்கான அறிவியல், புதுமையான மதிப்பீட்டு உத்திகள், புதுமையான அறிவியல் தொழில்கல்வி ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிக்கும் போட்டியில் நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை ஆசிரியர்கள், கல்லுாரி பேராசிரியர்கள், அறிவியல் இயக்க நிர்வாகிகள், ஆசிரிய பயிற்றுனர்கள், விஞ்ஞானிகள் பங்கேற்கலாம்.

ஆய்வுச்சுருக்கம் மற்றும் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்ப வேண்டிய கடைசி தேதி செப்டம்பர் 5, ஆய்வுக் கட்டுரைகள் முடிவுகள் செப்டம்பர் 15 ல் வெளியிடப்படும். தேசிய அளவிலான மாநாடு டிசம்பரில் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெறும்.ஆய்வுக்கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி:

A.P.Deshpande, NationalConvenor, 8 th NTSC, c/o Marathi Vidnyan Parishad, Vidnyan Bhavan, V.N. Purav Marg, Sion-Chunabhatti (E), MUMBAI 400 022 E.mail : mvp@8thntsc.org indub.puri@nic.in

'எங்களை பதவி இறக்கம் செய்யுங்க': கெஞ்சும் தலைமை ஆசிரியர்கள்

பணப்பலன் காரணமாக தமிழகம் முழுவதும் 100 க்கும் மேற்பட்ட நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், தங்களை பதவி இறக்கம் செய்ய வேண்டுமென, தொடக்கக் கல்வித்துறையில் விண்ணப்பம் அளித்துள்ளனர்.

அரசு பள்ளிகளில் பணிபுரியும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ரூ.4,500 ம், பட்டதாரி ஆசிரியர்களுக்கு தரஊதியம் ரூ.4,600 ம், நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு ரூ.4,700 ம் வழங்கப்படுகிறது. ஊதிய முரண்பாட்டை களைய 2011 ல் அமைக்கப்பட்ட ஒருநபர் குழு 2009 மே 31 க்குள் 10 ஆண்டுகள் பணிபுரிந்து தேர்வுநிலை பெற்ற தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான தர ஊதியத்தை ரூ.5,400 ஆக உயர்த்தியது.

இந்த தர ஊதியம் நடுநிலைப் பள்ளி தலைமைஆசிரியர் தர ஊதியத்தை விட அதிகமாக உள்ளது. இதனால் 2009 மே 31 முன் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்ற 100க்கும் மேற்பட்டோர், தங்களை தொடக்கப் பள்ளி தலைமைஆசிரியர்களாக பதவி இறக்கம் செய்ய வேண்டுமென, தொடக்கக் கல்வித்துறையில் விண்ணப்பம் செய்துள்ளனர். அவர்களை பதவி இறக்கம் செய்ய தொடக்கக் கல்வித்துறை மறுத்துள்ளது. பாதிக்கப்பட்டோர் கூறியதாவது: மேல் பதவியை விட கீழ் பதவிக்கு ஊதியத்தை உயர்த்தியது கேலி கூத்தாக உள்ளது.

எங்களுக்கு பணப்பலன் பாதிக்கும் என்பதால் பதவி இறக்கம் செய்ய கேட்டுள்ளோம். நிதித்துறையின் விதிப்படி பதவிஇறக்கம் செய்ய வழிவகை உள்ளது. இதை கருத்தில் கொள்ளாமல் கல்வித்துறை அதிகாரிகள் பிடிவாதம் காட்டுகின்றனர், என்றனர்.கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “ மேல் பதவிகளில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்தால் கீழ் பதவிக்கு வர முடியாது,” என்றார்.

1,230 மேல்நிலை பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர்கள் நியமனம்

இடமாறுதல் கலந்தாய்வு மூலம், 1,230 அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு, புதிதாக தலைமை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். விரைவில், 50 மாவட்ட கல்வி அதிகாரிகள், பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன. ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு, 8ம் தேதி துவங்கியது. தொடக்கப்பள்ளி இயக்குனரகம் தனியாகவும், உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளை கண்காணிக்கும், பள்ளிக்கல்வி இயக்குனரகம் தனியாகவும், கலந்தாய்வை நடத்தி வருகின்றன.

ஒரு வாரமாக தொடரும் கலந்தாய்வில், மேல்நிலைப் பள்ளிகளில், 430 பேர் பதவி உயர்வு மூலமும், 800 தலைமை ஆசிரியர்கள் இடமாறுதல் மூலமும், 1,230 பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.இதுதவிர, பட்டதாரி ஆசிரியர்களிலிருந்து, உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வுக்கு, 360 இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களுக்கு, பதவி உயர்வு பட்டியலில், ஒன்று முதல், 450 பேர் வரையில் உள்ளவர்கள் பங்கேற்கலாம் என, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அறிவித்துள்ளார். இதேபோல், 50 மாவட்ட கல்வி அதிகாரி பணியிடங்களுக்கும், பட்டியல் தயார் செய்யப்பட்டு, அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அதேநேரம், தொடக்க கல்வியில், 45 உதவி தொடக்கக் கல்வி அதிகாரிகள் பணிகளில், 20 இடங்களே நிரம்பின; இன்னும், 25 இடங்கள் நிரப்பப்படவில்லை. இந்த இடங்களிலும், புதிய ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Saturday, August 15, 2015

தொடக்கக் கல்வி - பள்ளி வேலை நாளன்று நடைபெறும் பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்துகொள்ளும் தலைமையாசிரியர்கள் / ஆசிரியர்கள் முறையான தகவலை விண்ணப்பத்தின் மூலம் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்க இயக்குனர் உத்தரவு

தகுதித்தேர்வு நடக்காததால் ஆசிரியர்கள் அவதி

ஆறு மாதங்களுக்கு ஒரு முறை நடத்தப்பட வேண்டிய, ஆசிரியர் பணிக்கான, 'டெட்' தகுதித் தேர்வு, கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படாததால், 8 லட்சம் பட்டதாரிகள்
தவிப்புக்கு ஆளாகியுள்ளனர்; தனியார் பள்ளிகளில் கூட பணி கிடைக்காமல் கவலை அடைந்துள்ளனர்.

தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் அறிவுறுத்தலின் படி, தமிழகத்தில், 2010ல், டெட் தேர்வுக்கான நடைமுறைகள் துவங்கின. அப்போதைய, தி.மு.க., ஆட்சியில், டெட் தேர்வு நடத்தாமல், பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர் கள் நியமனம் நடந்தது.டெட் தேர்வு நடத்தாவிட்டால், ஆசிரியர்களுக்கு தரப்படும், 50 சதவீத ஊதிய மானியம் கிடைக்காது என, மத்திய அரசு
எச்சரித்தது. அ.திமு.க., ஆட்சிக்கு வந்ததும், 2012 முதல் டெட் தேர்வு கட்டாயம் எனவும், தேர்வில், 150க்கு 90 மதிப்பெண்கள் பெற்றால்தான் தேர்ச்சி எனவும் அறிவிக்கப்பட்டது.

வழக்கு:

முதல் தேர்வு, 2012 ஜூலையில் நடந்தது. அதில், ஆறு லட்சம் பேர் தேர்வு எழுதி, 2,000 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இதனால், தேர்வு நேரத்தை, ஒன்றரை மணி நேரத்திலிருந்து, மூன்று மணி நேரமாக மாற்றி, மறுதேர்வு நடத்தப்பட்டு, தேர்ச்சி பெற்ற, 15 ஆயிரம் பேருக்கும் வேலை கிடைத்தது.பின், 2013 ஆகஸ்டில், இரண்டாவது டெட் தேர்வு நடத்தி, தேர்ச்சிப் பட்டியல் வெளியான நிலையில், முன்னேறிய வகுப்பினர் தவிர, மற்ற வகுப்பினருக்கு, 5 சதவீத மதிப்பெண் தளர்வை அரசு அளித்தது.இதனால், 90 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற, 7,500 பேருக்கு பணி வாய்ப்பு மறுக்கப்பட்டு, 82 மதிப்பெண் பெற்றவர்கள் இட ஒதுக்கீட்டில் பணி வாய்ப்பு பெற்றனர். பாதிக்கப்பட்டோர், மதுரை உயர் நீதிமன்றக் கிளை மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்குகளில், இரண்டு இடங்களில் இரு வித தீர்ப்பு வந்ததால், வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு சென்று, இரண்டு ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. ஏற்கனவே தேர்ச்சி பெற்றவர்களும், மதிப்பெண் சலுகை பெற்றவர்களும் வேலைவாய்ப்பு பெறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இந்த வழக்கில், இரண்டு ஆண்டுகளுக்கு பின், கடந்த வாரம் தான், தமிழக அரசு விழித்துக் கொண்டு, மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்துள்ளது.இந்த பிரச்னைகளால், கடந்த இரண்டு ஆண்டுகளாக, ஆறு மாதங்களுக்கு ஒரு முறை நடத்த வேண்டிய, நான்கு, டெட் தேர்வுகளை, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., நடத்தவில்லை. இதனால், ஆசிரியர் பணியை நம்பி, பி.எட்., மற்றும் டி.எட்., படித்த ஏராளமானோர் வேலைக்காக காத்திருக்கின்றனர்.

கட்டாயம்:

தனியார் பள்ளிகளில் ஆசிரியராக சேரவும், டெட் தேர்வு கட்டாயம் என்பதால், டெட் தேர்வு எழுத முடியாத, ஏற்கனவே தேர்ச்சி பெறாதோர், குறைந்த சம்பளத்தில் தனியார் பள்ளிகளுக்கும் செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.தற்போதைய நிலவரப்படி, தமிழகத்தில் பல்வேறு படிப்புகளை முடித்து விட்டு பணிக்காக காத்திருக்கும், 90 லட்சம் பேரில், எட்டு லட்சம் பேர், ஆசிரியர் பணிக்கு படித்தவர்கள்.

இதுகுறித்து, தகுதித்தேர்வு தேர்ச்சி பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் உரிமைக் கழகத்தின் தலைவர், ஆர்.செல்லதுரை கூறியதாவது:அரசு சரியான கொள்கை முடிவு எடுக்காததாலும், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்குகளை முடிவுக்கு கொண்டு வர முயற்சிக்காததாலும், டெட் தேர்வு அறிவிப்பு கானல்நீராகி விட்டது.அதனால், ஆசிரியர் படிப்பு முடித்தவர்கள், தனியார் பள்ளிப் பணிக்கு செல்லக்கூட முடியாத சூழல் உள்ளது. மேலும், ஏற்கனவே அரசு அறிவித்தபடி, 90 மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு கூட, வேலைவாய்ப்பை வழங்காதது வேதனைக்குரியது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து, டி.ஆர்.பி., அதிகாரிகளிடம் கேட்ட போது, 'அரசு உத்தரவிட்டால், எப்போது வேண்டுமானாலும் டெட் தேர்வு நடத்தத் தயாராக உள்ளோம்,' என்றனர்.

8 லட்சம் பேர் யார்?

கடந்த முறை 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற முடியாத, 6 லட்சம் பேர், கடந்த, இரண்டு ஆண்டுகளில் பி.எட்., முடித்து உள்ள, 1.8 லட்சம் பேர்,
டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி முடித்த, 20 ஆயிரம் பேர் என, 8 லட்சம் பேர் காத்து இருப்போர் பட்டியலில் உள்ளனர். இவர்கள், டெட் தேர்வு அறிவிப்புக்காக காத்திருக்கின்றனர்.

ஆசிரியர்கள் சொல்வது என்ன?

''டெட் தேர்வு குறித்து, தமிழக அரசு நிபுணர் குழு அமைத்து விரைவில் முடிவெடுக்க வேண்டும். ஆசிரியர் காலியிடங்களை நிரப்ப, நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்கை விரைந்து முடிக்க வேண்டும். ஆண்டுதோறும், ஆசிரியர் காலியிடங்கள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தரம் உயரும் பள்ளிகளுக்கான ஆசிரியர்கள், பதவி உயர்வு பெறும் ஆசிரியர்கள், ஓய்வுபெறும் ஆசிரியர்கள் என, மூன்று வகைகளில், ஆண்டுக்கு, 10 ஆயிரம் இடங்கள் காலியாகின்றன. இவற்றில் காத்திருப்பில் உள்ள பட்டதாரிகளுக்கு வேலை அளிக்க வேண்டும். இதைவிட்டு, அரசு, இலவச திட்டங்களில் கவனம் செலுத்துவது கவலை அளிக்கிற

பி.எட்., படிக்க புதிய விதிமுறை

பி.எட்., படிப்புக்கான புதிய விதிமுறைகளை எதிர்த்து, தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை, நவம்பருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது. தேசிய ஆசிரியர் கல்விக் குழு, 2014ல்,ஆசிரியர் கல்வி தொடர்பாக, புதிய விதிமுறைகளை அமல்படுத்தியது. அதில், பி.எட்., - எம்.எட்., படிப்பை, ஓராண்டில் இருந்து இரண்டு ஆண்டுகளாக உயர்த்துதல், மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை குறைத்தல் உட்பட, பல அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

அத்துடன், 'புதிய விதிமுறைகளை, 21 நாட்களுக்குள் அமல்படுத்து வோம் என, கல்வியியல் கல்லுாரிகள் உத்தரவாதம் அளிக்க வேண்டும்' என, தேசிய ஆசிரியர் கல்விக் குழு கூறியது. ஆனால், 'புதிய விதிமுறைகளால், ஆசிரியர் கல்வி நிறுவனங்கள் பாதிக்கப்படும்; அவற்றை ரத்து செய்ய வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழ்நாடு சுயநிதி கல்வியியல் கல்லுாரி நிர்வாகிகள் சங்க தலைவர் விஜயகுமார் உள்ளிட்டோர் மனுக்கள் தாக்கல் செய்தனர். மனுக்களை விசாரித்த, தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி சிவஞானம் அடங்கிய அமர்வு, 'மனுக்களை நவம்பர், 2 மற்றும் 3ம் தேதி விசாரணைக்கு பட்டியலிட வேண்டும்' என, உத்தரவிட்டது.

மாசம் பொறந்தா சம்பளம் கேட்கிறார்கள் ஆசிரியர்கள்

மத்திய அரசு கல்வி திட்டங்களின் கீழ் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, ஊதியம் வழங்குவதில், தொடர்ந்து சிக்கல் காணப்படுகிறது. ஒவ்வொரு மாதமும், அரசு ஆணை பிறப்பித்த பின், ஊதியம் பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசு நிதி:மத்திய அரசு சார்பில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், அனைவருக்கும் கல்வி இயக்ககம் மற்றும் அனைவருக்கும் இடைநிலை கல்வி போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இவற்றை, தமிழக பள்ளிக்கல்வித் துறை வழியே செயல்படுத்த, மத்திய அரசு நிதி ஒதுக்குகிறது. இந்த திட்டத்தின் கீழ், ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டு, தொடக்கக் கல்வி மற்றும் பள்ளிக்கல்வி சார்பில், ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இதேபோல், தரம் உயர்த்தப்படும் பள்ளிகளும், இந்த திட்டங்களின் கீழ் கொண்டு வரப்பட்டு, அதன் ஆசிரியர்களுக்கு, மத்திய அரசு திட்டத்தின் கீழ், ஊதியம் வழங்கப்படுகிறது. அரசாணை:ஆனால், அந்த பணியிடங்கள் நிரந்தரமாக்கப்படாமல், ஒரு மாதம் முதல் ஆறு மாதங்கள் வரை, அவ்வப்போது புதுப்பிக்கப்படும் வகையில் உள்ளன. எனவே, ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு மாதமும், தனியாக அரசாணை பிறப்பித்த பின், கருவூலத்தில் இருந்து ஊதியம் வழங்கப்படுகிறது.இந்த அரசாணையை பிறப்பிக்க, ஒவ்வொரு மாதமும் காலதாமதம் ஏற்படுவதால், ஊதியம் வழங்குவதும் தாமதமாகிறது. தமிழக பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச் செயலர் பேட்ரிக் ரைமண்ட் கூறுகையில்,

''திருப்பூர் மாவட்டத்தில், ஒரு குறிப்பிட்ட பிரிவு ஆசிரியர்களுக்கு, கடந்த மாத ஊதியம், நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது,'' என்றார்.தமிழ்நாடு ஆசிரியர்முன்னேற்ற சங்க தலைவர் தியாகராஜன் கூறுகையில், ''மாதம் துவங்கும் முன், உரிய முறையில் ஆணை பிறப்பிக்காமல் காலம் தாழ்த்துகின்றனர். இதற்கு நிரந்தர தீர்வு காண, அரசு முன்வர வேண்டும்,'' என்றார்.

ஸ்காலர்ஷிப்'புக்கு புது 'வெப்சைட்'

மாணவ, மாணவியருக்கான கல்வி உதவித் தொகையை, வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்த, 'நேரடி கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டம்' மத்திய அரசால், துவங்கப்பட்டுள்ளது.இதற்காக, http://scholarships.gov.in/ என்ற இணையதளம் துவங்கப்பட்டுள்ளது. கல்வி உதவித் தொகை பெறும் மாணவர்கள், தங்களுடைய விவரங்களை, இதில் பதிவு செய்து கொள்ளலாம்.இந்த இணைய வசதியை, மாணவர்களுக்கு தெரியப்படுத்த, இணையதள முகவரி மற்றும் கல்வி உதவித் தொகை குறித்த முழு விவரங்களை, கல்லுாரி மற்றும் பல்கலை இணையதளத்தில் வெளியிட, யு.ஜி.சி., உத்தரவிட்டுஉள்ளது

அரசு பள்ளிகளில் தமிழில் 'மேப்' பிழைதிருத்தும் பணி நடக்கிறது

தமிழகத்தில் நில அளவை துறையினரால், மாநிலம், மாவட்டம் மற்றும் ஒன்றிய அளவிலான, 'மேப்' வெளியிடப்பட்டிருந்தாலும், அவை முழுவதும் ஆங்கிலத்தில் உள்ளன. இவை அனைத்து மாணவ, மாணவியருக்கும் சென்று சேர்வதில் சிக்கல் உள்ளது என்பதால், தமிழ் மொழியில், மேப் தயாரித்து, பள்ளிகளில் வைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்படி, ஒவ்வொரு ஒன்றியத்துக்கும் ஆங்கிலத்தில் உள்ள ஊர் பெயர், அதற்கு, அரசாணையில் உள்ள தமிழ் பெயர், பேச்சு வழக்கில் உள்ள ஊர் பெயர் ஆகியவற்றை சேகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக, ஒவ்வொரு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில், வரலாற்று ஆசிரியர்கள், நில அளவை அலுவலர்கள், உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் உள்ளிட்டவர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்கள், ஒவ்வொரு ஊரின் எல்லை, அதன் தமிழ் பெயர் உள்ளிட்டவற்றில் உள்ள பிழைதிருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இப்பணி நிறைவடைந்த பின், ஒவ்வொரு பள்ளிக்கும், தமிழில், மாநிலம், மாவட்டம் மற்றும் ஒன்றிய அளவிலான வரைப்படங்கள் வழங்கப்படும் என தெரிகிறது. இதன் மூலம், மாணவ, மாணவியர், தாங்கள் வசிக்கும் ஊர், அதை சுற்றியுள்ள கிராமங்களின் அமைப்பு உள்ள நில அமைப்புகளை தெளிவாக தெரிந்து கொள்ள முடியும் என, ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

தேசியக்கொடி சில துளிகள் !

நமது தேசியக் கொடி உருவாக்கத்தில் பலரின் பங்களிப்பு இருக்கிறது. மேடம் காமா எனப்படும் பைக்காஜி காமா, வீர சாவர்க்கர், விவேகானந்தரின் சிஷ்யை நிவேதிதா போன்றோரும் ஆரம்ப கால தேசியக் கொடியை வடிவமைத்திருக்கிறார்கள்.

1907 ஆகஸ்ட் மாதம், ஜெர்மனியில் நடந்த ஒரு மாநாட்டில், இந்தியாவுக்கான தேசியக் கொடி அறிமுகம் செய்யப்பட்டது.

1917-ஆம் ஆண்டு, பாலகங்காதர திலகரும் அன்னிபெசன்ட் அம்மையாரும் சேர்ந்து, 'சுயாட்சிப் போராட்டம்’ தொடங்கினர். அப்போது, அவர்கள் வடிவமைத்த தேசியக் கொடியின், இடது ஓரத்தில், பிரிட்டிஷ் கொடியும் சிறிய அளவில் இருந்தது. இதை, இந்திய சுதந்திரப் போராளிகள் பலரும் எதிர்த்ததால், விரைவிலேயே திரும்பப் பெறப்பட்டது.

தற்போதுள்ள தேசியக் கொடிக்கு ஆரம்பமாக அமைந்தது, 1921-ல் பிங்காலி வெங்கையா என்பவர் உருவாக்கிய கொடி. இதில் பச்சை மற்றும் சிவப்பு நிறங்கள் மட்டுமே இருந்தன. இது, இந்தியாவில் உள்ள இந்து மற்றும் இஸ்லாமியர்களைக் குறிப்பிட்டது.

மதத்தைக் குறிப்பிடாமல், அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் நமது தேசியக் கொடியில் சிறிய மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. 1931-ம் ஆண்டு நடந்த காங்கிரஸ் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, சிவப்பு, பச்சை நிறங்களுக்கு இடையில் வெள்ளை நிறம் சேர்க்கப்பட்டது. நூல் நூற்கும் கை ராட்டையும் இணைந்தது. ராட்டையின் சக்கரங்கள், நமது தேசிய முன்னேற்றத்தைக் குறிப்பிட்டது.

இந்தியா சுதந்திரம் பெற்றதும், 1947 ஆகஸ்ட் 15-ம் தேதி, மூவர்ண தேசியக் கொடி வான் நோக்கி கம்பீரமாக உயர்ந்தது.

காங்கிரஸ் கட்சியின் கொடியும் தேசியக் கொடியும் ஒரே மாதிரியாக இல்லாமல், வேறுபடுத்திக் காட்டுவதற்காக, ஒரு குழு அமைக்கப்பட்டது. ராஜேந்திர பிரசாத், ராஜாஜி, சரோஜினி நாயுடு, அம்பேத்கர் போன்றோர் அடங்கிய அந்தக் குழு, 1947 ஜூலை மாதம், தேசியக் கொடியை இறுதி செய்தது. கை ராட்டைக்குப் பதிலாக அசோகச் சக்கரம் சேர்க்கப்பட்டது.

தற்போதைய தேசியக் கொடியின் பொருள்... காவி நிறம், தைரியம் மற்றும் தியாகத்தைக் குறிக்கும். வெள்ளை நிறம், உண்மை மற்றும் தூய்மையைக் குறிக்கும். பச்சை நிறம், வளத்தைக் குறிக்கும். அசோகச் சக்கரம், நேர்மையைக் குறிக்கிறது.

Friday, August 14, 2015

தமிழகம் முழுவதும் 431 பேர் தலைமையாசிரியர்களாக பதவி உயர்வு

தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இணையவழி கலந்தாய்வில் 431 பேர் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களாக பதவி உயர்வு பெற்றனர். பள்ளிக் கல்வித் துறையின் கீழ் காலியாக இருந்த 450 மேல்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர் பணியிடங்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கலந்தாய்வில் பங்கேற்க முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள், உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களிலிருந்து பதவி உயர்வு முன்னுரிமைப் பட்டியலில் இடம்பெற்றிருந்தவர்கள் அழைக்கப்பட்டனர். கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டவர்களில் 19 பேர் பங்கேற்கவில்லை. இதையடுத்து 431 பேர் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்களாக பதவி உயர்வு பெற்றனர். அடுத்ததாக, உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வும், சிறப்பாசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் மாறும் கலந்தாய்வு ஆகியவை ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளதாக பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் தெரிவித்தார். பள்ளிக் கல்வி ஆசிரியர்கள், தலைமையாசிரியர்களுக்கான இடமாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு ஆகஸ்ட் 12-ஆம் தேதி தொடங்கியது.

பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு: ஆக.17-இல் மறுகூட்டல் முடிவுகள்

பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகளை ஆகஸ்ட் 17 முதல் அறிந்துகொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி:- பிளஸ் 2 மேல்நிலை சிறப்பு துணைத்தேர்வை 68,941 மாணவ, மாணவியர் எழுதினர். இதில் மறுகூட்டல், மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்த 424 பேருக்கான முடிவுகள் scan.tndge.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளன. திங்கள்கிழமை (ஆகஸ்ட் 17) காலை 11 மணிக்கு இந்த முடிவுகளை தேர்வர்கள் அறிந்துகொள்ளலாம். மறுகூட்டல், மறுமதிப்பீட்டில் 75 பேரின் மதிப்பெண்ணில் மாற்றம் உள்ளது. இந்தப் பட்டியலில் இடம்பெறாதவர்களின் மதிப்பெண்ணில் மாற்றமில்லை என தெரிவிக்கப்படுகிறது. மதிப்பெண் மாற்றமுள்ளவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.